Friday, November 11, 2016

அறிவித்தபடி இயங்காத ஏடிஎம் மையங்கள்: அவதிப்படும் பொதுமக்கள்


சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஏடிஎம் மையத்தின் முன் திரண்டிருந்த மக்கள் | படம்: எல்.சீனிவாசன்.

இரு நாட்களுக்குப் பிறகு ஏடிஎம் மையங்கள் நாடு முழுவதும் இன்று முதல் (11-ம் தேதி) இயல்பாக இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் விசாரித்தவரை நிலைமை தலைகீழாக இருக்கிறது.

பெரும்பாலான ஏடிஎம்-கள் இயங்காததால் மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர். அன்றாட அத்தியாவசியச் செலவுக்குக்கூட பணம் இல்லாமல் சாமானிய மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ் போன்ற பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம் மையங்கள் ஏதும் திறக்கவில்லை. சென்னை பெரம்பூர் பகுதியில் ஒன்றிரண்டு ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடிந்தது. அண்ணா நகர் பகுதியில் இருக்கும் ஹெச்டிஎப்சி ஏடிஎம் மையங்கள் ஏதும் இன்னும் இயங்கவில்லை. மதியம் 3.30 மணிக்கு மேல் அந்த மையங்களில் பணம் எடுக்கலாம் என வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுரை நிலவரம்:

மதுரை மாவட்டத்தில் ஆங்காங்கே ஒருசில ஏடிஎம் மையங்கள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் மக்கள் ஒவ்வொரு ஏடிஎம் மையமாக அலைந்து திரிகின்றனர். தபால் அலுவலகங்களில் 'எங்களுக்கு இன்னும் பணம் வரவில்லை' என்ற பதிலையே திரும்பத்திரும்ப கூறுகின்றனர்.

சில வங்கிகளில் எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்குத்தான் பணம் வழங்க முன்னுரிமை மற்ற வங்கி கணக்குடையவர்களுக்கு இப்போதைக்கு பணமில்லை எனக் கூறி அனுப்புகின்றனர். கையில் ரூ.500, ரூ.1000 இருந்தும் அதை பயன்படுத்த முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.

வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது போதிய பணம் இல்லாததாலேயே ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பப்படவில்லை என்றனர்.

கோவை திண்டாட்டம்:

கோவை நகரிலும் ஒரு சில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. சில ஏடிஎம் மையங்கள் திறந்துள்ளன. ஆனால், அவற்றை பணத்துக்காக இயக்கினால், "பணம் இல்லை" என்ற அறிவிப்பு மட்டுமே வருகிறது என்று மக்கள் புலம்புகின்றனர். வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று புதிய நோட்டுகளை மாற்றியவர்கள் கவலை வேறாக இருக்கிறது. ரூ.2000 எடுத்துக் கொண்டு எந்தக் கடைக்குச் சென்றாலும் சில்லறை இல்லை ரூ.2000-க்கும் பொருட்கள் வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள் என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சேலத்திலும் தவிப்பு:

சேலத்திலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஐஓபி, எஸ்பிஐ போன்ற ஒருசில ஏடிஎம் மையங்களில் மட்டுமே பணம் எடுக்க முடிகிறது. நேற்று போலவே இன்றும் வங்கிகளில் மக்கள் அதிகளவில் திரண்டுள்ளனர்.



படம்: எஸ்.குருபிரசாத்.

மாநகராட்சியில் பழைய ரூ.500, ரூ.1000 பயன்படுத்தி வரி செலுத்தலாம் என்ற அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதனால், மக்கள் பழைய நோட்டுகளை கொடுத்து வரி பாக்கியை செலுத்தி வருவது ஆறுதல் தரும் விஷயம்.

திருச்சியில் ஓரளவு சிரமம் குறைவு:

திருச்சி டவுன் பகுதியில் ஏடிஎம் மையங்கள் ஓரளவு இயங்கிவருவதாக அங்கிருந்து வந்த தகவல் தெரிவிக்கின்றது. எஸ்.பி.ஐ., ஐ.ஓ.பி. வங்கிகளில் பணம் எடுக்க முடிவதாக மக்கள் கூறுகின்றனர். ஆனால், கேவிபி, ஹெச்டிஎப்சி போன்ற ஏடிஎம் மையங்களில் பணம் இன்னும் நிரப்பப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



திருச்சியில் ஏடிஎம் மையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் | படம்: எஸ்.ஞானவேல் முருகன்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024