Saturday, November 5, 2016

நோயின்றி வாழ்வோம்!

நோயின்றி வாழ்வோம்!

By ஆர்.எஸ். நாராயணன்  |   Last Updated on : 05th November 2016 01:33 AM

நலம் விசாரிப்பது மனித மரபு. இதில் பல பாணிகள் உண்டு. "செளக்கியமா?'"நல்லாயிருக்கீங்களா?' "நலந்தனா?' இதற்கெல்லாம் வரக்கூடிய பதில் பொய்யானது. நலந்தானா என்று கைபேசியில் விசாரிக்கும்போது, மூன்று விதமான மாத்திரைகளை உள்ளே தள்ளியபடி ரொம்ப நல்லாருக்கேன் என்பார்.

தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்தால் நூறு சேனல்கள் வருகின்றன. ஐம்பது சேனல்களில் மருத்துவ விளம்பரம். விதவிதமானவை. சிறப்பாக சித்த - ஆயுர்வேத மருத்துவர்கள் உலகத்தில் உள்ள சகல நோய்களுக்கும் தீர்வு கண்டு விட்டதாகக் கூறுவார்கள்.

இவர்கள் மருந்துகளை உண்டு நோய் குணமானதாக நோயாளிகளிடமே சான்றிதழ் பெறுவார்கள். இன்னாரின் மருந்தை உட்கொண்டு, சிகிச்சை பெற்று மூட்டுவலி நீங்கியது, முதுகு வலி பறந்தது, மூக்கில் நீர்வடிவது நின்றது, முகம் பிரகாசமானது, என்றெல்லாம் நோயாளிகளாக நடிப்பவர்கள் பேசுவார்கள். காண்பவர்கள் நிஜமென்று நம்பி ஏமாந்து போவதுண்டு.
மற்றொரு வகையான விளம்பரம். வெள்ளைக்காரப்பெண் அல்லது வெள்ளையான இந்திய இளம் பெண் கூச்சமின்றி அங்க அவயங்களைக் காட்டுவாள். குண்டாயிருந்த ஆண் - பெண் பெல்ட் அணிந்து மெலிந்து விடுவார்கள். இக்கால ஜங்க் உணவால் பலருக்கு உடம்பே மலைபோல் ஆகிவிடுவது உண்மைதான். இதைக் குணப்படுத்துவதாகக் கூறும் பொய்யான விளம்பரங்களும் உண்மைதான்.

இரவு பதினோரு மணியிலிருந்து மன்மத விளம்பரங்கள் தொடங்கும். ஆண்மைத் தன்மை பெற விதம் விதமான சிட்டுக்குருவி லேகியங்கள், டானிக்குகள், விளம்பரமாகும். இதில் ரகசியம் எதுவுமில்லை. அப்படிப்பட்ட மருந்துகளைச் சோதித்துப்பார்த்தால் அபினியையோ கஞ்சாவையோ கலந்திருப்பார்கள்.

உண்மையில் அப்படிப்பட்ட மருந்துகளைத் தொடர்ந்து உண்பவர்கள் நாளைடைவில் நரம்புத்தளர்ச்சி, மூளைச்சிதைவு நோய்களுக்கு ஆளாகலாம் என்கிறது ஒரு மருத்துவ புள்ளிவிவரம்.
தொலைக்காட்சிகளில் நீண்ட தொட ரோ, திரைப்படமோ ஒளிபரப்பு செய்யும் போது எத்தனை நோய் விளம்பரங்கள்? அவற்றில் கிரிக்கெட் நட்சத்திரங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்று, மூக்கடைப்பு நின்றது, இருமல் நின்றது, சக்தி வந்தது என்றெல்லாம் கூறி குறிப்பிட்ட மருந்துக் கம்பெனிக்கு விளம்பரம் தேடுவார்கள்.

இன்று ஒரு யோகாகுரு பெரிய பெரிய மருந்து நிறுவனங்களுக்கு சவால்விடுகிறார். இருமல் மருந்து. தேன், நூடுல்ஸ், ஆட்டா, சக்திபானம் என்றெல்லாம் விளம்பரங்கள். நோய்க்கு மருந்து யோகாசனங்கள் மட்டுமல்ல, குடல் பசிக்கும் உணவு, மருந்து வழங்குகிறார்.

பிணிதீர்க்கும் பெரிய பெரிய மருத்துவ நிபுணர்களின் மருத்துவ விளம்பரங்கள் நாளிதழ்களிலும் வாரப்பத்திரிகைகளிலும் அடிக்கடி வருவதுண்டு.

