Wednesday, November 16, 2016

"ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால் ஊழலை ஒழித்துவிட முடியாது'

By DIN  |   Published on : 16th November 2016 12:28 AM  |   
புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதால், ஊழலுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்று பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் கய் சோர்மன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக தில்லியில் அவர் பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெறும் இந்திய அரசின் முடிவானது, புத்திசாலித்தனமான அரசியல் நடவடிக்கை ஆகும். ஆனால் இந்நடவடிக்கையால் ஊழலுக்கு முடிவு கட்டி விட முடியாது.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றும் நடவடிக்கையும், புத்திசாலித்தனமானதுதான். இருந்தபோதிலும், இந்நடவடிக்கையானது வர்த்தக செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். பொருளாதார வளர்ச்சியையும் பாதிக்கும்.
அதிக அளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட பொருளாதாரத்தில் ஊழல் எப்போதும் மிகுந்து இருக்கும். ஊழலை கட்டுப்படுத்துவதற்கு விதிகளை தளர்த்துவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும் என்றார் கய் சோர்மன்.
மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதாரத்துறை முன்னாள் முதன்மை ஆலோசகரும், பிரபல பொருளாதார நிபுணருமான இலா. பட்நாயக் கூறியபோது, ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை பிரதமர் நரேந்திர மோடி திடீரென செல்லாது என்று அறிவித்திருப்பதற்கு பல்வேறு நோக்கங்கள் இருப்பதாக குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது, கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்போரை வெகுவாக பாதித்துள்ளது. இந்த நிலவரத்தை எப்படி கையாள்வது? இதற்கு தீர்வு காண்பதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்க போகிறோம்? என்ற திகைப்பில் ஊழல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அதிகளவு பணத்தை வைத்திருப்போர் உள்ளனர்.
அதேபோல் புதிதாக வெளியிடப்படும் அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை இனிமேல் ஊழலுக்கோ அல்லது பதுக்கி வைக்கவோ பயன்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில், இதுபோன்று மீண்டும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவிக்கலாம் என்ற அச்சத்தில், அமெரிக்க டாலர்கள், தங்கம் அல்லது வைரம் ஆகியவற்றை சட்டவிரோத செயலுக்கு அதிகளவுக்கு பயன்படுத்தப்படலாம் என்றார் பட்நாயக்.

No comments:

Post a Comment

NEWS TODAY 27.09.2024