Friday, October 21, 2016

ஆதார் விவரமும், கை ரேகையும் எதற்கு.. பர்சனல் தகவல்களை பறி கொடுக்கிறார்களா ஜியோ வாடிக்கையாளர்கள்? By: Veera Kumar Updated: Friday, October 21, 2016, 12:52 [IST]
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aadhaar-details-getting-free-jio-connection-265408.html

சென்னை: இலவசம் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால், இந்த மனிதர்கள் எத்தனையோ உரிமைகளை அடமானம் வைக்கிறார்கள். அதில் புதிதாக சேர்ந்திருப்பதுதான், தனிமனித தகவல் தகவல்களை பங்குபோடும் ஜியோ. அழைப்புகள், இணையம் அனைத்தும் இலவசம் என்றதும் ஜியோ சிம் வாங்க நீண்ட வரிசையில் மக்கள் முண்டியடிக்கிறார்கள். வாக்களிப்பு நாளில் கூட வரிசையில் நிற்காத மக்கள், சிம் கடைகள் முன்பாக டிராபிக் ஜாமை உண்டு செய்தது நமது சம கால சோகங்களில் ஒன்று.

இவ்வளவு முண்டியடித்து, வாங்கப்படும் சிம் கார்டுகாக்க நமது அடிப்படை உரிமையை இழக்கிறோம் என்று என்றாவது நினைத்து பார்த்ததுண்டா. இந்தியாவில் உள்ள சில வங்கிகள் வழங்கிய ஏ.டி.எம். அட்டைகள், இணையதள மோசடி கும்பலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகி இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ள இந்த சூழலில் இக்கேள்வி அவசியமாகிறது. ஆதார் கார்டு இல்லாமல் மற்ற சான்றிதழ்களான ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை போன்றவற்றை சமர்ப்பித்தால் சிம் செயல்படுத்த இரண்டிலிருந்து மூன்று நாட்கள் ஆகும். ஆனால் ஆதார் கார்டை சமர்ப்பித்தால் 15 நிமிடத்தில் சிம் கார்டு செயல்படுத்தப்படுகிறது. இ ஆதார் கார்டு மூலமாக்கூட இந்த சிம் கார்டை வாங்கலாம் என முதலில் கூறியிருந்தனர். 

இதை நம்பி, சென்றவர்களை திருப்பியனுப்பிவிட்டன பல கடைகள். பாஸ்போர்ட் ஆபீஸ்களில் கூட இ ஆதார் ஏற்கப்படும் சூழலில், ஏன் ஒரிஜினல் ஆதார் கார்டை ஒரு சிம் கார்டு நிறுவனம் கேட்கிறது என்பதை கூட யோசிக்காமல், ஆதார் அட்டையோடு அலைபாய்ந்து செல்கிறார்கள் இளைஞர்கள். இதன் பின்னணி இதுதான்: ஜியோ சிம் வாங்க விரும்பும் ஒருவரின் ஆதார் எண் மற்றும் அவரது கைவிரல் ரேகையை கணினியில் பதிவு செய்து, அதை ஆதார் விவரங்களுடன் சரிபார்த்த பின்னரே சிம் வினியோகம் செய்யப்படுகிறது. மத்திய அரசிடம் மிகவும் பாதுகாப்பாக உள்ள நம்முடைய ஆதார் விவரங்கள், ஜியோ நிர்வாகத்தால் எப்படி ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது என்ற கேள்வி இதுவரை எழவில்லை? நாட்டு மக்களின் ஆதார் விவரங்கள் யாருக்கும் பகிரப்படாது என்பது மத்திய அரசின் வாதம். சுப்ரீம் கோர்ட்டிலும் அரசு இதையே கூறியுள்ளது. ஆனால், அந்த விவரங்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கீழ் வரும் ஜியோவுக்கு கிடைத்தது எப்படி? ரிலையன்ஸிடம் இருக்கும் மத்திய அரசின் ஆதார் விவரங்களுடன், நம்முடைய கைவிரல் ரேகையை ஒப்பிட்டு சரிபார்த்து ஜியோ சிம் வழங்கப்படுகிறது என்ற சந்தேகம் அதிகரித்துள்ள நிலையில் அதை மத்திய அரசு விளக்கவில்லை.

 மிகப்பெரிய தனியார் நிறுவனத்திற்கு, ஆதார் எண் விவரங்கள் அனைத்தையும் மத்திய அரசு அளித்திருந்தால், அது வாக்குறுதிக்கு எதிரானது மற்றும் மக்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானது. நாட்டின் பாதுகாப்புக்கே கூட எதிராக முடியலாம், முகேஷ் அம்பானியின், ஜியோ விளம்பரத்தில் சிரித்தபடி போஸ் கொடுத்த பிரதமரின் செயலே சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், ஆதார் தகவல்களை ஜியோ எப்படி ஒப்பிட்டு பார்க்கிறது என்பது பொருத்திப்பார்க்கப்பட வேண்டியுள்ளது. இந்த தகவலை தொடர்ந்துதான், இலவச கால் கூட வேண்டாம் என்று பல வாடிக்கையாளர்கள் இன்னமும் ஜியோ சிம் கார்டை வாங்காமல் இருக்கிறார்கள். 

ஆனால் கவர்ச்சி விளம்பரத்தால் கவரப்பட்ட ஒரு கோடிக்கும் மேற்பட்டோர், தங்கள் பர்சனல் டேட்டாக்களை வழங்கி, ஜியோ சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/aadhaar-details-getting-free-jio-connection-265408.html

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024