வடமாநிலங்களில் மூட்டை மூட்டையாக 500,1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!
By DIN | Published on : 14th November 2016 12:42 PM
பாட்டியாலா: கறுப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நிலையில், வடமாநிலங்களில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து, வடமாநிலங்களில் பல்வேறு இடங்களில் வாகனசோதனையின் கணக்கில் வராத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
இதனிடையே, போலீஸாருக்கு தொலைபேசியில் வந்த தகவலையடுத்து, பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா நகரில், 5 வாகனங்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட சுமார் இரண்டரை கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பஞ்சாப் மாநில போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் வதோதரா மாவட்டத்தில் அகமதாபாத் - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில், மறைத்து கொண்டுவரப்பட்ட சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் கோல்ஃப் கிளப் அருகே 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிழிந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், காரில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடியே 60 லட்சம் பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா பகுதியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூட்டை மூட்டையாக கங்கை மற்றும் சாலைகளில் கொட்டப்பட்டும், எரிக்கப்பட்டும் வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment