அன்றும் இன்றும்! எஸ்.வி.சேகர்
By மாலதி சந்திரசேகரன் | Published on : 16th November 2016 10:36 AM |
தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான நடிகர், நகைச்சுவைப் படங்களில் கதாநாயகனாக நடித்து கோலோச்சி வரும் நட்சத்திரம், சிறந்த தயாரிப்பாளர், இயக்குனர், புகைப்படக் கலைஞர், திரைக்கதாசிரியர், நாடகக் குழுவை (நாடகப்ரியா) தலைமை பொறுப்பேற்று வழிநடத்துபவர், மத்திய திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (Central Board of Film Certification), பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய உறுப்பினர் என இப்படி பன்முகத்டுடன் சகலகலா வல்லவரான எஸ்.வி.சேகர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அவரைக் கண்டதுமே ‘நம் குடும்பம்’ தொடர் ஞாபகம் வந்தது. உற்சாகமாக பேச்சைத் துவக்கினோம்.
நம் குடும்பம் தொடரின், நீங்கள் சினிமா கதாநாயகனாக மிளிர வேண்டும் என்கிற எண்ணத்தில், உங்களின் மனைவியாக பாத்திரமேற்று நடிப்பவர் ‘டயட் கண்ட்ரோல்’ டயட் கண்ட்ரோல் என்று கூறிக் கொண்டு, தண்ணீரைக் குடிக்கச் சொல்லில் உங்கள் வயிற்றை நிரப்பி அனுப்புவாரே! அப்படி நிஜ வாழ்க்கையில் டயட் சிஸ்டம் உண்டா?’
நான் பொதுவாகவே எதையும் அதிகமாக சாப்பிட மாட்டேன். போதாத குறைக்கு பதினைந்து வருடங்களாக சர்க்கரை வியாதி வேறு சேர்ந்திருக்கிறது. எனவே உணவைச் சுருக்கமாக முடித்துக் கொள்வேன். நான் காபி பிரியன். ஒரு தம்ளர்
காபியை சர்க்கரை சேர்க்காமல், கால் கால் க்ளாஸ்களாக நான்கு தடவைகள் குடிப்பேன். என்னுடைய அன்றாட அட்டவணையைக் கூறுகிறேன். அதற்கு முன்பாக ஒன்றைக் கூற வேண்டும். நான் சுத்த சைவம். காரம் கூட சாப்பிட மாட்டேன். எப்போதாவது ஊறுகாய் சாப்பிடுவதாக இருந்தால் கூட, அதை நன்றாக கழுவி காரத்தை எடுத்து விட்டுத்தான் சாப்பிடுவேன்.
காபியை சர்க்கரை சேர்க்காமல், கால் கால் க்ளாஸ்களாக நான்கு தடவைகள் குடிப்பேன். என்னுடைய அன்றாட அட்டவணையைக் கூறுகிறேன். அதற்கு முன்பாக ஒன்றைக் கூற வேண்டும். நான் சுத்த சைவம். காரம் கூட சாப்பிட மாட்டேன். எப்போதாவது ஊறுகாய் சாப்பிடுவதாக இருந்தால் கூட, அதை நன்றாக கழுவி காரத்தை எடுத்து விட்டுத்தான் சாப்பிடுவேன்.
முதலில் காலை எழுந்தவுடன் ஒரு பெரிய தம்பளரில் வெந்நீர் குடிப்பேன். பின் குளித்து முடித்துவிட்டு, ஸ்வாமிக்கு பூ பறித்துக் கொண்டு வந்து, வைத்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு காபி குடிப்பேன். அந்த காபி, ஹோட்டல் மினி காபியிலும் பாதிதான் இருக்கும். பிறகு சிற்றுண்டி வேளைக்கு இரண்டு தோசை சாப்பிடுவேன். பிறகு தேவைப்பட்டால் பதினொரு மணிக்கு காபி அல்லது வெஜிடபிள் சூப், சில சமயங்களில் மோர் குடிப்பேன். மதிய சாப்பாட்டுக்கு அரிசி உணவைத் தவிர்த்து விடுவேன். காய்கறி வகைகள் எடுத்துக் கொள்வேன். அப்போது மோர் குடிப்பேன். சாயந்திரம் ஸ்நாக்ஸ் டயத்துக்கு தாளித்த அரிசி பொரி ஒரு கப் உண்பேன். இரவு ஆகாரத்துக்கு இரண்டு சப்பாத்தி அல்லது இரண்டு தோசை சாப்பிடுவேன். இரவு சுமார் பத்தரை மணிக்கு ஒரு கப் பால் குடித்துவிட்டு உறங்கப் போவேன். ஜுரம் வந்தால் மட்டும் தான் இட்லி சாப்பிடுவேன். எங்கள் வீட்டில் ‘டயட்’ என்றால் அது பால் தான். டோன்டு மில்க்தான் உபயோகப்படுத்துகிறோம். நான் வெள்ளைப் பண்டங்களான சர்க்கரை, அரிசி, மைதா மூன்றையுமே உணவில் சேர்த்துக் கொள்வதில்லை.
