Friday, October 14, 2016


கிண்டி தண்ணீர் லாரி விபத்து, கற்றுத் தரும் பாடம்!

சென்னை கிண்டி கத்திப்பாரா அருகே, இன்று தண்ணீர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவிகள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வழக்கம் போல லாரியை ஓட்டிய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

கிண்டி- கத்திபாரா மேம்பாலத்திற்கு அருகே உள்ளது செல்லம்மாள் மகளிர் கல்லூரி. இந்தக் கல்லூரி அருகே சாலையைக் கடக்க முயன்ற போதுதான் அந்த மாணவிகள் மீது தண்ணீர் லாரி மோதியது. விபத்தில் சிக்கி இறந்த மாணவிகள் சித்ரா, ஆயிஷா, காயத்ரி என்று தெரிய வந்துள்ளது. இவர்களின் உடல்கள், உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

இந்த விபத்தில் மாணவிகள் 3 பேர் உயிரிழந்தது தவிர, மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

விபத்தும், போக்குவரத்து சிக்னலும்...!

விபத்து நடந்த இடம், கிண்டி - கத்திப்பாரா சந்திப்புக்கு அருகே உள்ள ஸ்பிக் நிறுவனத்தை ஒட்டிய பகுதி. செல்லம்மாள் கல்லூரியில் இருந்து சரியாக 50- மீட்டர் தூரத்தில்தான் அந்த மாணவியர் விபத்தில் சிக்கி இறந்துள்ளனர். காலை எட்டுமணியளவில் தொடங்கும் செல்லம்மாள் கல்லூரிக்கு மாணவியர் ஏழுமணியில் இருந்தே வரத் தொடங்கி விடுவார்கள். அதே போன்று காலை நேரக் கல்லூரி மதிய வேளையில் முடிந்து விடும்.

மாணவியர் கல்லூரிக்கு வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் கூட்டமாக சாலையைக் கடப்பது அன்றாட நிகழ்வாகும். ஆனால், இந்தப் பகுதியில் அந்தளவுக்கு உரிய போக்குவரத்துப் போலீசார் பணியில் உள்ளனரா என்பதே கேள்விக் குறிதான். சம்பவ இடமான 'ஸ்பிக்' நிறுவனத்தை ஒட்டிய பாதை, மேம்பால முடிவில் வருகிறது. இந்த பாதைக்கு எதிர்புறம் ஒரு பாதையும், மற்ற இரு பாதைகளில் ஒன்று கிண்டி -சின்ன மலை, சைதாப் பேட்டை கோர்ட், ஆளுநர் மாளிகை, அடையார் என பிரியும் ஆறு வழிப் பாதையாகும். செல்லம்மாள் கல்லூரிக்குச் செல்லவோ, கல்லூரியில் இருந்து வெளியே வரவோ முயலும் மாணவிகள், அதற்கான போக்குவரத்து சிக்னல்கள் அருகில் இல்லாமையால், சிறிது தூரம் நடந்து சென்றே சாலையைக் கடக்கின்றனர், போக்குவரத்து சிக்னல் உதவியைப் பெறுகின்றனர். தற்போது, மூன்று உயிர்கள் அநியாயமாக பறி போய் இருக்கின்றன.

இனி போக்குவரத்து போலீசார் அங்கே எந்நேரமும் விறைப்பாக நின்று பணியை மேற்கொள்வர். சீறிவரும் தண்ணீர் லாரிகளைத் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்வர். சிக்னல் விளக்குகள் சரியாக வேலை செய்யும். வேகத்தடை, கல்லூரி அருகே உயரமாக அமைக்கப்பட்டு விடும்.மூன்று மாதமோ, ஆறு மாதமோ கழித்து அந்த தண்ணீர் லாரி ஓட்டுநரின், 'ஹெவி' ஓட்டுநர் உரிமம் திரும்ப அவரிடமே ஒப்படைக்கப்பட்டு விடும்.

தண்ணீர் லாரிகளால் விபத்து எப்படி நேர்கிறது?

தண்ணீர் லாரியை வேகமாக ஓட்டிக் கொண்டு வரும் போது, அவசரமாக பிரேக் பிடித்தால், லாரியில் இருக்கும் தண்ணீர், லாரியின் முன்னும், பின்னும் சென்று மோதிய பின்னரே நிற்கும். தண்ணீர் தளும்பும் போதுதான் விபத்து நேரிடுகிறது. அனுபவம் வாய்ந்த ஓட்டுநரே, தண்ணீர் லாரிகளில் பிரேக் பிடிக்கும் போது எப்படி பிடிக்க வேண்டும் என்ற பக்குவம் நிறைந்தவர்களாக இருப்பர்.

