Tuesday, November 15, 2016

ஆடாத விளையாட்டுகள்

By மன். முருகன்  |   Published on : 15th November 2016 02:27 AM

ஓடி விளையாடு பாப்பா - நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என்ற பாரதி, "மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ள' சொல்கிறார்.
இன்று இந்த வழக்கம் எல்லாம் கிடையாது. விளையாட்டு என்பதே இன்றைய பெற்றோர்களுக்கு எட்டிக் காய் கசப்புதான். அவர்களுக்கு காலை 6 மணி தனி வகுப்பில் ஆரம்பித்து 9 மணிக்கு பள்ளிப் படிப்பு தொடங்கி, மீண்டும் மாலை 5 மணிக்குத் தனி வகுப்பு, வேறு ஏதாவது மூளை வளர்க்கும் (?) திறன் இருந்தால் முடித்துவிட்டு அப்படியே மறுநாள் தனி வகுப்புச் சென்றால் பரவாயில்லை என்பார்கள்.
விளையாட்டை மறந்த குழந்தைகள் ஒரு தலைமுறையைத் தாண்டிவிட்டனர். விளையாட முடியாமைக்குப் பல்வேறு காரணங்களும் சொல்லப்படுகின்றன. அடுக்ககங்களில் வாழ்கின்றனர். நகரத்தில் எங்கே போய் விளையாடுவது? இன்றைக்குப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல் எங்கே இருக்கிறது? இப்படி நிறைய.
ஆனால் இவை மேம்போக்கான காரணங்கள்தான். உண்மையில் ஆசையுடன் தம் குழந்தைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர் இருக்கின்றனரா? அவர்களுக்கு ஆயிரம் கனவுகள்; அந்தக் கனவுகளில் எல்லாம் அந்நிய தேசங்கள். களியாட்டங்கள்; கைநிறைய சம்பளங்கள்.
நாம் நம் குழந்தைகளுக்கு சொல்ல மறந்த விளையாட்டுகள் என 201-ஜ தேடித் தொகுத்து பதிவு செய்துள்ளார் முனைவர் செங்கை பொதுவன். இவை அத்தனையும் தமிழகத்தில் மறைந்து வரும் விளையாட்டுகள். விளையாட்டையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறோம்.
15, 20 ஆண்டுகளுக்கு முன்னர், கிராமங்களில் அரசுப் பள்ளியில் படித்தவர்களின் மாலை நேரம்தான் எத்தனை இனிமையானது? மாலை 3.10-க்கு பள்ளிக் கூடம் முடிந்தால் 4 மணி வரை பள்ளியில் மாலை வகுப்பே விளையாட்டுதான். அது முடிந்து வீட்டுக்கு வந்தால் இரவு 8, 9 மணி வரையும் விளையாட்டுதான்.
6-ஆம் வகுப்பு மேல் படிக்கும் மாணவர்கள்தான் ஏதாவது வீட்டுப் பாடம் செய்வார்கள். அவர்களும் ஒன்றிரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு விளையாடத் தொடங்கிவிடுவர்.
கிராமத்து அரசுப் பள்ளிகளை அழிக்கத் தொடங்கியதில் இருந்து முடிவுக்கு வரத் தொடங்கியது சிறுவர்களின் விளையாட்டு உலகம்.
இன்றைக்குத் தனியார் பள்ளிகள் பெருகின. கட்டணக் கல்வி கடிவாளங்களைப் பரப்பியது. அவை முதலில் காலி செய்தது விளையாட்டைத்தான். அது ஏதோ வேண்டாத விபரீதமாகவே பாவிக்கப்படுகிறது. "மாலை முழுதும் விளையாட்டா?' அவ்வளவுதான் அமெரிக்க கனவு என்னாவது பாரதி?
மேலும், நவீன தொழில்நுட்ப உலகம் விளையாட்டுகளை கேம்களாக சுருக்கி குழந்தைகளின் விளையாட்டுத் திடலை, அங்கு விளையாட வேண்டிய உடலையும் சுருக்கி, சுறுசுறுப்பை குலைத்துவிட்டது.
