Friday, October 14, 2016

பாதுகாப்பற்ற பயணங்கள், பறிபோகும் உயிர்கள்- யார் காரணம் ?

சென்னை கிண்டியில், தண்ணீர் லாரி மோதி மூன்று கல்லூரி மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

ஒருவழிப்பாதையான அந்த சாலையில் வளைவுப் பகுதியில், பிரேக் பிடிக்காத நிலையில் தண்ணீர் லாரியை அவ்வளவு வேகமாகக் கடக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? எவ்வளவு கனவுகளோடு கல்லூரிக்கு பிள்ளைகளைப் பெற்றோர்கள் அனுப்பியிருப்பார்கள்?

இந்த விபத்து, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயம் இல்லை. ஏனெனில் உலகிலேயே அதிக சாலை விபத்துகள் ஏற்படும் நகரங்களில் சென்னை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன. மக்கள் தொகை, நெருக்கடி எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பெரும்பாலும் அலட்சியத்தாலும், கவனக் குறைவாலும், மது போதையினாலும் தான் சாலை விபத்துகள் நடக்கின்றன.

தமிழக சாலைப் போக்குவரத்து புள்ளிவிவரங்களின் படி, இரண்டு சக்கர வாகனங்களால் நடக்கும் விபத்துகள்தான் அதிகமாக உள்ளன. அடுத்ததாக கார், லாரிகளால் நடக்கும் விபத்துகள் அதிகம் உள்ளன. பேருந்துகளைப் பொருத்தவரையில், அரசுப் பேருந்துகள் தனியார் பேருந்துகளைக் காட்டிலும் அதிக விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

சாலையைப் பொறுத்தமட்டில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை ஆகியவற்றைக் காட்டிலும் நகரின் உட்புற சாலைகளில்தான் அதிக அளவிலான விபத்துகள் நடக்கின்றன. மிக முக்கியமாக அதிக அளவிலான விபத்துகள், அதாவது கிட்டத்தட்ட 95 சதவிகித விபத்துகள் ஓட்டுநரின் தவறுதலால்தான் நடப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

திட்டமிடப்படாத சாலைகள் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக இருக்கிறது. உட்கட்டமைப்புகள் அடிக்கடி மாறுதலுக்குட்படுவது வழக்கமானதுதான். ஆனால் பெரும்பாலும் சாலைகள் விசாலமானதாகவும், போக்குவரத்து நெருக்கடி இல்லாத வகையிலும் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சாலைகள் திட்டமிடப்படாதவையாகவே இருக்கின்றன.

அலட்சியமும் உயிரிழப்பும்!

அவசர கதியில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் சாலையில் செல்லும்போது அதிவேகத்தில் பயணிப்பது நமக்கும் ஆபத்து, மற்றவர்களுக்கும் ஆபத்து என்பதை உணர வேண்டும்.

வாகனத்தை எடுக்கும்போதே பிரேக் பிடிக்கிறதா, பெட்ரோல் இருக்கிறதா, டயர் சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறதா, டயரில் காற்று இருக்கிறதா போன்ற அத்தியாவசிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பின்னரே வண்டியை எடுக்க வேண்டும்.

மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுவது. செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுவது. இரவில் சரியாக உறங்காமல் பகலில் வாகனத்தை ஓட்டுவது. சிக்னல்களை மீறி வாகனத்தை செலுத்துவது போன்றவையும் விபத்துக்கான மிக முக்கிய காரணங்கள்.

சாலை விபத்துகளைத் தவிர்க்க எத்தனை விழிப்புணர்வு வாசகங்களை வாகனங்களிலும் சாலைகளிலும் பார்க்கிறோம். ஆனால் அவற்றை கடைபிடிக்க ஏன் தயங்குகிறோம்?

- ஜெ.சரவணன்

Dailyhunt


No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024