Sunday, October 30, 2016

நாட்டாண்மைக்கே' தீர்ப்பு சொன்ன கிராமம்

திருப்புவனம்: சுதந்திரத்திற்கு முன்னும், பின்னும் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் குறைவாக இருந்த காலத்தில் கிராமங்களில் பெரும்பாலும் பிரச்னைகளை விசாரித்து தீர்ப்பு சொல்வது நாட்டாண்மை எனப்படும் கிராம தலைவர்கள் தான். அதிலும் தீர்ப்பு சொன்ன நாட்டாண்மைக்கே பிரச்னை வந்த போது கிராமமே சேர்ந்து தீர்ப்பு சொன்னதும் அதை நாட்டாண்மை ஏற்றுக் கொண்ட சம்பவமும் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள ஏனாதி, பூவந்தி, மடப்புரம், செம்பூர், சுண்ணாம்பூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் 'அஞ்சூர்நாடு' என அழைக்கப்படுகிறது. இதில் தாய் கிராமம் ஏனாதி. ஐந்து கிராமத்திலும் நடைபெறும் சொத்து பிரச்னை, வாய்க்கால் தகராறு,பாதை தகராறு , திருவிழா உள்ளிட்ட எந்த பிரச்னையானாலும் அஞ்சூர் நாட்டு தலைவர் சொல்வது தான் இறுதி தீர்ப்பாக இருக்கும். இந்த ஐந்து கிராமங்களுக்கும் தனித்தனி நாட்டாண்மை உண்டு. இன்றைய கால கட்டத்தில் நாட்டாமை பதவியை ஒழித்து விட்டனர் என்றாலும் கிராமத்தில் பெயரளவில் இன்னமும் நாட்டாண்மை உண்டு. கோவில் திருவிழா உள்ளிட்ட விஷயங்களில் இன்னமும் முதல் மரியாதை நாட்டாமைகளுக்கு உண்டு. நாட்டாண்மைக்கு சொன்ன தீர்ப்பை கோர்ட்டே பாராட்டிய சம்பவமும் நடந்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஏனாதி கிராம நாட்டாண்மையாக இருந்தவர் கருப்பையா அம்பலம். இவருக்கு திருமணமாகி சிட்டுப்பிள்ளை என்ற மனைவியும்,மூன்று குழந்தைகளும் உண்டு. அந்தக்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லாததால் நாட்டாண்மை கருப்பையா அம்பலம் தட்டு வண்டி எனப்படும் மாட்டு வண்டியில் மற்ற ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம். அவ்வாறு நாலுார் நாட்டைச் சேர்ந்த அரசனுார் கிராமத்திற்கு கடந்த 1937ல் செல்கையில் அந்த ஊரைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்பவரை பார்த்து விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டு ஏனாதிக்கு வந்துள்ளார். தகவலறிந்து முதல் மனைவி மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் பிரச்னை என்றால் நாட்டாண்மைக்கு தகவல் சொல்வார்கள். பிரச்னைக்கு காரணமே நாட்டாமை என்பதால் கிராமமே இணைந்து விசாரித்துள்ளது. இரண்டாவது மனைவி பேச்சியம்மாளை கைவிட கருப்பையா அம்பலம் மறுத்துள்ளார். 

இதனையடுத்து கிராமமே இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளது. முதல் மனைவியிடம் கிடைக்காத சந்தோஷம் இரண்டாவது மனைவியிடம் கிடைத்துள்ளது. எனவே கருப்பையா அம்பலம் இரண்டாவது மனைவியுடன் இருந்து கொள்ளலாம். ஆனால் இதுவரை சம்பாதித்த சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் அனைத்தையும் முதல் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு கொடுத்து விட வேண்டும். இனி சம்பாதிக்கும் சொத்துக்கள் அனைத்தும் இரண்டாவது மனைவிக்கு சொந்தம் என கூறியுள்ளனர். 

