Monday, October 10, 2016

காதல் வழிச் சாலை 03: ‘நோ’ சொன்னால் ஏத்துக்கணும்!


ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகிற ஈர்ப்பு குறித்து நான் எழுதியதைப் படித்த பலரும், “எல்லாமே ஈர்ப்பு என்றால் எது காதல்? ஈர்ப்பு காலப்போக்கில் காதலாக மாறாதா? ஈர்ப்பு வருவதே தவறா, நாங்கள் என்ன செய்வது?” என்று சரமாரியாகக் கேள்விக் கனைகளைத் தொடுத்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே பதில்தான். ஈர்ப்பு என்பது ஒரு கட்டம்தான் என்பதை முதலில் உணர வேண்டும். காலப்போக்கில் அது காதலாக மாறலாம், மாறாமலும் போகலாம்.

அவசரக் காதல் வேண்டாமே

ஒரு பெண்ணையோ, ஆணையோ பார்த்ததும் காற்றில் மிதப்பதுபோல துள்ளலான உணர்வு தோன்றுவதற்குக் காரணம் மூளையில் சுரக்கும் வேதிப்பொருட்கள்தான். ‘டோப்பமைன்’ (Dopamine) என்ற ‘நியூரோ டிரான்ஸ்மிட்டர்’ அவற்றில் முக்கியமானது. காதல் கெமிஸ்ட்ரியின் கேப்டன் இவர். இயல்பாக எழும் இந்த அழகிய உணர்வுகளைக் கட்டுப்படுத்த மெனக்கெட வேண்டாம். ஆரம்பகட்ட உணர்வுப் பிரவாகமான இந்த ஈர்ப்புதான் காதல் என்ற அவசர முடிவுக்கும் வர வேண்டாம்.

ஈர்ப்பின் மறுபக்கம்

அழகான ஈர்ப்பில் ஆபத்துக்களும் இருக்கத்தான் செய்கின்றன. எதிர் பாலினம் மீது ஏற்படும் முதல் கட்ட ஈர்ப்பு உணர்வை ‘க்ரஷ்’ (crush) என்றும் சொல்வார்கள். இந்த உணர்வின் ஆயுட்காலம் ஒன்றரை முதல் மூன்று ஆண்டுகள்வரைதான் என்கின்றன பல உளவியல் ஆய்வுகள். அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த உணர்வுகளின் வீச்சு குறையத் தொடங்கும். அதற்குப் பிறகு பார்ட்னரின் மறுபக்கம் தெரிய ஆரம்பிக்கும். பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கும்.

நம்மவரைப் பற்றிய எதிர்மறை விஷயங்களை ஈர்ப்பு கட்டத்தில் கவனித்திருக்க மாட்டோம். கவனிக்கவும் முடியாது. ஆனால் உணர்ச்சிகள் அடங்கும் நேரம் வந்தவுடன் உண்மைகள் மேலெழும்பத் தொடங்கும்.

இந்த ஈர்ப்பில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒருவர் மீது அதீத ஈர்ப்பில் இருக்கும்போது, அவரைத் தவிர இந்த உலகில் வேறெதுவுமே நம் கண்களுக்குத் தெரியாது. வீடு, நண்பர்கள், சமூகம் என்று எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்.

ஈர்ப்பில் விலகல் வந்துவிட்டால் உற்சாகம் வடிந்துபோகும். இந்த உலகமே நிறமிழந்துவிட்டதுபோலத் தோன்றும். யாரையும், எதையும் பிடிக்காது. ஓரளவு தெளிவுடன் இருந்தால் இவற்றையெல்லாம் கடந்து வந்துவிடலாம்.

