Thursday, October 20, 2016

நன்றி குங்குமம் டாக்டர்

எனக்கு பொண்ணுங்களையே பிடிக்காது!


ஏன் இந்த எண்ணம்?

‘எனக்கு பொண்ணுங்களையே பிடிக்காது’ திரைப்பட வசனம் மூலமாக நமக்கு பரிச்சயமான வார்த்தைகள் இவை. சிலபல திரைப்படங்கள் போலியான சித்தரிப்புகள் வாயிலாக தவறான சித்திரங்களை உருவாக்கியிருக்கின்றன. பெண்களைப் பற்றிய சித்தரிப்புகள் அவற்றில் முக்கியமானவை. பெண்
களைக் கிண்டலடித்தும் திட்டியும் பாடும் டாஸ்மாக் பாடல்கள் ஒரு கலாசாரமாகவே திரைப்படங்களில் நீடித்து வருகிறது. அது ஒரு புறமென்றால், நம் குடும்பம் மற்றும் சமூக புறச்சூழல்கள் காரணமாக ஒருவருக்கு பெண் பாலினத்தையே பிடிக்காமல் போகலாம் என்கிறது உளவியல் மருத்துவம். இப்பிரச்னையை
‘I hate girl syndrome’ என்று குறிப்பிடுகின்றனர். எப்படியான சூழல்கள் ஒருவரை இப்பிரச்னைக்கு ஆட்படுத்துகின்றன? உளவியல் மருத்துவர் ராமனிடம் கேட்டோம்...

‘‘நமது குடும்பச் சூழலைப் பொறுத்துதான் நமது குணமும் ஆளுமையும் தீர்மானிக்கப்படுகிறது. எப்படிப்பட்ட சூழலில் வளர்கிறோமோ, அச்சூழல் நமது குணநலன்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்த பெண்களின் வடிவாக தன் தாயைப் பார்க்கிறான் ஆண். தன் தாயின் வாயிலாகவே பெண் உலகத்தைத் தெரிந்து கொள்கிறான். ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையோ, தன் தந்தை தாயிடம் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே முடிவு செய்கிறான்.

தாய்தந்தை உறவில் சிக்கல் இருந்தாலோ, தாயின் மன வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் நிலை சிறுவயதில் ஏற்பட்டாலோ, குடும்பச் சூழ்நிலையில் தன் தந்தை தாயை மோசமாக நடத்தும் விதம், பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் அனுபவம், சமூகத்தில் உள்ள பெண்களைப் பற்றிய பிம்பம் இவை அனைத்தும் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி எதிர்மறையான எண்ணங்களுக்குள் (Ambivalent thoughts) இட்டுச்செல்லும். குழந்தைகளை வளர்க்கிற பொறுப்பை பெரும்பாலும் பெண்களே ஏற்றுக்கொண்டுள்ளனர். அம்மா குழந்தைகளைக் கண்டிப்பதாக அளவுக்கு அதிக வன்முறையைச் செலுத்துகிறார் என்றாலும், பள்ளியில் ஆசிரியை வன்முறையைக் கையாள்வதும் பெண்கள் மீதான பயத்தை ஏற்படுத்தலாம்.

சிறு வயதிலிருந்து தான் பார்க்கிற எல்லா பெண்களும் ஓர் ஆணின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குபவர்களாகவே இருப்பார்கள் எனில், பெண் பாலினத்தின் மீதான அச்சமும் சந்தேகமும் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்துப் பெண்களையும் கேள்வியுடனும் சந்தேகத்துடனுமே அவர்கள் அணுகலாம். இப்படியான கருத்துக்குள் அவர்கள் சென்று விட்டால், அதிலிருந்து விடுபட வாழ்வு அனுபவம் தேவை. தான் உருவகப்படுத்தியிருக்கும் பெண் மீதான பிம்பம் பொய்யானது என்பதை உணர்த்தும் படியாக ஒரு பெண்ணுடனான நட்பு தேவைப்படும். அந்த நட்பிலும் சரியான புரிதல் ஏற்படாமல், பெண்கள் எல்லோருமே நமது பிரச்னை என்கிற முடிவுக்கு வந்து விட்டார்கள் என்றால், அவர்களுக்கு உளவியல் மருத்துவ உதவி அவசியம்.

கவுன்சலிங் மூலம் இப்பிரச்னையை குணப்படுத்தலாம். இப்பிரச்னை உள்ளவர்களுக்கு பெண்களுடனான உறவு சிக்கல் நிறைந்ததாக இருக்கக்கூடும். நண்பர்களுடன் ஆன நெருக்கம், திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை கையாளும் திறன் பிறரைக் காட்டிலும் குறைந்தே காணப்படும் அவர்களது விருப்பத்தை மீறியும் அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தால் தன் துணையின் மீது வன்முறையைக் கையாள்வார்கள்.

ஏன் இந்த சிக்கல்?