அதனைக் கேட்ட நாட்டாண்மை கருப்பையா அம்பலம் கட்டியிருந்த இடுப்புக் கொடியை கூட அறுத்து கொடுத்து விட்டு இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டார். தொடர்ந்து இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தியதில் மலைச்சாமி, ராஜலட்சுமி, பாண்டியம்மாள் என்ற குழந்தைகள் பிறந்துள்ளன. கருப்பையா அம்பலத்திற்கு பின் மலைச்சாமி நாட்டாண்மையாகவும் அஞ்சூர் நாட்டு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அதன் பின் மலைச்சாமி மகன்கள் முருகானந்தம், வெங்கடேசன், திருமூர்த்தி ஆகியோரில் தற்போது வெங்கடேசன் ஏனாதி நாட்டாண்மையாக உள்ளார். வெங்கடேசனிடம் கேட்ட போது,“எங்கள் ஐயா(தந்தை வழி தாத்தா) விற்கு தான் இந்த தீர்ப்பு சொன்னார்கள். இந்த தீர்ப்பை பாராட்டி அந்த காலத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதி மிஸ்ரா பாராட்டு பத்திரம் வழங்கியுள்ளதுடன் இதனை மேற்கோள் காட்டியும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.தீர்ப்புக்கு பின் எங்கள் ஐயாவின் இரு மனைவிகளும் சமாதானமாக இருந்தாலும் எனது தந்தை, அதன் பின் நாங்கள் என பரம்பரை பரம்பரையாக நாட்டாண்மையாக இருந்துள்ளோம். 1989ல் எம்.ஜி.ஆர்.,ஆட்சி காலத்தில் நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டது. ஏனாதி கிராம பஞ்சாயத்துகள் உள்ளுரில் உள்ள பொது மந்தையில் நடைபெறும். அஞ்சூர் நாட்டு பஞ்சாயத்துகள் தற்போது சிவகங்கை -மதுரை சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே உள்ள ஆலமரத்தடியில் நடைபெறும். பஞ்சாயத்து நாளன்று ஆலமரத்தடியில் அஞ்சூர் நாட்டைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கூடுவது வழக்கம்”, என்றார்.நாட்டாண்மை பதவி ஒழிக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் எம்.ஜி.ஆர்., அமைச்சரவையில் இருந்த எஸ்.டி.சோமசுந்தரம் தான் காரணம் என கூறப்படுகிறது

. எல்லா கிராமங்களிலும் நாட்டாண்மைக்கு முதல் மரியாதை கொடுக்கப்படுவது வழக்கம்.1988ல் அப்போதைய அமைச்சராக இருந்த எஸ்.டி. சோமசுந்தரம் கிராமத்தில் நடந்த அரசு விழாவிற்கு வந்த போது நாட்டாண்மைக்காக காத்திருந்துள்ளார். கோபமடைந்த அவர் எம்.ஜி.ஆரிடம் சொல்லி நாட்டாண்மை பதவியையே காலி செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. கிராமப்புற பஞ்சாயத்துக்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் இன்றளவும் 2வது மனைவி சம்பந்தமான தீர்ப்பு அனைவராலும் ஏற்று கொள்ளக் கூடிய தீர்ப்பாக இருந்துள்ளது. திருமூர்த்தி கூறுகையில்,“ கிராமங்களில் பிரச்னை என்றால் பாதிக்கப்பட்டவர் வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் நாட்டாண்மையை சந்தித்து பிரச்னையை கூறுவார். எதிர்தரப்பிற்கு ஆளனுப்பிய பின் குறிப்பிட்ட நாளில் இருதரப்பையும் வைத்து விசாரணை ஆரம்பமாகும். நாட்டாண்மை சொல்லும் தீர்ப்பை 95 சதவிகிதம் அனைவரும் ஏற்று கொள்வோம். மீறுபவர்களை ஊரை விட்டு விலக்கி வைக்கும் சம்பவமும் நடைபெறும்.

ஆனால் எனக்கு தெரிந்து யாரும் நாட்டாண்மை தீர்ப்பை எதிர்த்ததில்லை. அனைவரும் ஏற்றுகொள்வார்கள். ஏன் என்றால் எங்கள் ஊர் நாட்டாண்மை அவருக்கு சொன்ன தீர்ப்பை ஏற்று கொண்டு அதன்படி நடந்து கொண்டவர் என்பதால் நீதி தவற மாட்டார் என்பது நம்பிக்கை,” என்றார்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...