Sunday, October 30, 2016


கல்வி கண் போன்றது

By மா. இராமச்சந்திரன் | Last Updated on : 29th October 2016 12:32 AM |

கடந்த மூன்று ஆண்டுகளில் முப்பத்தெட்டு அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இது ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ள அதிர்ச்சிதரும் உண்மை. சாராயக்கடைகள் மூடப்பட்டிருந்தால் சந்தோஷமாயிருந்திருக்கும். மூடப்பட்டிருப்பதோ கண்ணொளி கொடுக்கும் கல்விக்கூடங்கள். கவலையாகத்தான் இருக்கின்றது.

மேலும் பல அரசுப் பள்ளிகளின் அவலநிலை பற்றியும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது. 1,200 அரசுப் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளதாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியும் தெரிவித்துள்ளது.
எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் மகாகவி பாரதியார், "புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்' என்று கூறினார். நாடு விடுதலை பெற்றபின் பொறுப்பேற்ற ஆட்சியாளர்கள் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டினர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கல்வித் துறையில் பெரும் புரட்சியே ஏற்பட்டது. தனியார் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்ததோடு அரசுப் பள்ளிகளையும் தோற்றுவித்தனர். ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகள் பல திறக்கப்பட்டன.

ஓட்டுக்கூரையும் சிறிய தோட்டமும் கூடிய கட்டமைப்புடன் ஓராசிரியர் பள்ளி, ஈராசிரியர் பள்ளிகளாக அவை செயல்பட்டன. தமிழகத்தில் 300-க்கும் மேல் மக்கள்தொகையுள்ள எல்லா கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

1954-இல் 21,000-ஆக இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 1962-இல் 30,000-ஆக அதிக ரித்தது. இதனால் ஏழை, எளியோரின் பிள்ளைகளும் கல்வி கற்கும் வாய்ப்பு உருவானது.

கல்வி கொடுப்பது அரசின் கடமை, அதைப் பெறுவது மக்களின் உரிமை என்ற உணர்வோடு அரசுப் பள்ளிகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலை அரசுப் பள்ளிகளுக்கு ஏன் வந்தது? எப்படி வந்தது? மாணவர் சேர்க்கை குறைந்ததால் வந்தது என்பர்.
மாணவர் சேர்க்கை குறைவான இழிநிலைக்கு ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின்மை, பொதுமக்களின் தனியார் மோகம், அரசின் அலட்சியம் என்ற மூன்றையும் காரணமாகச் சொல்லலாம்.

தொடக்கக் காலத்தில் அர்ப்பணிப்புடன் பணி செய்த ஆசிரியர்கள்போல் பின்னர் வந்த ஆசிரியர்கள் இல்லை. பள்ளிப் பணியைவிடத் தம் சொந்தப் பணியையே அவர்கள் பிரதானமாகக் கருதினர். சொந்த வேலைகளையெல்லாம் முடித்த பின்னர்தான் பள்ளிக்கூடத்திற்கு வந்தனர்.
பாடம் நடத்துவதில் அக்கறையின்றி பணம் சம்பாதிப்பதிலேயே குறியாகப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர். பாதி நேரம் பள்ளிக்கு வராமல் வெளி வேலைகளில் ஈடுபட்டனர். அரசியல் சார்பும், அதிகாரிகள் தொடர்பும் அவர்களுக்குச் சாதகமாகயிருந்தன.

இதனால் பள்ளியின் தரம் குறைந்தது. மக்கள் மனத்தில் அரசுப் பள்ளிகளின் மீதிருந்த மதிப்பும் நம்பிக்கையும் குறையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தனியார் பள்ளிகள் பெருகின. மக்கள் மனத்திலும். தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் வளர்ந்தது.
பணிப்பாதுகாப்பு போன்ற தங்கள் நலனுக்காகப் போராடிய ஆசிரியர்கள் கல்வியின் தரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர்.
விண்ணுயர் கட்டடங்கள், விதவிதமான விளையாட்டுச் சாதனங்கள், விரிவான கட்டமைப்பு வசதிகள், கவர்ச்சியான சீருடை, ஆங்கிலவழிப் போதனை, வீட்டு வாசல்வரைவரும் வாகன வசதி, மாணவரிடம் காட்டும் கவனம் போன்றவை தனியார் பள்ளிகள் மீது பொதுமக்களுக்கு ஓர் ஈர்ப்பை உண்டாக்கியதோடு, தங்கள் பிள்ளைகள் இத்தகைய பள்ளியில் படிக்கவேண்டும் என்ற மோகத்தையும் அவர்கள் மனத்தில் தோற்றுவித்தது.
ஏற்கெனவே அரசுப் பள்ளிகள் மீது அவர்களுக்கிருந்த அதிருப்தி, செலவையும் பொருட்படுத்தாது தங்கள் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தூண்டியது.

உள்ளூரில் அரசு பள்ளியில் இலவசக் கல்வி கிடைத்தும் தங்கள் பிள்ளைகள் பள்ளி வாகனத்தில் வெளியூர் சென்று கட்டணம் செலுத்திப் படித்துவருவதைக் கெளரவமாகக் கருதினர். இதனால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைந்தது.

ஆயினும், அரசின் அலட்சியமே இதன் மூல காரணம் எனலாம். கல்வி வளர்ச்சியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டிய அரசு, ஆசிரியர்களுக்குக் கொடுக்கும் சம்பளமும் அவர்களுக்குள்ள சலுகைகளும் வீண் என்று எண்ணியது. சங்கம் அமைத்து உரிமை கேட்ட ஆசிரியர்களைப் பகைவர்களாகக் கருதியது.

ஆசிரியச் சங்கங்களின் வலிமையை அடக்க எண்ணிய ஆட்சியாளர்கள் அரசுப் பள்ளி நலனில் அக்கறை காட்டுவதைத் தவிர்த்தனர். தனியார் பள்ளிகளின் பெருக்கத்தைக் கண்டுகொள்ளாமலே இருந்து, அவற்றை வளரவிட்டனர்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை நவீனப்படுத்தி, கல்விமுறையில் புதுமையைப் புகுத்தியிருக்க வேண்டியவர்கள் அலட்சியமாக இருந்துவிட்டார்கள். இன்றுவரை ஓராசிரியர் பள்ளியும் ஈராசிரியர் பள்ளியும் இருப்பது இதைத்தான் காட்டுகிறது.
கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்தை ஓசைப்படாமல் செயல்படுத்தினர். அதன் விளைவு, "பள்ளித்தலமனைத்தும் கோவில் செய்குவோம்' என்ற பாரதியின் கனவுக்கெதிராய்ப் பள்ளித் தலமனைத்தும் மூடுதல் செய்யும் அவலத்திற்கு வித்திட்டுள்ளது.

ஏழையின் கல்வியில் அக்கறையுள்ள அரசு இருந்திருந்தால் இந்த அவலம் உருவாகியிருக்காது. இப்பொழுதாவது அரசு விழித்துக்கொண்டு தொடக்கக் கல்வியில் சீர்திருத்தம் செய்து கிராமப்புற அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024