பல்கலைகளுக்கு சர்வதேச அந்தஸ்து :அக்., 28க்குள் கருத்து தெரிவிக்கலாம்
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு, சர்வதேச தர அந்தஸ்து வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வரும், 28க்குள் கருத்துகளை அனுப்பலாம்.நாடு முழுவதும், 20 பல்கலைகளை முதலில் தேர்வு செய்து, அவற்றை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்தும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான செயல் வடிவ அறிக்கையை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.
அதில், மத்திய, மாநில அரசுகளின் பல்கலைகள், ஐ.ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில், 20 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச அந்தஸ்து வழங்கப்படும் என்றும், அதற்காக, தனித்தனியே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சர்வதேச அந்தஸ்து பெற கல்வி நிறுவனங்கள், சர்வதேச அளவிலான தொழில்நுட்பம், நுாலக வசதி கொண்டிருக்க வேண்டும். மேம்பட்ட உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி பிரிவுகள் இருக்க வேண்டும். உலக அளவில் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி இதழ்களின் தொடர்பும், சர்வதேச அளவில் சிறந்த பேராசிரியர்களின் பயிற்சியும் இருக்க வேண்டும்.
செயல்வடிவ அறிக்கையில் உள்ள அம்சங்களை கல்வியாளர்கள், பொதுமக்கள், கல்வித்துறையினர் படித்து, wci-mhrd@oov.in என்ற இணையதள முகவரியில், வரும், 28க்குள் கருத்துகளை தெரிவிக்கலாம்.- நமது நிருபர் -
No comments:
Post a Comment