தமிழ்நாட்டில்தான் குழந்தைகளுக்கு எத்தனை எத்தனை விளையாட்டுகள்... அம்மானை, குலைகுலையா முந்திரிக்கா, பம்பரம், கிட்டிபுள், திருடன்-போலீஸ், பச்சைக் குதிரை, கபடி, கோலி, உப்பு எடுத்தல், செதுக்கு முத்து, கிளித்தட்டு, ஒற்றையா இரட்டையா, காற்றாடி, நொட்டி, தட்டாங்கல், தாயம், பரமபதம், பல்லாங்குழி, கண்ணாமூச்சி, பூப்பறிக்க வருகிறோம், கரகரவண்டி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
அதேபோல் வீர விளையாட்டுகளான சிலம்பம், சல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்), இளவட்டக்கல், மற்போர் போன்றவை இளைஞர்களுக்கான விளையாட்டுகள்.
ஒவ்வொரு விளையாட்டிலும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள். கபடி: தன் மண்ணை கவர நினைப்பவனை மண்ணைக் கவ்வ வைக்கும். நாட்டுப்பற்றை வளர்க்கும். பல்லாங்குழி: இருக்கும் இடத்தில் இருந்து இல்லாத இடத்தில் கொடுக்கும் குணம் வளரச் செய்யும். பரமபதம்: ஏற்றம் இறக்கம் இரண்டும் கலந்து இருப்பதே வாழ்க்கை என்பதை உணர்த்தும்.
கில்லி: கூட்டல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை களிப்புடன் மகிழ்ந்து கற்கச் செய்யும். தாயம்: வெட்டி வெளியே எறிந்தாலும் மீண்டும் மீண்டும் முயன்று வெற்றி அடைவேன் என்ற தன்னம்பிக்கை வளர்க்கும். சதுரங்கம்: எவ்வழியும் இல்லாதபோதும் இறுதி வரை போராடும் உறுதி மிக்க மனம் பெற உதவும்.
நொண்டி: சமமாக இல்லாத போதும் சாதிக்கத் தூண்டும் சக்தி உண்டாக வழிவகுக்கும். கண்ணாமூச்சி: ஒளிந்து இருப்பவர்களைக் கண்டுபிடிப்பதற்கான பொறுமையையும், தானே ஒளிந்து மகிழ்ந்திருக்கும் பெருமையும் உண்டாகச் செய்யும்.
தமிழ்நாட்டில் ஏறுதழுவுதல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு என அழைக்கப்படும் காளைகளை அடக்கும் வீர விளையாட்டு, முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பண்களை மணப்பதற்கு காளையை அடக்குவது இன்றியமையாததாகியது. அதற்கும் காரணம் உண்டு.
பெரும்பான்மை மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். விவசாயத் தொழிலுக்கு உடல் வலிமை தேவை. உடல் வலிமை உள்ள ஆண்மகனே பெண்டிருக்கு நற்கணவான இருக்க முடியும்.
எனவேதான் காளையை வணங்குதல் (நந்தி வழிபாடு), காளையை அடக்குதல் என்ற வீர விளையாட்டாகவும் அமைத்துக் கொண்டார்கள்.
விளையாட்டினால் ஒற்றுமை, படிப்பு, சுறுசுறுப்பு, போட்டியிடும் மனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் பண்பு, வெற்றி - தோல்விகளைச் சமமாகப் பாவிக்கும் குணம் குழந்தைகளுக்கு ஏற்படும். உள்ளத்தையும் உடலையும் ஆற்றல் படுத்தும். சமயோஜித புத்தியை வளர்க்கும்.
மண்ணில் விளையாடுவதால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி பெருகுவதாக ஆராய்ச்சிகள் உறுதிபடக் கூறுகின்றன. இளம்வயதில் கண் பார்வைக் குறைபாடு, சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கிறது.
மேலும், விளையாடுவதன் மூலமே சிறப்பாக கல்வியைப் பயில முடியும் என்பதை உலகம் ஏற்றுக் கொள்கிறது. குழந்தைகள் விளையாட களம் அமைத்து, விளையாட்டை ஊக்குவிப்போம்.விளையாட்டுகள் மண்ணின் அடையாளம், மரபின் தொடர்ச்சி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024