Sunday, November 13, 2016

விரட்டும் வங்கிகள்... மல்லுக்கட்டும் மக்கள்... தொடரும் அவஸ்தைகள்!



500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பு மக்கள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு விதிமுறையை அறிவித்து மக்களை வங்கிகள் விரட்டியடிப்பதால் பணத்தை மாற்ற முடியாமல் மக்கள் பெரிதும் அல்லல்படுகின்றனர்.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி கடந்த 8ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அடுத்து 9ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஏ.டி.எம் மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 10ம் தேதி முதல் வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் புதிய வரவான 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக வங்கிகளில் மக்கள் கால்கடுக்க காத்திருக்கின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டுக்களை வைத்து அன்றாட செலவுகளை மக்கள் சந்திக்க முடிவதில்லை. இதனால் புதிய 2000 ரூபாய் நோட்டுகளுடன் 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுக்களையும் மக்கள் கேட்டு பெறுகின்றனர். ஆனால் அத்தகைய நோட்டுக்களை பெரும்பாலான வங்கிகள் மக்களுக்கு வழங்குவதில்லை.

இந்நிலையில், மக்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் ஒருநாளைக்கு 4000 வரை பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற வரையறை வகுக்கப்பட்டது. இதனால் மக்கள் ஒவ்வொரு வங்கி கிளையாக சென்று 4000 ரூபாய் என்ற விதத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமா அவ்வளவு தொகையை பெற்று வந்தனர். இதற்கு 'செக்' வைக்கும் வகையில் ஒரு நபர் ஒரு வங்கியில் 4000 ரூபாயை வரை மாற்றும் வகையில் புதிய வரையறையை வகுத்துள்ளது வங்கி.

இதுகுறித்து வங்கி வட்டாரங்கள் கூறுகையில், "ஆதார்கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், அரசு ஊழியர்களின் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அடையாள அட்டை ஆகியவற்றை கொண்டு பணத்தை மாற்றிக் கொள்ளலாம். இந்த அடையாள அட்டைகளைக் கொண்டு பணத்தை மாற்றும் மக்கள், ஒவ்வொரு வங்கிகளிலும் ஒரு அடையாள அட்டைகளை கொடுத்து வந்தனர். ஒரே வங்கியின் மற்றொரு கிளைக்கு ஒரே நபர் பணத்தை மாற்ற முடியாது. அதே நபர் மற்றொரு வங்கிக்கு சென்று பணத்தை மாற்றிக் கொள்ளலாம். குறிப்பாக தனியார் வங்கிகள், ஒரு நபர் 4000 ரூபாய் மாற்றினால் அந்த நபர் 12 நாட்களுக்குப் பிறகே மாற்ற வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை 4000 ரூபாயை மாற்றிக் கொள்ளலாம். அவசர தேவையாக பணம் தேவைப்படுபவர்கள், தங்களுடைய பணத்தை டெபாசிட் செய்யலாம். அதில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாயை எடுத்துக் கொள்ளலாம்" என்றனர்.



வங்கிகளின் இந்த அதிரடி அறிவிப்பால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் கையில் வைத்திருக்கும் 500, 1000 ரூபாய் பணத்தை மாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். ஏ.டி.எம் மையங்களும் காலியாக காட்சியளிப்பதால் அங்கும் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் அல்லல்படுகின்றனர். இதனால் மக்கள், பணத்தை மாற்ற பரிதவித்து வருகின்றனர். ஆனால், ரிசர்வ் வங்கி தரப்பில் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கிகள் விடுமுறையின்றி செயல்படும. இதனால் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி பணத்தை மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு வங்கிகளிலும் தேவையான பணம் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகளின் இந்த நடவடிக்கையால் மக்கள், புதிய ரூபாய் நோட்டுக்களைப் பெற தில்லாலங்கடி வேலைகளிலும் ஈடுபட தொடங்கி விட்டனர். குறிப்பாக கமிஷன் அடிப்படையில் ஒருவருடைய அடையாள அட்டைகளைப் பெறுகின்றனர். பணத்தை மாற்றி கொடுப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய்க்கு 100 ரூபாய் கமிஷனாக வழங்கப்படுகிறது. சில தனியார் வங்கிகளில் இதற்கென ஏஜென்ட்களும் இருக்கின்றனர். வங்கிகளின் கெடுபிடியால் அவர்களை தேடி மக்கள் செல்லத் தொடங்கி விட்டனர்.

புதிய 2000 ரூபாய் பெற மக்கள் 2000 அவஸ்தைகளை நாள்தோறும் அனுபவித்து வருகின்றனர்.

எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024