Sunday, October 30, 2016


விழிப்புடன் இருப்போம்!

By ஆசிரியர் | Last Updated on : 29th October 2016 12:35 AM |

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி அதன்மூலம் ஆட்சியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வந்திருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்த மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இதன் தாக்கத்தைப் பார்த்து பயந்து மாற்றங்களைச் செய்ய முற்பட்டது. நல்லவேளையாக, பொதுநல ஆர்வலர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால் அந்த முயற்சி தடைபட்டது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்த பிறகு, தகவல் பெறும் உரிமைச் சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்த்தால், இந்த ஆட்சியும் அதிலுள்ள சிறு சிறு குறைகளைப் பெரிதுபடுத்த முயற்சிக்கிறதே தவிர, அதற்கு வலுசேர்ப்பதாக இல்லை. இந்தப் பிரச்னையில் காங்கிரஸும், பா.ஜ.க.வும் ஒரேமாதிரியான நிலைப்பாட்டைத்தான் கடைப்பிடிக்கின்றன.
தகவல் பெறும் உரிமைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிற அதிகாரவர்க்கத்தின் குரலை அரசியல்வாதிகளும் பிரதிபலிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்தப் பிரச்னையை மாநிலங்களவையில் எழுப்பியவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,மத்திய விமான போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சருமான பிரபுல் படேல். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் அரசு திருத்தங்கள் கொண்டு வருமா என்று பிரச்னையைக் கிளப்பினார் அவர்.
இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் அவர்.
2005-ஆம் ஆண்டு அவசர கதியில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியதாகவும், அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். எந்தவொரு தகுதியோ, பின்னணியோ இல்லாதவர்கள்கூட இந்தச் சட்டத்தை பயன்படுத்திக் கேள்வி எழுப்ப தகவல் பெறும் உரிமைச் சட்டம் அனுமதிக்கிறது என்றும், அதனால் அதிகாரிகள் எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அவரை வழிமொழிந்து காங்கிரஸ் உறுப்பினர் ராஜீவ் சுக்லா, சிலர் தங்களை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் என்று கூறிக்கொள்வதாகவும், அதையே தொழிலாக மாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதைப் பிரதமர் அலுவலக இணையமைச்சராக இருக்கும் ஜிதேந்திர சிங் ஆமோதிக்கவும் செய்தார். இதிலிருந்து ஆளும் பா.ஜ.க.வும், ஆட்சியிலிருந்த காங்கிரஸும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பது தெரிகிறது.

தனிநபர் குறித்த விவரங்களைக் கோருவது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காகத் தங்களுக்கு எதிரான அதிகாரிகள், ஆட்சியாளர்கள் குறித்த தேவையற்ற கேள்விகளை எழுப்புவது, தேசியப் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புவது என்பவை இல்லாமல் இல்லை. ஆனால், ஏறத்தாழ, 20 லட்சம் தகவல்கள் கோரப்படும் நிலையில், இவற்றின் அளவு அதில் 10 சதவீதம்கூட இருக்காது. அதைச் சாக்காக வைத்துத் தகவல் பெறும் உரிமைச் சட்டமே தேவையற்றது என்றோ, அதில் மாற்றங்கள் கொண்டுவந்து பலவீனப்படுத்துவது என்பதோ நியாயமல்ல.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், கடந்த மாதம் மத்திய தகவல் ஆணையத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் அம்ரித் மஹால் கவல் பசுமைவெளி அமைந்திருக்கிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் பெற்ற இந்தப் பகுதியில் தேசிய பசுமை ஆணையத்தின் வரைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்கிற கேள்வியை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர் ஒருவர் எழுப்பினார். இதற்கு, இந்தக் கேள்வி தேசியப் பாதுகாப்புத் தொடர்பானது என்று கூறி பதில்தர மறுத்துவிட்டனர் அதிகாரிகள். இதுபோல தேசியப் பாதுகாப்பு, தனிநபர் விவரம் என்று கூறி, போதிய கவனம் இல்லாமல் கேள்விகள் நிராகரிக்கப்படுவதை மத்தியத் தகவல் ஆணையம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.

இந்திய ஜனநாயகத்தின் செயல்பாடுகளில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. சாமானியக் குடிமகனுக்கு, தனது வரிப்பணம் எப்படி செலவிடப்படுகிறது, தனது வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளும், தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் மக்களின் வரிப்பணம், பள்ளிக்கூடங்கள், சாலைகள், மருத்துவமனைகள் ஆகியவற்றில் விரயம் செய்யப்பட்டால் அதைத் தெரிந்துகொள்ள இந்தச் சட்டம் உதவியிருக்கிறது.

பொதுவிநியோகக் கடைகளில் நடக்கும் தவறுகள், அரசு அலுவலகங்களில் கையூட்டுத் தரப்படாததால் தேங்கிக் கிடக்கும் கோப்புகள் குறித்த விவரங்கள் போன்றவை தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்களால் வெளிக்கொணரப்பட்டு, தவறுகள் தடுக்கப்பட்டிருக்கின்றன. மிகப்பெரிய நிதிமோசடிகள், நிலம் ஒதுக்குவதில் முறைகேடுகள், உணவுப் பொருள் பதுக்கல்கள், கருப்புச் சந்தை விவரங்கள் போன்றவை வெளிவருவதற்கு தகவல் பெறும் உரிமைச் சட்டம் பயன்பட்டிருக்கிறது.

ஆட்சியிலும், நிர்வாகத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்ட உலகிற்கே முன்மாதிரியான தகவல் பெறும் உரிமைச் சட்டம், வலுப்படுத்தப்பட வேண்டுமே தவிர, சில குறைகளை முன்வைத்து பலவீனப்படுத்தப்படக் கூடாது. அதற்கான முயற்சிகளை முறியடித்து மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்!

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...