சில சமயங்களில் விசேஷ நாட்களில் யாராவது இனிப்பு பண்டத்தினைக் கொடுத்துச் சாப்பிடச் சொன்னால், அதை வாங்கிக் கொண்டு நேராக வாஷ்பேசின் அருகில் சென்று விடுவேன். கொடுத்தவரின் மனத்தை நோகடிக்க விரும்பாமல், வாயில் போட்டுக் கொண்டு நன்றாக சுவைத்துவிட்டு பிறகு துப்பிவிடுவேன். இரண்டு பேரின் நோக்கமும் நிறைவேறிவிடுகிறது இல்லையா?
எப்போதும் சந்தோஷமாக இருப்பது எப்படி?
சந்தோஷம் என்பது வெளியில் இல்லை. தேடிப் போக வேண்டிய அவசியம் கிடையாது. நமக்குள்ளே இருக்கும் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மனம் லேசாக இருந்தால், முகமும் மலர்ச்சியாக அழகாகத் தென்படும். இது என் தந்தை எனக்குக் கற்றுத்தந்த பாடம்.
மணல் கயிறு இரண்டாம் பாகம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்...
மணல் கயிறு சினிமா 1982-ம் ஆண்டு மே மாதம் வெளியானது. அதன் இரண்டாம் பாகம் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது. முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து வெளியாகும் இப்படத்தில், முதல் பாகத்தில் நடித்த விசு, குரியகோஸ் ரங்கா, நான் மூவரும் அதே கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறோம். முதல் பாகத்தில் கிட்டுமணியாக நடித்த நான், நாரதர் நாயுடு என்கிற கதாபாத்திரத்தில் நடித்த விசுவிடம், நான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் எப்படிப்பட்ட பெண் அமைய வேண்டும் என்பதற்கு எட்டு கண்டிஷன்கள் போடுவேன். இரண்டாம் பாகத்தில் என் மகள் (மணப்பெண்) எட்டு கண்டிஷன்களைப் போடுகிறாள். இது அடுத்த தலைமுறை பற்றிய கதையாக வருகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் (உலக திரைப்பட வரலாற்றில் என்று கூறலாமா என்று தெரியாது) முப்பத்து நான்கு வருடங்கள் கழித்து, ஒரே படத்தின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் பிரதான பாத்திரமேற்று நடித்தவர்களே மீண்டும் இதில் நடிக்கிறார்கள் என்பது இதுதான் முதல் தடவை. தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிக்க, மதன் குமார் இயக்கத்தில், தரன் இசையில், என் மகன் அஷ்வின் சேகர் கதாநாயகனாகவும், பூர்ணா கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இதன் திரைக்கதையை நான் எழுதியிருக்கிறேன்.
தற்போது மொத்த நாடே நம் பிரதமரைப் பற்றித் தான் பேசுகிறது. நீங்கள் நம் பாரதப் பிரதமரை முதன் முதலில் எப்போது சந்தித்தீர்கள்?
