Friday, October 21, 2016


வலைதள அடிமைகள்
By மன். முருகன் | Last Updated on : 21st October 2016 02:16 AM |

என்னுடைய முகநூல் பக்கத்தில் ஏராளமான நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் நோய் வந்து படுத்தபோது, என் மனைவியும் அம்மாவும் மட்டுமே அருகில் இருந்தார்கள்' என்றொரு வாசகத்தை அண்மையில் படிக்க நேர்ந்தது.

உண்மையில் இதுதான் இணைய உலகின் யதார்த்தம். முகநூல், சுட்டுரை, கட்செவி அஞ்சல் உள்ளிட்டவற்றில் தினந்தோறும் ஆயிரம் செய்திகள் படிக்கிறோம். நம் பிறந்த நாள் என்றால் முகமறியா யார் யாரோ நம் பக்கத்துக்கு வந்து வாழ்த்துகளைக் குவிக்கிறார்கள்.

யாரவர்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? வருவார்கள், போவார்கள் அவ்வளவுதான். பார்க்காமலே நட்பு பூணுவதற்கு நாமென்ன கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாருமா?

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு - என்கிறார் வள்ளுவர். முகநூல் நட்பு முகநக நட்பதுதானே? அந்த நட்பால் விளைவது என்ன? "டைம் பாஸ்' என்பார்களே அந்தப் பொழுதுபோக்குதானே?

இவ்வாறான நட்புலகில் இருந்து என்னவிதமான படிப்பினைகளைப் பெறுகிறோம்? அதிலுள்ள உண்மைத் தன்மை என்ன? அதனால் பயன்தான் என்ன? எதையும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை.

ஒரு குழுவில் பகிரப்படும் செய்தி, பகிரப்பட்டவருக்கே மீண்டும் புதிய செய்தியாக வரும் விசித்திரம் நடந்தேறும் உலகமது.

அதேநேரம் இவையெல்லாம் தவறென்று சொல்ல வரவில்லை. நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அது காலத்தின் தேவைதான்.

ஆனால், இந்த சமூக ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் பெறும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

இந்தியாவில் சுமார் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் அறிதிறன் பேசி (ஸ்மார்ட் போன்) வழியாக இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக முகநூல், கட்செவி அஞ்சல் ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இதனால் அவர்களுக்குப் பல்வேறு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதில் முக்கிய பிரச்னையாக இருப்பது தூக்கமின்மை.

அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியில் மருத்துவமனையில் ஒரு இளைஞனிடம், "என்ன பிரச்னை?' என நாயகன் கேட்க, "தூக்கம் வராது' என்பான் இளைஞன். "நைட்லையா?' என்றால், "எப்பவுமே' என்பான். அப்போது அந்த இளைஞன் தனது அறிதிறன் பேசியில் மூழ்கியிருப்பதாகக் காட்டப்படும்.

அறிதிறன் பேசிகள் இளைஞர்களின் தூக்கத்தை கெடுப்பதோடு மட்டுமல்ல, இருதயக் கோளாறு, மன ரீதியான பிரச்னைகளை அதிகம் ஏற்படுத்துவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இளைஞர்களைக் குறிவைக்கும் செல்லிடப்பேசி நிறுவனங்கள், அவர்களின் இரவு நேரத்தைத்தான் களவாடுகின்றன. இரவு முழுவதும் அறிதிறன் பேசி வழியாக கருத்து கந்தசாமிகளாக மாறும் இளம் தலைமுறையினர் பகற்

பொழுதைத் தள்ளாட்டத்துடன் கடக்

கிறார்கள்.

மது போதை, தொலைக்காட்சித் தொடர் போதைபோல, இன்றைய இளைஞர்கள் சமூக வலைதள போதைக்கு அடிமையாகியுள்ளனர்.

இரவு எட்டு மணிக்கு உணவுண்டு, கதை பேசிக் கொண்டே தூங்கிப்போன காலம் ஒன்றிருந்தது. கிராமத்தில் இன்றும்கூட அவ்வாறு உறங்கி, காலை 5 மணிக்குள் எழும் வாழ்க்கைமுறை தொடரத்தான் செய்கிறது.

நகரத்தில் அப்படியான வாழ்க்கை முறை இல்லை. நள்ளிரவைத் தாண்டியும் தூங்காமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது இணையச் செயல்பாடுகள் எல்லோர் கையிலும் அறிதிறன் பேசி வழியாக வந்தபிறகு, தூக்கம் என்பது குறைந்துவிட்டது.

விடிய விடிய கண் விழித்து கிடக்கும் நிலையை அறிதிறன் பேசிகள் வழங்கியிருக்கின்றன. இதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளாகப் புதிது புதிதாக நோய்கள் பெருகியிருக்கின்றன. குறிப்பாக, தூக்கமின்மை நோய் அதிக அளவில் இளைஞர்களையும் இளம் பெண்களையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.

இளம் வயதினர் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் அறிதிறன் பேசியில் மூழ்கிக் கிடக்கிறார்கள். சமுக வலைதளங்கள், வலைப்பின்னல்போல அனைவரையும் பின்னிப் பிணைத்துள்ளது.

இயற்கைக்கு மாறாக உடலின் விதிகளை மாற்றுவதால், அதாவது இரவில் தூக்கத்தைத் தொலைப்பதால், மெலட்டோனின் உள்ளிட்ட சில முக்கியமான ஹார்மோன்கள் மனித உடலில் சுரப்பது குறைகிறது. இதனால் உடலின் சீர்நிலை திரிந்து, நோய்கள் வர வாய்ப்பு ஏற்படுகிறது.

இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு, அறிதிறன் பேசி வெளிச்சத்தில் இணைய உலகில் சரிக்கும்போது, போனில் இருந்து வரும் வெளிச்சம் கண் நரம்புகளையும், மூளையையும் நேரடியாகப் பாதிக்கிறதாம். மேலும் அது, தூக்கத்தைக் கெடுக்கும் என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

தவிர்க்க முடியாமல் இரவு நேரத்தில் வேலை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தேவையில்லாமல் இரவு உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டு, அறிதிறன் பேசிகளில் மூழ்கியிருப்பது ஆபத்தைத்தான் வரவழைக்கும் என்பதை இளைய தலைமுறையினர் உணர வேண்டும்.

மாய உலக இணைய நண்பர்களுக்காக லைக் போடுதலும், கமெண்ட்கள் எழுதுவதும் தேவையற்றது என்பதை உணர வேண்டும். தேவைக்காகப் பயன்படுத்தும்போதுதான் அறிவியல் வரம். இல்லையேல் அதுவே பெருஞ்சாபம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024