Wednesday, November 16, 2016

ராஜதந்திர நெருக்கம்!

By ஆசிரியர்  |   Published on : 16th November 2016 12:40 AM  |   
நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு, அரசுமுறைப் பயணமாகச் சென்ற முதல் நாடு ஜப்பான்தான். இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு என்பது நெருக்கமானதும், நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டதுமான ஒன்று. பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெறுவதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு உதவ முன்வந்த நாடும் ஜப்பான்தான். அரசு நிறுவனமான எச்.எம்.டி. கைக்கடிகாரம் தயாரிக்க முற்பட்டபோதும் சரி, மாருதி கார்கள் தயாரிக்க முடிவெடுத்தபோதும் சரி, நமக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கி இந்தியாவின் தொடக்க காலத் தொழில் வளர்ச்சியில் கணிசமாக பங்காற்றி இருக்கும் தேசங்களில் ஜப்பானும் ஒன்று. இந்தப் பின்னணியில்தான், பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய ஜப்பான் விஜயத்தை நாம் பார்க்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தில், ஜப்பானுடன் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருந்தாலும்கூட, அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது என்னவோ, இந்திய - ஜப்பான் அணுசக்தி ஒப்பந்தம்தான். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இழுபறியில் இருந்த இந்த அணுசக்தி ஒப்பந்தம் இந்த முறையும் கையெழுத்தாகாது என்று அனைவரும் கருதி இருந்த நிலையில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் காட்டிய முனைப்பால், ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் ஜப்பான் இதுவரை அணுசக்தி உடன்பாடு செய்துகொண்டதில்லை. இந்தப் பிரச்னைதான் இத்தனை ஆண்டுகளாக, இரு நாடுகளுக்கு இடையேயும் ஒப்பந்தம் கையெழுத்தாகாமல் இழுத்தடித்துக் கொண்டிருந்ததற்குக் காரணம். அந்த முட்டுக்கட்டை சாதுர்யமாக இப்போது அகற்றப்பட்டு விட்டிருக்கிறது.
இந்த உடன்படிக்கை கையெழுத்தாகி இருப்பதாலேயே ஜப்பானின் துணையோடு இந்தியாவில் நிறைய அணுமின்சக்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுவிடும் என்று அர்த்தமில்லை. அதற்கு முதலீடு, அரசியல் ரீதியிலான முடிவுகள், மக்கள் எதிர்ப்பு என்று பல பிரச்னைகளை எதிர்கொண்டாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடன்படிக்கையில் ஒரு முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா எந்தக் காரணத்திற்காகவும் அணுஆயுத சோதனை நடத்த முற்பட்டால், இந்த அணுசக்தி உடன்பாடு உடனடியாக ரத்தாகிவிடும் என்பதுதான் அது.
பல கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் இருந்தாலும்கூட, இந்த உடன்படிக்கையால் ஜப்பானிடமிருந்து தொழில்நுட்பக் கூட்டுறவு எல்லா துறைகளிலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. அதுமட்டுமல்ல, உலகில் நிறுவப்படும் எந்தவொரு அணுமின் உலையாக இருந்தாலும் அதில் முக்கியமான பாகங்களும், சில அடிப்படைத் தொழில்நுட்பமும் ஜப்பானியர்களுடையதுதான். அதனால், எந்தவொரு நாட்டுடன் அணுமின் உற்பத்திக்கான முயற்சியில் நாம் இறங்கினாலும் இந்த ஒப்பந்தம் தேவைப்படுகிறது. அது அமெரிக்காவோ, பிரான்úஸா, ஏனைய நாடுகளோ, அவர்களிடமிருந்து அணுமின் உலைகளை வாங்குவதற்கு ஜப்பானின் சம்மதம் தேவைப்படுகிறது.
அடுத்தபடியாக, நாம் பாரீஸ் சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறோம். அதன்படி, கரியமில வாயுவைக் கட்டுக்குள் கொண்டுவந்தாக வேண்டும். சூரிய மின்சக்தியும், காற்றாலை மின்சாரமும் மட்டுமே நமது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட முடியாது. அதற்கு, ஆபத்துகள் நிறைந்த அணுமின்சக்தியைத்தான் நாம் நம்பியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
அணுமின்சக்தி உடன்படிக்கை மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கு இடையே இன்னும் பல முக்கியமான உடன்படிக்கைகளும் கையெழுத்தாகி இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும், முதலீடும் கணிசமாக அதிகரிக்க இந்த அரசுமுறைப் பயணம் வழிகோலி இருக்கிறது. ஏனைய உலக நாடுகள் அனைத்தையும்விடக் குறுகிய காலத்தில், மிக அதிகமான வர்த்தக உதவி ஜப்பானுடன் மேம்பட்டிருக்கிறது. ஜப்பானின் உதவியும் முதலீடும் சேர்ந்து ஆண்டொன்றுக்கு 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.33,750 கோடி) எனும்போது, இது சீனா போன்ற நாடுகளைவிட மிக அதிகம்.
ஏனைய நாடுகளுடனான தொடர்பைவிட, ஜப்பானுடனான நமது தொடர்பு சற்று வித்தியாசமானது, ஆக்கபூர்வமானது. தொழிற்பேட்டைகளையும் "கன்டெய்னர்' முனையங்களையும் இந்தியாவின் பல்வேறு பாகங்களில் உருவாக்குவதில் ஜப்பானின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அதன்மூலம் இந்தியாவுக்கு பலமான அடித்தளத்தையும், ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் உற்பத்திக்கு வழிகோலும் தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதையும் ஜப்பான் உறுதி செய்கிறது. பொலிவுறு நகரங்கள் நிர்மாணிப்பது, அதிவேக ரயில்களை இயக்குவது உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் நாடும் ஜப்பான்தான்.
மோடி - அபே கூட்டு அறிக்கையில் தென்சீனக் கடல் பிரச்னை குறித்துக் கூறியிருப்பது சீனாவைக் கோபப்படுத்தக்கூடும். ஆனால், இந்தியா அணுசக்தி வழங்கும் நாடுகளின் கூட்டத்தில் சேர்வதை எதிர்ப்பதிலும், பயங்கரவாதிகள் ஹபீஸ் சையது, மசூத் அஸார் ஆகியோருக்கு எதிரான தடை குறித்தும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை சீனா எடுக்கும்போது, இந்தியாவும் முக்கியமான பிரச்னைகளில் எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி இதன் மூலம் உணர்த்தி இருக்கிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஏற்பட இருக்கும் சர்வதேச அரசியலில் இந்தியாவுக்கு நெருங்கிய நண்பர்கள் தேவைப்படுகிறது. அந்தக் கண்ணோட்டத்தில்தான், பிரதமர் மோடியின் ஜப்பான் விஜயம் அணுகப்பட வேண்டும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024