தண்ணீர் லாரிகளில் தண்ணீரை எடுத்துச் செல்வது போன்றதுதான் டேங்கர் லாரிகளில் திரவப் பொருளான ஆயில் மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றை கொண்டு செல்வதும். எண்ணெய் கொண்டுசெல்லும் இதுபோன்ற லாரிகள் பெருமளவில் விபத்தை ஏற்படுத்தி உயிர்களைப் பறிப்பதில்லை. இதற்குக் காரணம், அனுபவம் இல்லாத ஓட்டுநர்கள், ஆயில் டேங்கர் லாரிகளை ஓட்டுவதற்கு அனுமதிக்கப் படுவதில்லை என்பதே. ஆனால், ,தண்ணீர் லாரிகளை ஓட்டுபவர்களின், வயதோ, அனுபவமோ, கல்வியறிவோ ஏன் ஓட்டுநர் உரிமம் உள்ளதா என்பது பற்றி கூடத் கவலைப்படுவதில்லை ' என்ற நிலையை உடனடியாக மாற்ற உயிர்போகும் அவசரம்.

எந்த குற்றமும் செய்திராத மாணவிகளின் உயிரைப் பறித்தது யார் செய்த குற்றம் ?

தண்ணீர் லாரிகள் - ஒரு பார்வை

குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக தண்ணீர் லாரிகளின் பயன்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சென்னை குடிநீர் வாரியத்துக்காக இயக்கப் படும் அரசு 'வாரிய' லாரிகள், தனியார் லாரிகள் என இரண்டாயிரம் லாரிகள் வரையில் சென்னையில் மட்டுமே இயக்கப் படுகின்றன.தென் சென்னை வாழ் மக்களுக்கான தண்ணீரை மேடவாக்கம் முதல் திருப்போரூர் வரையில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் வழியாக எடுத்து வருவது இந்த லாரிகளின் மூலம்தான்.

வட சென்னை வாழ் மக்களுக்கான தண்ணீரை செந்நீர்குப்பம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளின் நிலத்தடி நீர் வழியாக எடுத்து வருவது இந்த லாரிகளின் மூலம்தான்.தண்ணீருக்காக தினமும் பத்து ட்ரிப் (சவாரி) களை அடிக்கும் லாரிகள், சென்னையிலிருந்து, காஞ்சிபுரத்தின் வெண்பேடு, ஈச்சங்காடு, காயாறு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்தும் நீரை உறிஞ்சிக் கொண்டு சென்னைக்கு வருகின்றன.புறநகர் சென்னையில் வருகிற திருமழிசை, காரனோடை போன்ற பகுதிகளில் இருந்தும் உரிய கட்டணம் செலுத்தி நீர் எடுக்கும் லாரிகள், ஓட்டுநர் கூலி, வண்டியின் டீசல், லாரி முதலாளிக்கான லாபம் என அனைத்தையும் கூட்டிக் கழித்து தண்ணீர் விற்பனையில் இறங்கியுள்ளன.

சென்னை குடிநீர் வாரியம், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.2,200 மற்றும் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு ரூ.1,200 மட்டும் வசூலிக்க அறிவுறுத்தியது.இந்த கட்டணம் மிகவும் குறைவு என்கிற லாரி உரிமையாளர்கள், "விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகை அதிகரித்துள்ளது, மேலும் அதிக தூரத்திலிருந்து தண்ணீரை எடுத்து வருவதால், வாடிக்கை யாளர்களிடம் அதிக பணம் வசூலிக்க வேண்டியுள்ளது"என்று எதிர்ப்பைத் தெரிவித்தனர்.பல்லாவரம் -துரைப்பாக்கம் ரேடியல் சாலை, ஜி.எஸ்.டி சாலைகளில் தண்ணீர் லாரிகளின் "சவாரி -டிரிப்" வேகத்தால் பொதுமக்கள் அலறுகிற நிலையை அந்தப் பகுதிகளில் அன்றாடம் காண முடியும்.

- ந.பா.சேதுராமன்

Dailyhunt

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024