Tuesday, October 25, 2016

தொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லை வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ்.சில் வாழ்த்து பரிமாற்றம்

சென்னை,

தொழில்நுட்ப புரட்சியால் தீபாவளி வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லை. மாறாக வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்துகள் பரிமாற்றம் நடந்து வருகிறது.

தீபாவளி வாழ்த்து அட்டை

அன்னையர் தினம், தந்தையர் தினம், ஆசிரியர் தினம், மற்றும் பண்டிகைகள், பிறந்தநாட்களில் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், நண்பர்களுக்கும் தங்களுடைய அன்பையும், மரியாதையையும் தெரிவிக்கும் வகையில் வாழ்த்து அட்டைகளை அனுப்பும் பழக்கம் இருந்து வருகிறது.

தொழில்நுட்ப புரட்சியால் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் வழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து மறைந்து வருகிறது. வாழ்த்து அட்டைகளை வாங்கி அவற்றுக்கான தபால் தலைகளை ஒட்டி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட காலம் போய், தற்போது செல்போன் மூலம் வாழ்த்துகளை பதிவு செய்து, யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய செல்போன் எண்களுக்கு வாழ்த்துகளை விரைவாக அனுப்பும் பழக்கம் வந்து விட்டது.

வாழ்த்துக்காக ரீசார்ஜ்

தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் வாட்ஸ்–அப், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக வாழ்த்துகளை அனுப்பும் பரிமாற்றம் அதிகரித்து வருகிறது. வாழ்த்து அனுப்புவதற்கு தபால் உறைகள், தபால் தலைகள் வாங்குவதற்கு தபால் துறைக்கு செலவழிக்கும் தொகை தற்போது செல்போன் ரீசார்ஜ் செய்ய தொலைபேசி துறைக்கு செலவழிக்கும் நிலைக்கு மாறி உள்ளோம்.

வாழ்த்துகள் அனுப்புவதற்கு செலவிடப்படும் துறைகள் தான் மாறி உள்ளதே தவிர வாழ்த்துகளில் எந்த மாற்றமும் இல்லை. தபால் அலுவலகங்களில் கூடிய கூட்டம் தற்போது தொலைபேசி துறை அலுவலகங்களில் காணப்படுகிறது. மாறாக வாழ்த்து அட்டை கடைகளில் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

சிக்கனமான நடைமுறை

வாழ்த்து அட்டை அனுப்புபவர்கள் பண்டிகை மற்றும் முக்கிய தினங்களுக்கு முன்பாக 3 நாட்களுக்கு முன்பாகவே அதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். ஆனால் தற்போது செல்போன் மூலம் அனுப்பப்படும் வாழ்த்துகள், பண்டிகை மற்றும் முக்கிய தினங்களில் அன்றைய தினமே அனுப்பப்படுகிறது.

இதன் மூலம் விரைவாகவும், சிக்கனமாகவும் அனுப்பப்படுவதுடன், நேரமும் மிச்சப்படுத்தப்படுகிறது.

10 சதவீதம் பயன்பாடு

இதுகுறித்து சென்னை பாரிமுனையில் வாழ்த்து அட்டை விற்பனை செய்யும் என்.முகமது பைசல் கூறியதாவது:–

தொழில்நுட்ப புரட்சி காரணமாக வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் மக்களிடம் இருந்து படிப்படியாக அதனுடைய மவுசு குறைந்து வருகிறது. தற்போது 10 சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கத்தை கொண்டு உள்ளனர். ஆசிரியர் தினத்துக்கு தான் அதிக வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

ஆனால் தற்போது அந்த தினத்திலும் வாழ்த்து அட்டை வாங்க ஆள் இல்லாமல் விற்பனை குறைந்துவிட்டது. பண்டிகை, அன்னையர் தினம் போன்றவை சீசனில் மட்டுமே விற்கப்படுகிறது. ஆனால் பிறந்தநாள் வாழ்த்து அட்டை ஆண்டு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வாழ்த்து அட்டைகளின் தேவை குறைந்ததால் விற்பனை முற்றிலும் சரிந்து உள்ளது.

தீபாவளி பண்டிகை கால வாழ்த்து அட்டை விற்பனை வெகுவாக குறைந்து உள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு மழை பெய்ததால் கடந்த ஆண்டும் விற்பனை இல்லாத நிலை இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...