எல்லா செலவுகளுக்கும் ரூ.4,500 போதுமா? விரலில் மை வைப்பதில் எழும் சந்தேகங்களும், கேள்விகளும்!
By DIN | Published on : 16th November 2016 10:47 AM
சென்னை: வங்கிகளில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றி வேறு நோட்டுகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்துள்ளன.
* தேர்தலின்போது பயன்படுத்தப்படும் அதே வகை மைதான் வங்கிகளில் பயன்படுத்தப்பட உள்ளது. அது, சுமார் 2 மாதங்கள் வரை அழியாது. ஒரே நபர் தனது தேவைக்காக தினசரி வங்கிக்கு வந்து பணத்தை மாற்றினால் அவருக்கு எத்தனை முறை மை வைக்கப்படும்?
* ஒருவரது விரலில் ஒரு முறை மை வைத்தபிறகு, அவர் சில நாள்களுக்குப் பிறகு அவசரத் தேவைக்காக மீண்டும் பணத்தை மாற்ற வந்தால் அவருக்கு பணம் தர வங்கிகள் மறுக்குமா? அப்போது எழும் சிக்கல்கள் எவ்வாறு தீர்க்கப்படும்?
* பல்வேறு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள ஒரு நபர், ஒரே நாளில் ஒரு வங்கியில் பணத்தை மாற்றிய பிறகு, தான் கணக்கு வைத்துள்ள வேறு வங்கியில் சென்று பணத்தை எடுக்கவோ அல்லது மாற்றவோ அனுமதி உண்டா?
* நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாத முதியவர்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்றித் தருமாறு பிறரிடம் உதவி பெற்று வருகின்றனர். இப்போது பணத்தை ஏற்கெனவே மாற்றிய நபரின் விரலில் மை வைக்கப்படுவதால் முதியவர்களுக்கு உதவ முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது எப்படி கையாளப்படும்?
* மருத்துவச் செலவு, திருமணம் போன்றவற்றுக்காக சாமானிய மக்களுக்கும் அதிக அளவில் பணம் தேவைப்படும். அப்போது, வங்கிகளுக்கு மீண்டும், மீண்டும் சென்று பணத்தை மாற்றுவதையும், எடுப்பதையும் தவிர வேறு என்ன வழி உள்ளது?
*ஒரு முறை விரலில் மை வைக்கப்பட்டவர் மறுமுறை எப்போது வந்து வங்கியில் பணம் எடுக்கலாம் என்பதை நிர்ணயித்துள்ளார்களா?
* குடும்பத்தில் ஒருவர் வீட்டில் இருந்தால் அவர்தான் கையில் இருக்கும் பணத்தை வங்கிக்குச் சென்று மாற்றி வருவார் எனில், அவரது விரலில் மை வைக்கும் பட்சத்தில், குடும்பத்தில் உள்ள அனைவரும், கல்லூரி, அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்து வங்கிக்குச் சென்று வரிசையில் வந்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுமா?
*கர்ப்பிணியின் மருத்துவ செலவுக்காக கையில் வைத்திருக்கும் பணத்தை அவரது கணவர் மாற்றி வருவதற்கு இந்த மையால் தடை ஏற்படுமாயின், கர்ப்பிணியே நேரடியாக வங்கிக்குச் செல்ல வேண்டிய பரிதாப நிலை உண்டாகுமா?
* இரண்டு வயதான தம்பதிகள் இருக்கும் வீடுகளில் ஒருவர் முடியாமல் இருந்தால், மற்றொருவர் மட்டுமே வங்கிக்குச் சென்று பணத்தை மாற்றி வருவார். அப்படி இருக்கும்போது, அவருக்கு மை வைத்தால், முடியாமல் இருக்கும் மற்றொரு முதியவரை கட்டிலோடு வங்கிக்கு தூக்கிச் செல்ல வேண்டுமா?
* வாடகை, மளிகை, பள்ளிக் கட்டணம் என அனைத்தையும், இந்த வங்கிகள் ஒரே ஒரு முறை கொடுக்கும் 4,500 ரூபாயில் செலுத்தி விட முடியுமா? அல்லது வாடகை, ரயில், பேருந்து கட்டணம், மளிகை என எல்லா வற்றையும் மத்திய அரசு இந்த மாதத்துக்கு மட்டும் தள்ளுபடி செய்து விடுமா?
இந்த கேள்விகளுக்கு மை வைக்கும் முடிவை அறிவித்தவர்களே பதிலையும் சொல்ல வேண்டும்.
No comments:
Post a Comment