மறுத்துவிட்டார் தோழி

பலர் தங்களுடைய மனக் குழப்பங்களை என்னிடம் மின்னஞ்சல் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒரு மின்னஞ்சலைப் படித்ததும் என்னால் பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

“நான் பொறியியல் இறுதியாண்டு படிக்கிறேன். நெருங்கிப் பழகிய தோழி ஒருவரை மனதார நேசிக்கிறேன். சமீபத்தில் என் காதலைச் சொன்னேன். மறுத்துவிட்டார். நண்பன் என்ற எல்லைக்கு மேல் உன்னை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிறார். என்னால் அப்படி இருக்க முடியவில்லை. படிக்க முடியவில்லை. எதன் மீதும் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த மனச்சோர்விலிருந்து வெளியே வரவும் முடியவில்லை. எல்லோர்

மீதும் எரிந்து விழுகிறேன். சமயங்களில் உலகமே இருண்டு போனது போன்ற மன அழுத்தத்தை உணர்கிறேன். அவர் என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு உதவுங்கள் ப்ளீஸ்….”

காதலுக்குத் தோல்வியில்லை

இந்த இளைஞர் மட்டுமல்ல, நம் சமூகத்தில் பலரும் சந்திக்கும் பிரச்சினை இது. நம்மில் பலருக்கும் நிராகரிப்புக்கும் தோல்விக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. காதலில் ஒருவரை ஒருவர் நிராகரிக்கலாம், ஆனால் தோற்கடிக்க முடியாது. காரணம் காதலுக்கு எப்போதும் தோல்வியில்லை.

சரி, இந்த இளைஞரின் விஷயத்துக்கு வருவோம். சகோதரா, ‘நான் உன் வாழ்க்கைத் துணை இல்லை’ என்று புரியவைத்ததற்காக உன் தோழிக்கு நன்றி சொல். காதல் என்பது இரு கை ஓசை. ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது மட்டுமல்ல காதல். இருவரும் சேர்ந்து ஒரே திசையில் பார்ப்பதே காதல்.

உங்கள் மீது காதல் இல்லை என்று சொல்லும் பெண்ணின் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். கட்டாயப்படுத்தி மணம் புரிந்தாலும் அன்பு இல்லாமல் தொடங்கும் வாழ்க்கை நிச்சயம் இனிக்காது. ஒவ்வொரு தடங்கலுக்கு அப்பாலும் அதைவிட ஏதோவொன்று பெரிதாக, நல்லதாக நமக்காகக் காத்திருக்கிறது என்று நம்புங்கள்.

என் வலி எனக்குத்தான் புரியும் என்று நீங்கள் புலம்பலாம். மூளையில் நடக்கும் ரத்த ஓட்டம் போன்ற விஷயங்களைப் பதிவு செய்வதற்கு fMRI என்ற பரிசோதனை உதவுகிறது. உடல் வலியால் துடிப்பவர்களுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அதே போல் காதல் தோல்வியில் சிக்கி, நிராகரிப்பின் வலியில் இருப்பவர்களுக்கும் இதே சோதனை நடத்தப்பட்டது. முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. காரணம் உடல், மனம் இரண்டின் பாதிப்புக்கும் மூளை ஒரே விதமாகத்தான் செயல்பட்டிருக்கிறது. அதனால் மன வலி, உடல் வலியைவிட அதிகம் என்ற பிரமையை விட்டுவிடுங்கள்.

நதிபோல ஓடிக்கொண்டிரு

முதலில் கழிவிரக்கத்தை ஒழித்துக் கட்டுங்கள். அடுத்து என்ன, என்று நதிபோல ஓடிக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் திறமைகள், நண்பர்கள், உறவினர்கள் என்று உங்களைச் சுற்றி நல்ல விஷயங்கள் எத்தனையோ உண்டு. அதையெல்லாம் நினைத்து, நிராகரிப்பை மறந்துவிட்டு மனதை மடைமாற்றுங்கள்.

முடிந்தவரை உங்கள் தோழியைப் பார்ப்பதைத் தவிருங்கள். பார்க்க நேரிட்டாலும் கண்ணியமான இடைவெளியோடு பேசுங்கள். அவர் குறித்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்து நீக்க முற்படுங்கள். அனைத்துக்கும் மேலாக வாழ்க்கையில் ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். அதை நோக்கிப் பயணப்படுங்கள். அந்தப் பாதையில் காதல் தானாகவே வந்து உங்கள் கைகளில் சேரும். வாழ்த்துகள்!

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024