ஒவ்வோர் ஊரிலும் புதிய புதிய மருத்துவ மனைகள் திறக்கப்படும் போது விளம்பரங்கள். இதயத்தில் பிரச்னையா வருகை தாருங்கள். சிறுநீரகப் பிரச்சினையா? புற்றுநோயா? வயிற்றுவலியா? குடல்நோயா? கால்வலி, கைவலி, இடுப்புவலி போன்ற சகல வலிகளுக்கும் நரம்பியல் நிபுணர்களும், மூட்டு இயல் எலும்பு வைத்தியர்களும் தத்தம் மருத்துவனைகளுக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள்.

முன்பெல்லாம் ஒவ்வொரு நகரத்திலும் நான்கு தங்கும் விடுதிகள் இருந்தால் ஒன்று அல்லது இரண்டு தனியார் மருத்துவ மனைகள் இருக்கும். இன்று அப்படி இல்லை. தங்கும் விடுதிகள் நான்கு எட்டானால், மருத்துவமனைகள் இரண்டு என்பது இருபதாக உயர்ந்து கொண்டு வருகிறது. இதன் காரணம் நோய்ப் பெருக்கம் மட்டுமல்ல, மருந்து மாத்திரை உற்பத்தியிலும் இந்தியா ஒரு முன்னணி நாடுதான்.
இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிப்பு அடைந்து தினமும் மாத்திரைகள் உண்ண வேண்டிய நிலையில் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் எட்டு சதவீதம் பேர் சர்க்கரை நோயால் தாக்கப்பட்டுள்ளனர். சுமார் 30 சதவீதம் மக்கள் அளவு மீறிய எடை போட்டுள்ளனர். எடைக்குறைவான மக்களை விட எடைபோட்ட மக்களே அதிகம்.சிறார் இறப்பு வீதம் 27 சதவீதம்.
இந்தியாவில் மாநில வாரியாக நோய்களின் புள்ளிவிவரங்களை (2015-16) ஐ.நா. உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள அடிப்படையில் சராசரி கணக்கிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் கணக்கில் முதலிடம் மேற்கு வங்கம். ரசகுல்லா வேலை செய்துள்ளது. இரண்டாவது இடம் தமிழ்நாடு. திருநெல்வேலி அல்வா, தெருக்கடைகளில் விற்கப்படும் தின்பண்டங்கள், லாலா மிட்டாய்க்கடைகளில் வழங்கப்படும் இனிப்புகளுக்கு அளவே இல்லை.

தமிழ் நாட்டில் 11 சதவீதம் மக்கள் சர்க்கரை நோயாளிகள். அதே சமயம் குண்டு - தொப்பையர்கள் மேற்கு வங்கத்தில் குறைவு. தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிகம். குறிப்பாக தமிழர்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகம் குண்டு (31%) ஆண்கள் 28 சதவீதம் குண்டு - தொப்பை போட்டவர்கள். இந்தப் பட்டியலில் தமிழன் முதலிடம் வகிக்கிறான்.

பட்டி தொட்டிவரை தமிழ்நாட்டில் ஜங்க் உணவு விற்பனையிலும் தமிழ்நாடே முதல் நிலையில் உள்ளது. இது ஐ.நா. உலக சுகாதாரப் புள்ளிவிவர மதிப்பீடு.

ஒரு காலத்தில் இந்தியாவில் புற்றுநோய் அபூர்வமாயிருந்தது. புகை பிடிப்போருக்கு மட்டுமே புற்றுநோய் ஏற்படும் என்பது உண்மையின் ஒரு பக்கமே. முன்னைவிட இப்போது புகையிலைப் பயன் குறைந்துவிட்டது. இந்தியப் புகையிலை நிறுவனம் புகையிலை பயிரிட்ட இடங்களில் இன்று காகிதப் பயன் கருதி மரவளர்ப்பு செய்து வருகிறது.

