Wednesday, October 19, 2016

ஆங்கிலத்தில் பேச தெரியாத விரக்தியில் ஏரியில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

மும்பை,


ஆங்கிலத்தில் பேச தெரியாத விரக்தியில் ஏரியில் குதித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.


மும்பை பவாயில் உள்ள சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தவர் சஞ்சிவ் ஜெயின் (வயது27).


மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் மூன்று மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். சிஞ்சிவ் ஜெயினுக்கு சரளமாக ஆங்கிலத்தில் பேச தெரியாது. இதனால் அலுவலகத்தில் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமலும், அவர்களுடன் ஆங்கிலத்தில் பேச தெரியாமலும் தவித்து வந்தார். என்ஜினீயரான தன்னால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லையே என்று அவருக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டது.


இதுபற்றி தனது குடும்பத்தினரிடம் கூறி வேதனைப்பட்டு இருக்கிறார். எனவே அவர்களும் வேலையை விட்டு விட்டு வரும்படி கூறியுள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று தனது சகோதரிக்கு போன் செய்த சஞ்சிவ் ஜெயின் ஆங்கிலத்தில் பேச முடியாமல் தவிப்பதாகவும், தனது வாழ்க்கையை முடித்து கொள்ள போவதாகவும் கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதை அறிந்த குடும்பத்தினர் உடனே தானேயில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் பவாய் வந்து சஞ்சய் ஜெயினை தேடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.


இதையடுத்து பவாய் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் கொடுத்தனர். இந்த நிலையில், பவாய் ஏரியில் வாலிபர் ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றினார்கள். விசாரணையில் அந்த வாலிபர் சஞ்சிவ் ஜெயின் என்பது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024