Thursday, October 20, 2016

வந்தார்கள்... பார்த்தார்கள்... சென்றார்கள்... மல்லையா கோவா வில்லா ஏல முயற்சி தோல்வி


மும்பை: மல்லையாவின் கோவா வில்லாவை ஏலம் எடுக்க யாரும் முன்வராததால், ஏல முயற்சி தோல்வியில் முடிந்தது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா, பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து 9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. ஆனால், மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். வழக்கிற்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

இவரிடம் இருந்து கடனை வசூலிக்க, கோவா கண்டோலிம் கடற்கரையில் உள்ள அவரது பங்களாவை பாரத ஸ்டேட் வங்கி கடந்த மே மாதம் பறிமுதல் செய்தது. இதில் மூன்று பெரிய பெட்ரூம், பிரமாண்ட ஹால், கைவேலைப்பாடுகள் நிறைந்த தேக்கு மரத்தில் கடைந்து உருவாக்கிய பர்னிச்சர்கள், சுற்றிலும் 20 பெராரி சொகுசு கார்கள், நீச்சல் குளம், பிரமாண்ட திரையரங்கு இந்த வில்லாவில் உள்ளன. மல்லையாவின் ஆடம்பர சொத்துக்களின் ஒன்றான இந்த வில்லாவில் கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் தனது 60வது பிறந்தநாளை மல்லையா கொண்டாடினார். அதன்பிறகு 5 மாதம் கழித்து இந்த வில்லா பறிமுதல் செய்யப்பட்டது. 12,350 சதுர அடியில் உள்ள இந்த வில்லா நேற்று ஏலம் விடப்படுவதாக இருந்தது. ஆரம்ப விலையாக 85.29 கோடி என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் யாரும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. முன்னதாக ஏலம் எடுக்க விரும்புபவர்கள் இந்த வில்லாவை பார்வையிட செப்டம்பர் 26, 27 தேதிகளும், அக்டோபர் 5,6 தேதிகளும் அறிவிக்கப்பட்டிருந்தன. சுமார் 6 பேர் இதை வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். ஆனால் ஏலம் எடுக்க மட்டும் யாரும் முன்வராததால், ஏல முயற்சி தோல்வியில் முடிந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024