Wednesday, October 19, 2016

எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்

சிறுநீர், மலம் கழிக்க உரிய நேரம் தராமல் குழந்தைகளை நோயாளிகளாக்குகின்றன பள்ளிகள்

நம் எல்லோருக்குமே வாரிசு நலன் முக்கியமானதாக இருக்கிறது. எல்லோருடைய உயர்ந்தபட்ச ஆசை, கனவு, நோக்கம், லட்சியம் எல்லாவற்றிலும் தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம் உட்கார்ந்திருக்கிறது. இதற்காக எந்த விலை கொடுக்கவும் தயாராகவும் இருக்கிறோம். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிந்திக்கிறோம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டப்படுகிறோம். ஆனால், அடிப்படையான அம்சங்களில் கோட்டை விடுகிறோம்.

சென்னையிலுள்ள பிரபலமான ஒரு மருத்துவமனைக்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். அங்குள்ள ரத்தச் சுத்திகரிப்புச் சிகிச்சை மையம் (டயாலிஸிஸ் சென்டர்) பக்கம் சென்றபோது, நான் பார்த்த காட்சி அதிரவைத்தது. அந்த மையத்தில் சுத்திகரிப்பு செய்துகொண்டிருந்தவர்களில் கணிசமானவர்கள் குழந்தைகள். பள்ளி செல்லும் வயதுடையவர்கள். பின்னர், மருத்துவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.

நிலைகுலைய வைத்த சூழல்

நவீன வாழ்க்கைச் சூழல், உணவுக் கலாச்சாரம் என்று சிறுநீரகச் செயலிழப்புக் கான காரணங்களைப் பட்டியலிட்டவர், குழந்தைகள் பாதிக்கப்படுவதற்கான கார ணங்களில் ஒன்றாக நம்முடைய பள்ளி களில் உள்ள கழிப்பறைச் சூழலைக் குறிப்பிட்டார். “குழந்தைகள் கேட்கும் உணவு வகைகளையெல்லாம் வாங்கித் தரும் பெற்றோர், அவர்கள் உண்ணும் உணவும் பானங்களும் கழிவாக வெளியேறுவதில் எந்த அளவுக்கு அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள்?” என்று கேட்டபோதுகூட இந்தப் பிரச்சினையின் முழு உக்கிரத்தை நான் உணரவில்லை. பின் இதுபற்றி சிறுபிள்ளைகள் பலரிடமும் பேசினேன். பள்ளிச் சூழலை அவர்கள் சொன்ன விதம், ஒரு அரசுப் பள்ளி ஆசிரியரான என்னையே நிலைகுலையச் செய்தது. பல பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் சிறுநீர், மலத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். ஆசிரியர்களுக்குப் பயந்து, வெட்கப்பட்டு, நடுங்கி!

ஒரு நாள் சாப்பிடாமல் இருந்தால் உடலுக்கு நல்லது. ஒரு வாரம்கூட உண்ணாவிரதம் இருக்கலாம். உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. ஆனால், ஒரு மணி நேரம் சிறுநீர் / மலம் கழிப்பதைத் தள்ளிப்போடுவதுகூட நல்லதல்ல. அன்றாடம் இதை மணிக்கணக்கில் செய்யும்போது உடல் சித்ரவதைக்குள்ளாகிறது. உடல் உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகின்றன.

குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினை

எனக்குத் தெரிந்து, காலையில் ஏழு மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பும் மழலைகள் இருக்கிறார்கள். அவர்கள் கே.ஜி. வகுப்புகள் படிக்கிற பள்ளிக்கூடங்களுக்கு ஐந்து, பத்து கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் செல்ல வேண்டும். அந்தப் பள்ளி வாகனங்கள், வழியில் உள்ள ஏனைய கிராமங்களுக்கும் சென்று குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு பள்ளிக்குச் செல்லும். பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பதற்றத்துடன் வீட்டிலிருந்து ஓடிவந்து வாகனங்களில் ஏறும் குழந்தைகள் பள்ளிக்கு வந்தவுடனேயே சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க என்று கழிப்பறைக்கு ஓட முடியுமா? ஆசிரியர்கள் அனுமதிப்பார்களா?

இது அன்றாடம் குழந்தைகள் எதிர்கொள் ளும் பிரச்சினை. ஆனால், அன்றாடம் இப்படிக் கழிப்பறைக்கு ஒரு குழந்தை அனுமதி கேட்டால், அதை நொறுக்கியேவிடுவார்கள் ஆசிரியர்கள். வளர்ந்த பிள்ளைகளேகூட கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தயங்கும் சூழலே பள்ளியில் இருக்கிறது. அப்படிக் கேட்பதைக் கேலிக்குரியதாக, ஏளனத்துக்குரியதாகவே நாம் கட்டமைத்து வைத்திருக்கிறோம். உயர் வகுப்பு படிக்கிற பிள்ளைகளுக்கே இந்த நிலை என்றால், கே.ஜி. படிக்கிற சிறு குழந்தைகளின் நிலை என்ன?

பயமின்றிச் சொல்ல முடியுமா?