பிரதமர் மோடிஜியை எனக்கு 2010-லிருந்தே பழக்கம். சோ அவர்கள் தான் எனக்கு மோடிஜியை அறிமுகப்படுத்தினார். சோ அவர்கள் என் மானசிக குரு. அடுத்த முறை நான் மோடிஜியை சந்தித்த போது, அவர் கேட்ட முதல் கேள்வி என்ன தெரியுமா? நம்ம ராஜகுரு எப்படி இருக்கிறார்? என்றுதான். அடுத்ததாக பழக்கம் ஆன ஒரு மாதம் கழித்து ஒரு நாள், நான் அவருடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதற்காக ஃபோன் செய்தேன். அப்போது அவர் குஜராத்தில் இருந்தார். போனை அவருடைய சீஃப் செகரட்டரி தான் எடுத்தார். என்னைப் பற்றிய தகவலைத் தெரிவித்ததும், என் ஃபோன் நம்பரை வாங்கிக் கொண்டு, மோடிஜி மீட்டிங்கில் இருப்பதால் அவரிடம் தெரிவிப்பதாகக் கூறினார். நம்பராவது வாங்கிக் கொண்டாரே என்று நான் திருப்தி பட்டுக் கொண்டேன். ஆனால் மாலை சுமார் ஏழு மணி அளவில் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. எடுத்தவுடன் ‘சேகர்ஜி, ஐம் மோடி ஹியர்’ என்றார். அதையெல்லாம் விட அவர் கூறியதில் என்ன ஆச்சரியமான விஷயம் என்றால், ‘நீங்கள் ஃபோன் செய்தீர்கள் பதிலுக்கு நான் செய்கிறேன். இது ஒரு அடிப்படை மரியாதை’ என்றவுடன் நான் ஆடிப் போய் விட்டேன்.
பிறகு ஒருமுறை குஜராத்தில் ஒரு கல்யாணத்திற்கு குடும்பத்துடன் செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. அப்போது நான் மோடிஜிக்கு போன் செய்து, நாங்கள் மூன்று நாட்கள் குஜராத்தில் இருப்போம். ஏதாவது ஒருநாள் அப்பாயிண்ட்மெண்ட் கொடுங்கள் என்று கேட்டேன். அவர், சரி நாளை மதியம் மூன்று மணிக்கு வாருங்கள் என்று கூறினார். அடுத்த நாள் காலை எனக்கு பத்து மணிக்கு ஃப்ளைட். ஒரு மணிக்கு குஜராத் போய்விடலாம். மூன்று மணிக்கு அவரை சந்தித்து விடலாம் என்று இருந்தேன். ஆனால் மறுநாள், ஃப்ளைட் மூன்று மணிக்குத்தான் கிளம்புவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் பனிரெண்டு மணிக்கு மேல் தான் அறிவித்தார்கள். நான், உடனே அவருக்கு SMS அனுப்பினேன். அதில தமிழ்நாட்டில் சீதோஷ்ண நிலை சரியில்லாததால் ஃப்ளைட் இங்கிருந்து கிளம்புவதில் தாமதமாகிறது. நீங்கள் கொடுத்த நேரத்தில் உங்களை சந்திக்க முடியவில்லை என்று வருத்தமாக உள்ளது. பெரிய மனது செய்து வேறு அப்பாயிண்ட்மெண்ட் தர முடியுமா? என்று கேட்டிருந்தேன். அடுத்த நாள் வாருங்கள் என்று எழுதி நேரத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
எவ்வளவு பெரிய மனிதர் பாருங்கள். இன்னொருத்தராக இருந்தால், ‘நான் அவகாசம் கொடுத்தும் உன்னால் வர முடியவில்லையா? என்று கோபித்துக் கொண்டு பதில் கூட சொல்ல மாட்டார்கள். அவர் பிறரை வணங்கும் போது கூட உடலை வளைத்து, சிரம் தாழ்த்தி தான் வணங்குவார். அவ்வளவு பண்பானவர், பணிவானவர், அன்புள்ளம் கொண்டவர். நாட்டு நலனில் அக்கறை கொண்டவர். அவரை பிரதமராக அடைந்ததில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.’ என்று முடித்தார்.
கலைவாணர் விருது, கலைமாமணி, வசூல் சக்கரவர்த்தி போன்ற பல விருதுகளை வாங்கியிருக்கும் எஸ்.வி.சேகரிடம் மணல் கயிறு 2 வெற்றி பெற வாழ்த்திவிட்டு விடை பெற்றோம்.
- மாலதி சந்திரசேகரன்