Thursday, October 27, 2016

கம்ப்யூட்டரும் குழந்தை மாதிரி தான்... 

By ஜெ. வீரநாதன்  |   Last Updated on : 26th October 2016 05:37 PM  |   அ+அ அ-   |  
இருபதாம் நூற்றாண்டு கொடுத்த அறிவியல் படைப்புகளில் தலைசிறந்ததாகத் திகழ்வது கணினி தொழில்நுட்பமே. மேசைக் கணினி, மடிக்கணினி, உள்ளங்கைக் கணினி ஆகிய நேரடியான கணிப்பொறிகள் மட்டுமல்லாது, கணினியைவிட மேம்பட்டதாக உருவாக்கப்பட்டு கிடைக்கும் திறன்பேசியும் கணினி தொழில்நுட்பத்திலேயே இயங்குகின்றன. இந்தக் கருவிகளை விலைகொடுத்து வாங்குவது இன்று மிக எளிதாகிவிட்டது. 

 இதனால் இன்று குடிசை வீடு முதல் அடுக்கு மாடிக் குடியிருப்பு வரையிலும் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன, கணினி தொழில்நுட்பத்தால் இயங்கும் மின்னணுக் கருவிகள்.

 குறிப்பாக, மேசைக் கணினி மற்றும் மடிக்கணினிகளின் பராமரிப்பு பற்றிச் சொல்ல வேண்டும். எளிதாக வாங்கும் இந்தக் கருவிகளைப் பராமரிப்பது என்பது மிக எளிதாக மறந்துவிடுகின்ற செயலாகவே இருக்கின்றது. சரியாகச் சொல்வதென்றால் இந்தக் கருவிகளுக்குப் பராமரிப்பு என்பது தேவையற்றதாகவே கருதப்படுகிறது. இதன் விளைவு, மிகவும் அவசரமான, அதிகத் தேவையுள்ள நேரத்தில் இந்தக் கருவிகள் செயலற்றுப் போய்விடுகின்றன. அதனால் தேவையற்ற மன உளைச்சல் ஏற்படுகிறது. 
 கணினிகளை வன்பொருள் மற்றும் மென்பொருள் என்ற இரண்டு வகைகளின் அடிப்படையில் பராமரிக்க வேண்டும். அப்படிப் பராமரிப்பதைப் பழக்கத்தில் கொண்டுவந்துவிட்டால் மிகவும் எளிதாகப் போய்விடும்.
இதனை, தினசரி, வாரம், மாதம் என்று குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுத்த வேண்டியனவாகப் பிரித்து வைத்துக் கொண்டு தவறாமல் செயல்படுத்த வேண்டும். இவற்றிற்காக செலவு என்பது நேரம் மட்டுமே. பொருளாக ஏதும் தேவையில்லை என்றே சொல்லலாம். அவற்றை இங்கு காணலாம். 
தினசரி செய்ய வேண்டியவை 
கணினி திரையை உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள்.
கணினியைச் சுற்றியுள்ள இடத்தைத் தூய்மைப்படுத்துங்கள்.
சிபியூ, மவுஸ் மற்றும் விசைப்பலகையையும் உலர்ந்த துணியால் துடைத்துத் தூய்மைப்படுத்துங்கள்.
தேவையென்றால் இதற்கென பிரத்யேகமாக திரவ நிலையில் கிடைக்கும் க்ளீனர்களையும் பயன்படுத்தலாம்.
வாரம் ஒரு முறை  குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டியவை 
டிஸ்க் ஸ்கேன் செய்யவும்.
டிஸ்க் க்ளீன் செய்யவும்.
தேவையெனில், தினசரி தொடர்ந்து நிறைய ஃபைல்களைக் கையாண்டிருந்தால், டிஸ்க் டிஃப்ராக்மென்ட் செய்யவும்.
தேவையான ஃபைல்களை பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ரீசைக்கிள் பின்னை காலி செய்யவும்.
தேவையற்ற ஃபைல்களை டெலிட் செய்யவும். குறிப்பாக தேவையற்ற மின்னஞ்சல்களை நீக்கிவிடவும்.
ஆன்டி வைரஸ் மென்பொருளை அன்றைய தினத்தின் அளவிற்கு அப்டேட் செய்யவும்.
ஆன்டி வைரஸ் மென்பொருளை செயல்படுத்தி கணினியின் அனைத்து பகுதிகளையும் தூய்மை செய்யவும்.
மாதம் ஒரு முறை செயல்படுத்த வேண்டியவை 
தேவையற்ற, பயனற்ற மென்பொருட்களை ஆய்ந்தறிந்து நீக்கிவிடவும்.
மவுஸின் அடிப்பகுதியைத் தூய்மைபடுத்தவும்.
விசைப்பலகையின் விசைகளுக்குக் கீழ் பகுதியை தூய்மைப்படுத்தவும்.
கணினிக்கான மின் இணைப்புகள் உள்ளிட்டவற்றைச் சோதித்து அறியவும்.
காலாண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டிய தூய்மைப் பணிகள் 
டெஸ்க் டாப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள ஃபைல்கள், ஃபோல்டர்களை டிஸ்கிற்கு மாற்றவும். தேவையற்றனவாயின் டெலிட் செய்துவிடவும்.
பாஸ்வேர்டு சொற்களை மாற்றியமைக்கவும்.
சிபியூ உள்ளிட்ட வன்பொருட்களைத் தூய்மைப்படுத்தவும்.
கணினியின் ஹார்டிஸ்க்கின் சி டிரைவை மூன்று அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை ஃபார்மேட் செய்து கொள்ளவும்.
ஆண்டிற்கு ஒரு முறை செய்ய வேண்டியவை 
உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள ஆன்டி வைரஸ் உள்ளிட்ட மென்பொருட்களின் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளவும்.
பேக்கப்பில் சேர்த்து வைத்துள்ளவற்றைச் சோதித்து, அதில் உள்ள தேவையற்றவற்றை டெலிட் செய்யவும்.
Prevention is better than cure... என்பது கவனத்தில் கொள்ளப்பட்டால் நடைமுறையில் பல தொல்லைகளிலிருந்து விடுபடலாம். கணினி பராமரிப்பில் இது முதல் நிலையில் மனதில் வைத்திருந்து செயல்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024