Sunday, October 9, 2016

மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி சாவு விசாரணை நடத்த உத்தரவு

ஐதராபாத்,

மத வழக்கப்படி 68 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த 13 வயது சிறுமி இறந்தார். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி உத்தரவிட்டு உள்ளார்.

13 வயது சிறுமி

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஆராதனா (வயது 13). 8–ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை செகந்திராபாத் பாட்பஜார் பகுதியில் பிரபல நகைக்கடை நடத்தி வருகிறார்.

ஆராதனாவை அவருடைய பெற்றோர், உறவினர்கள், அப்பகுதி மக்கள் குழந்தை துறவியாக ஆராதித்து வந்தனர். ஜைன மத வழக்கப்படி அவரை உண்ணாவிரதம் இருக்க அவர்கள் ஊக்குவித்து உள்ளனர்.

பரிதாப சாவு

அதன்படி ‘சந்த்தாரா’ எனப்படும் உண்ணாவிரதத்தை ஆராதனா மேற்கொண்டார். 68 நாட்கள் உண்ணாவிரதத்தை 1–ந் தேதி முடித்தார். அதன் பிறகு 2 நாட்களுக்கு திரவ உணவை மட்டுமே உட்கொண்டார்.

இதனால் ரத்த அழுத்தம் குறைந்து அவருடைய உடல்நிலை மோசமானது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் 3–ந் தேதி பரிதாபமாக இறந்தார். ஆராதனா அவருடைய பெற்றோருக்கு ஒரே குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணைக்கு உத்தரவு

சிறுமி சாவு குறித்து அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர். அதன்படி இது பற்றிய விசாரணைக்கு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸ் துணை கமிஷனர் சுமதி கூறுகையில், ஆராதனா இறந்தது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை உண்ணாவிரதம் இருக்குமாறு உறவினர்கள் கட்டாயப்படுத்தி இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024