புகையிலைப் பயன் குறைந்தாலும் புற்றுநோய் வளர்வது ஏன்? குறிப்பாகப் புகையிலைப் பயன்படுத்தாமல் வாழும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், கருப்பையில் புற்றுநோயும் வருவது எப்படி?
விஷமான பூச்சி மருந்து அமோனியா தெளித்த விளைபொருள்களை உண்ணுவது, ஜங்க் உணவு, மரபணு மாற்றிய விதைகளிலிருந்து பெறும் உணவு, நிறத்திற்காகவும், உணவு கெடாமல் பாதுகாக்கவும் பயன்படும் பல்வேறு ரசாயனப் பொருள்கள் இவற்றால் புற்றுநோய் ஏற்படுகிறது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் (Indian Council Of Medical Research)  வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், நாளுக்கு நாள் புற்றுநோய் சிகிச்சைக்காக வருவோர் எண்ணிக்கை கூடிவ ருவதாகவும், 2020-ஐ நெருங்கும் போது 50 லட்சம் மக்கள் புற்றுநோய் சிகிச்சைக்கு வருவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
14 வயதுக்குட்பட்ட மாணவ - மாணவிகளுக்குப் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போவதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. பெண்களுக்கு மார்பகம், கருப்பை, தொண்டைக் குழாய் போன்றவை புற்றுநோய்க்கு இலக்காகின்றன. ஆண்களுக்கு சுவாசப்பை, தொண்டை, வாய், வயிறு, சிறுநீரகம், பெருங்குடல் போன்றவை பாதிப்புறுகின்றன. புற்றுநோயிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலம் என்பது கவலை தருகிறது.

நோய்களில் பலவகை உண்டு. சிறுநீரகம், இதயம், மூளை, நரம்பு மண்டலம், சுவாசப்பை ஆகியவை பாதிக்கப்பட்டால் அவை தீராத பெருநோய்கள். ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுவலி, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும் என்றாலும் தொடரும் சிறுநோய்கள். மஞ்சள் காமாலை, டைஃபாய்டு, பன்றிக் காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவை பாக்டீரியா, வைரஸ் மூலம் ஏற்படும் அபாயகரமான நோய்கள் - சுகாதாரக் கேடுகளினாலும் அசுத்தநீர் பருகுவதாலும் தொற்றும் இயல்புள்ளவை.

பாக்டீரியா வைரஸ் தொற்றுநோய்களுக்கு "பென்சிலின்' ஒரு தீர்வாயிருந்த காலம் போய் "டெட்ராசைக்ளின்' வந்தது. அதன்பின் "ஆம்பிசிலின்'. அதுவும் போய் "அமாக்ளீன்' என்கிறார்கள். இந்த "ஆண்டிபயாட்டிக்'கில் எவ்வளவோ மருந்துகள் உண்டு. சில நோயாளிகளுக்கு எந்த ஆண்டிபயாட்டிக்கும் வேலை செய்யவில்லையாம்.

குறிப்பாக கோழிக்கறி உண்பவர்கள், தேன் பருகுவோர் ஆகியோருக்கு இப்படிப் பிரச்னை வரலாம். ஏனெனில் கோழிவளர்க்கும்போது அதற்கு நோய் வராமல் இருக்க கோழித் தீவனத்தில் "ஆக்சிடெட்ராசைக்ளின்', "குளோர் டெட்ராசைக்ளின்', "டாக்சி சைக்ளின்', "என்ரோஃப்ளாக்சாசின்', "சிப்ரோஃப்ளாக்சாசின்' ஆகிய ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. இம்மருந்துகளின் எச்சம் கோழிக்கறியில் எஞ்சி அதை உண்ணும் மனிதனுக்குத் தேவையில்லாமல் ரத்தத்தில் எதிர்விஷம் சேர்ந்து விடுகிறது.

இப்படிப்பட்டவர்களுக்கு நோய் வந்தால் எந்த ஆண்டிபயாட்டிக்கும் வேலை செய்யாது. அதை "சூப்பர் பக்'(Super Bug) என்கிறார்கள். தேனீ வளர்ப்பிலும் இவ்வாறே மேற்கூறிய அதே ஆண்டிபயாட்டிக் மருந்துகள் தேனீக்கள் மீது தெளிக்கப்படுகின்றன. ஆகவே தேனில் ஆண்டிபயாட்டிக் எஞ்சியுள்ளது.

தேன் குறைவாக சாப்பிடுவார்கள். கோழிக்கறி அதிகம் சாப்பிடுவார்கள். ஆகவே, தேனைவிட கோழிக்கறியில் சூப்பர் பக் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

குழந்தையிலிருந்தே ஐஸ்கிரீம், சாக்லேட்டுகளை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டதால் குழந்தைகள் குண்டாகிவிட்டன. பெரும்பாலான மாணவமணிகள் கைபேசியில் அல்லது கணினி முன் உட்காந்தபடி செட் செய்யப்பட்ட விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்களே தவிர, உடல் வியர்க்கும் படியான விளையாட்டுகளில் ஈடுபடுவது இல்லை.

எவ்வளவு நோய்வந்தாலும் துரிதமான எதிர்ப்பு சக்தியை உடல் பயிற்சி மூலம் பெற்றுவிடலாம். "நலந்தானா' என்று நண்பர்கள் கேட்கும்போது "நலமே' என்று பொய் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024