ஆசிரியர் என்ற சொல்லும், ஆசிரியர் என்ற பிம்பமும் சாதாரணமானதா அல்லது எளிதில் அணுகக் கூடிய சினேகம் மிக்கதா? ஒரு நாளில் வகுப்பறையில் ஆசிரியர்கள் அதிகமாகப் பயன்படுத்தக் கூடிய வார்த்தை ‘பேசாத!’ என்பதுதான். அதற்கடுத்த சொல் ‘வாய மூடு!’ என்பது. ‘எனக்குச் சிறுநீர், மலம் வருகிறது’ என்று எத்தனை பிள்ளைகளால் பயமின்றிச் சொல்ல முடியும்? தவறி வகுப்பறையிலேயே சிறுநீர் கழித்துவிடுகிற குழந்தைகள் எப்படியான கேலிக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதை ஏனைய குழந்தைகள் பார்த்துக்கொண்டேதானே வளருகிறார்கள்!

யோசித்துப்பார்த்தால், நம்முடைய ஒட்டுமொத்தக் கல்வி அமைப்புக்குமே இதுகுறித்து இன்னும் பிரக்ஞை வரவில்லை என்ற முடிவை நோக்கித்தான் நகர வேண்டியிருக்கிறது. நம்மூரில் எத்தனை பள்ளிகளில் போதுமான அளவுக்குக் கழிப்பறைகள் இருக்கின்றன? இரண்டாயிரம் பேர் படிக்கிற பள்ளிக்கூடத்தில் இடைவேளையின்போது ஐந்து, பத்து நிமிடங்களுக்குள் அத்தனை பிள்ளைகளும் கழிப்பறையைப் பயன்படுத்திவிட முடியுமா? அந்த அளவுக்கு வசதிகொண்ட பள்ளி என்று தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளைக் காட்ட முடியும்? கூட்டத்தில், வரிசையில் நின்று சிறுநீர் கழிக்க, மலம் கழிக்கக் கூச்சப்படுகிற குழந்தைகள் உண்டு. கூட்டமாக இருக்கிறது, வரிசையில் நிற்க வேண்டும் என்பதற்காகவே சிறுநீர் கழிக்காமல் திரும்பி வந்துவிடுகிற பிள்ளைகள் உண்டு. சிறுநீர் கழிப்பதற்காக, மலம் கழிப்பதற்காகக் காத்திருந்த நேரத்தில் மணி அடித்துவிட்டது, நேரமாகிவிட்டது ‘மிஸ் திட்டுவார்கள்’ என்று கழிவை வெளியேற்றாமல், அடக்கிக்கொண்டு அப்படியே ஓடிவந்துவிடுகிற பிள்ளைகளும் உண்டு. குழந்தைகள் பள்ளி செல்லும் காலத்தில் மதிப்பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் வேறு எதற்கும் கொடுப்பதில்லை.

அரை லிட்டர் போதாது

பள்ளிக்குச் செல்கிற குழந்தைகளில் அநேகம் பேர் அரை லிட்டர் தண்ணீருக்கு மேல் எடுத்துச்செல்வதில்லை. ஒரு பகல் முழுவதும் ஒரு குழந்தைக்கு அரை லிட்டர் தண்ணீர் போதாது. ஆனாலும், ஏன் கொஞ்சம் தண்ணீரையே எடுத்துச் செல்கிறார்கள்? காரணம் இதுதான். காலை ஏழு மணிக்கு வீட்டைவிட்டுச் செல்கிற பல குழந்தைகள், பள்ளியிலிருந்து திரும்பி வீட்டுக்கு வந்தவுடனேயே கழிப்பறைக்கு ஓடுவதைப் பார்க்கலாம். இது ஒரு சமூகம் நிகழ்த்தும் வன்முறையின் குறியீடுகளில் ஒன்று. ஒருபுறம், கழிவுகளை உரிய நேரத்தில் வெளியேற்றாததால், இன்னொருபுறம் தேவையான நேரத்தில் தண்ணீர் குடிக்காததால் உடல் பாதிப்புக் குள்ளாகிறது. இதனால், பல நோய்களுக்குக் குழந்தைகள் ஆளாகின்றனர்.

இப்படித்தான் சிறுநீரகப் பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள் என்பதை மருத்துவர் என்னிடம் விளக்கினார். “மூன்று வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறுநீரை அடக்கி அடக்கி வைப்பதால், சிறுநீர் வெளியேற வேண்டிய பாதையில் கழிவுகள் அடைப்புகளாக மாறி, நெஃப்ரான்களைச் செயலிழக்க வைத்து, சிறுநீரகத்தைச் சுருங்கவைக்கின்றன. சிறுநீரகம் செயல்படாததால் செயற்கை முறையில் டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டிய நிலை. சிறுநீரகம் செயலிழந்தால், மாற்று சிறுநீரக அறுவைச் சிகிச்சை, டயாலிசிஸ் சிகிச்சை இரண்டுதான் தற்போதிருக்கும் வழிகள். இவை இரண்டுமே முழு ஆயுள் உத்தரவாதம் இல்லாதவை. எதற்காக ஓடுகிறோம் என்பதையே உணராமல் ஓடிக்கொண்டிருக்கும் தலைமுறை நம்முடையது” என்றார் மருத்துவர்.

ஆமாம், எதற்காக இப்படி ஓடுகிறோம்?

இமையம்,

எழுத்தாளர், ‘கோவேறுக் கழுதைகள்’, ‘செடல்’ நாவல்கள் உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு:imayam.annamalai@gmail.com

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...