கூட்டுக்குடும்ப அமைப்பு முறையில் இது போன்ற பிரச்னைகள் இருந்ததில்லை. குடும்பத்தை வழிநடத்துவதற்கு அனுபவத்தில் முதிர்ந்த பெரியவர்கள் இருந்தார்கள். உறவின் மீதான புரிதலை அவர்கள் ஏற்படுத்தினார்கள். இதன் வாயிலாக உறவுகளுக்குள்ளான அன்பும் பலப்பட்டிருந்தது. இன்றைக்கோ பொருள் மட்டுமே முதன்மையானதாக மாறிவிட்ட நமது வாழ்வியல் சூழல் உறவுகளுக்குள் மிகப்பெரும் இடைவெளியை ஏற்படுத்தி விடுகின்றன. நிறைய தற்கொலைகளுக்கும் இதுதான் காரணம். நகரமயமாதலின் காரணமாக கிராமிய வாழ்வை நாம் இழந்து விட்டோம். அது சார்ந்த கூட்டுக்குடும்ப அமைப்பு முறை பல ஒழுக்க நெறிகளைக் கற்றுக் கொடுத்தது. எல்லாவற்றையும் தொலைத்து விட்டு நாமும் தொலைந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைக்கு திருமணம் என்கிற உறவின் மீதான புரிதலே தவறாக இருக்கிறது.

திருமணம் என்றாலே அது ஒரு கமிட்மென்ட் என்றாகி விட்டது. பொருளாதாரத்தில் தற்சார்பை அடைந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கின்றனர். ஆண்பெண் இருபாலினருமே திருமணம் என்பதை தங்களது சுதந்திரத்தைப் பறிக்கும் நிகழ்வாகப் பார்க்கிறார்கள். பாரம்பரிய மதிப்பீடுகளை நாம் இழந்து நமது கலாசாரத்திலிருந்து அந்நியப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதன் வெளிப்பாடுதான் இது.

ஆண் பாலினத்தின் மீது பெண்களுக்கும் வெறுப்பு வருமா?

பெண்களுக்கு ஆண்கள் மீதான நம்பிக்கை, எதிர்பார்ப்பு இவற்றை கற்றுக் கொடுப்பதே சமூகம் மற்றும் குடும்ப சூழல்தான். முன் மாதிரியான தந்தை, அண்ணன் அல்லது தம்பி, ஆண் நண்பர்களின் ஆதரவு மற்றும் அணைப்பு பெண்களிடம் ஆணைப் பற்றிய நல்ல எண்ணங்களை கொடுக்கும். அதுவே, இளம் பருவத்தில் ஆணாதிக்கத்தின் விளைவால் மனம் மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்படுவோர் அல்லது பாதிக்கப்படும் தன் தாயின் நிலையை காணும் போதும், சமூகத்தில் உள்ள ஆண்களை பற்றிய எண்ணங்களை தவறாகப் புரிந்து கொள்ளும் போதும், பெண்ணும் தன் எதிர் பாலினத்தை வெறுக்க வாய்ப்புண்டு.

தீர்வு?

தனி மனித ஒழுக்கம், குழந்தையை வளர்ப்பது தொடங்கி இளம் வயதில் அவர்களின் பிரச்னைகளை களைவதில் பெற்றோரின் பங்களிப்பு, சமூகம் சார்ந்த பொறுப்பு என மூன்று நிலைகளில் ஏற்படும் மாற்றமே தீர்வாக இருக்க முடியும். குடும்பம் மற்றும் சமூக சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் தீர்வாக இருக்க முடியுமோ தவிர, மருந்து, மாத்திரைகளால் இதனைக் களைய முடியாது. கல்வி முறையிலிருந்தே இம்மாற்றத்துக்கான தொடக்கத்தை உருவாக்க வேண்டும். கல்விக்கூடங்களில் பாலின சமத்துவம் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட்டு அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். Value education class என்று சொல்லக்கூடிய மதிப்பீடுகள் சார்ந்த பயிற்சி வகுப்புகளைக் கொண்டு வரலாம்.

Life skill education பள்ளியில் கொண்டு வரப்பட வேண்டும். கல்வி முறையில் இந்த மாற்றத்தைச் சாத்தியப்படுத்தினால் 18 வயதில் தீர்மானிக்கப்படும் ஒருவரது ஆளுமை வெகு சிறப்பானதாக இருக்கும். குழந்தைகள் ஆரோக்கியமான சூழலில் வளர்வதற்கும் அவர்களது குணநலன் மற்றும் ஆளுமைகளை வளர்த்துக்கொள்வதற்கும் உவப்பான சூழல் பள்ளியில்தான் இருக்கிறது. குடும்ப அளவில் பெற்றோரும் பள்ளி அளவில் ஆசிரியர்களும் முறையான புரிதலோடு குழந்தைகளை அணுகுவதும், அவர்களுக்கு உறவு குறித்த பார்வையை ஏற்படுத்துவதும் அவசியம். பொருள் தேவையை மையப்படுத்திய குடும்ப அமைப்பிலும், மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட கல்விமுறையிலும் இது சாத்தியமா எனத் தெரியவில்லை’’ என்கிறார் ராமன்.

கி.ச.திலீபன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024