Wednesday, November 2, 2016

அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் தான் ரெயில் சேவையா? ரெயில்வே நிர்வாகத்துக்கு ஐகோர்ட்டு கண்டனம்

மதுரை

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 2 பெட்டிகளை அகற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மட்டும் தான் ரெயில் சேவையா என்று கூறி, ரெயில்வே நிர்வாகத்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

2 பெட்டிகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வி.பூதிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசெல்வன், வக்கீல். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:–

மதுரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் தினசரி பாண்டியன் விரைவு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இதில் 3 பெட்டிகள் முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளாகவும், ஒரு பெட்டி முன்பதிவில்லாத பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டியாகவும் இருந்தன.

இந்தநிலையில் கடந்த 15.8.2016 முதல் நவீன ரக பெட்டிகள் பொருத்தப்பட்டு இந்த ரெயில் இயக்கப்படுகிறது. இதனால் பெட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்பதிவில்லாத பெண்கள் பெட்டி, முன்பதிவில்லாத ஒரு பொதுப்பெட்டி ஆகியவை அகற்றப்பட்டுள்ளன.

இணைக்க உத்தரவிட வேண்டும்

ரெயில்வே விதிப்படி ஒவ்வொரு ரெயிலிலும் குறைந்தபட்சம் ஒரு ரெயில் பெட்டி பெண்களுக்கென்று தனியாக ஒதுக்கப்பட வேண்டும். அதேபோன்று ஒவ்வொரு ரெயிலிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக கழிப்பிட வசதி, 4 படுக்கை வசதிகளுடன் கூடிய தனி பெட்டி ஒதுக்கப்பட வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

பாண்டியன் விரைவு ரெயிலில், ரெயில்வே விதி மற்றும் சுற்றறிக்கைப்படி பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கவில்லை. எனவே, அந்த ரெயிலில் அகற்றப்பட்ட முன்பதிவில்லாத பொதுப் பெட்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக தனித்தனி பெட்டிகள் ஆகியவற்றை இணைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பதில் மனு தாக்கல்

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, ஜே.நிஷாபானு ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை ரெயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் குகனேசன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாண்டியன் விரைவு ரெயிலில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய எல்.எச்.பி. கோச் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பெட்டி ஒன்றின் நீளம் 24 மீட்டர். ஏற்கனவே இருந்த பெட்டியின் நீளத்தை காட்டிலும் 1.7 மீட்டர் அதிகம். எனவே ரெயில்நிலைய பிளாட்பாரத்தை கணக்கிடும்போது இந்த பெட்டிகள் 22 தான் இணைக்க முடியும். கூடுதல் பெட்டிகள் இணைத்தால் ரெயில்நிலைய பிளாட்பாரத்தை நீட்டிக்க வேண்டியது வரும். அதனால் தான் பாண்டியன் விரைவு ரெயிலில் 2 பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ரெயில்வே விதிப்படி தான் கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஏற்க மறுப்பு

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

‘‘ரெயில் சேவை என்பது ஏழை மக்களின் நலன் கருதி செய்யப்படுகிறது. அவர்களால் ரூ.2 ஆயிரம் கொடுத்து சொகுசு பஸ்களில் பயணம் செய்ய முடியாததால் தான் முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளில் நெரிசலில் பயணிக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தை புகுத்துகிறோம் என்று அந்த பெட்டிகளை நீக்கிவிட்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? அதிகாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்காகவும் மட்டும் இந்த வண்டி இயக்கப்படுகிறதா?

இந்த ரெயிலில் எலிகள் தொல்லையும் அதிகமாக உள்ளது. அதை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து வருகிற 7–ந்தேதி கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்.“

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...