ரூபாய் நோட்டு அனுபவம்: முழு திருப்தி தந்த வங்கி சேவை
500 - 1000 நோட்டு மாற்றுவதில் ஆளாளுக்கு ஒரு பதிவினைப் போட்டுக் கொண்டிருக்க, என் பங்குக்கு நானும் ஒரு பதிவு போட வேண்டும் என நினைக்கிறேன். கவலை வேண்டாம், இது யார் மீதும் வெறுப்பை வளர்த்து, பழி போட்டு, புகார் சொல்லி, வஞ்சனை செய்யும் பதிவல்ல. புதிய நோட்டு / சில்லறை மாற்ற முயற்சித்த போது எனக்கு கிடைத்த நல்ல அனுபவம் இது.
குறிப்பிட்ட நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவித்த நாளன்று என் கையிலிருந்தது 500 ரூபாய் தாள் ஒன்று மட்டுமே. அடுத்த சில நாட்களுக்கு அதை மாற்ற தேவை வரவில்லை. எப்படியும் தேவைப்படும், அடுத்த சில நாட்களில் ஏடிஎம், வங்கிகளில் கூட்டம் குறைந்த பின் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.
ஆனால் நாளுக்கு நாள் கூட்டம் அதிகமானதே தவிர குறையவில்லை. எப்படியும் மாற்றித்தானே ஆக வேண்டும் என முடிவு செய்து, ஞாயிற்றுக்கிழமை, கொட்டிவாக்கத்தில் நான் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கிக்கு விரைந்தேன்.
தனியார் வங்கிகளும் சரியில்லை, வாடிக்கையாளர்களை சரியாகக் கவனிப்பதில்லை போன்ற புகார்களை நானும் கடந்து வந்திருக்கிறேன். எனக்கும் சில தனிப்பட்ட அனுபவங்கள் அப்படி இருக்கிறது. ஆனால் அன்று நடந்த விஷயங்கள் அந்த அபிப்பிராயத்தை மாற்றியது.
ஏற்கெனவே அங்கு பெரிய வரிசை இருந்ததை கடந்த சில நாட்களாக பார்த்த எனக்கு அன்று கூட்டம் சற்று குறைவாக இருந்ததாகவே பட்டது. அரைக் கம்பத்தில் கொடி பறப்பது போல, ஷட்டரை பாதி திறந்து வைத்திருந்தனர். வங்கி வாசலிலேயே வங்கி அதிகாரிகள் இருவர் நின்று கொண்டு, விசாரிக்க வருபவர்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தனர்.
நான் சென்றதும், சார் உங்கள் கணக்கில் காசு இருந்தால் ஒரு காசோலை போட்டு பணத்தை எடுக்கலாம். புது நோட்டு, சில்லறை அதற்கேற்றார் போலத் தருவோம். அதே போல பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் அதை கணக்கில் போட்டு வைக்கலாம். ஆனால் இப்போது பழைய நோட்டுகளை மாற்ற மட்டும் (exchange) இயலாது என்றனர்.
இதை அவர்கள் சொன்ன தொனி மிகவும் பணிவாகவும், தோழமையுடனும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வேளை, ரோட்டில் நின்று கொண்டு, ஒரே கேள்விக்கு மீண்டும் மீண்டும் பதிலளிக்கும் நிலையிலும் அவர்களது அந்த தொனி மாறவில்லை என்பது ஆச்சரியமும், ஆறுதலும் தந்தது.
வீட்டுக்குச் சென்று ஒரு காசோலையைப் பூர்த்தி செய்து, கணக்கில் போட வேண்டிய பழைய 500-1000 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு, எனது அடையாள அட்டை நகல் ஒன்றை பிரதி எடுத்து மீண்டும் வங்கிக்கு சென்றேன். இம்முறை வாசலில், பிளாட்பாரத்தில் ஒருவர் மேஜை போட்டு உட்கார்ந்து பதிலளித்துக் கொண்டிருந்தார். நான் சென்று கேட்டதும் பொறுமையாக என்ன செய்ய வேண்டும் என விளக்கி, பணத்தைப் போடுவதற்கான சீட்டையும் புது நோட்டுகளைப் பெறத் தேவையான படிவத்தையும் தந்தார்.
உள்ளே சென்று, இருந்த சின்ன வரிசையில் நின்று வேண்டிய பணத்தை முதலில் பெற்றுக் கொண்டேன். எனக்குத் தேவையான நூறு ரூபாய் நோட்டுகளை வைத்துக் கொண்டு, மீதியிருந்த 2000 ரூபாய் நோட்டுகளை மீண்டும் செலுத்தி விடலாம் என சீட்டை நிரப்பி வரிசையில் நின்றேன்.
அப்போது என்னை கவனித்த வங்கி ஊழியர் ஒருவர், சார், 2000 ரூபாய் புழக்கத்தில் வரவேண்டும் என்று தான் அதை வெளியே தருகிறோம், நீங்கள் மீண்டும் அதை கணக்கில் போட்டால் எங்கள் நோக்கம் நிறைவேறாது, நீங்கள் வேண்டுமென்றால் அந்த 2000க்கான 1000 ரூபாய் நோட்டுகள் என்னிடம் உள்ளன, இதை கணக்கில் போடுங்கள், உங்கள் 2000 நோட்டுகளை நாங்கள் புழக்கத்தில் விடுவோம் எனப் பொறுமையாக எடுத்துக் கூறினார். அவர் கூறியதில் இருந்த நியாயம் புரிந்தது. அவர் கையிலிருந்த 1000 ரூபாய் தாள்கள் என்னிடம் வந்தது. எனது 2000 நோட்டுகள் அவரிடம் சென்றது.
இவ்வளவு சிக்கலிலும், முகம் சுளிக்காமல், பொறுமையாக எடுத்துச் சொல்லி, சந்தேகங்களை தீர்த்து வைத்து, இன்முகத்துடன் அனுப்பி வைத்த வங்கி ஊழியர்களை நினைத்தால் நிறைவாக இருந்தது.
நம்மைச் சுற்றி ஆயிரம் எதிர்மறை செய்திகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. உண்மையா, புரளியா எனத் தெரியாமல் பல்லாயிரம் தகவல்கள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவி வருகின்றன. ஏராளமானோர் தங்களுக்கு அடிப்படை கூட சுத்தமாக தெரியாத விஷயங்கள் குறித்து விமர்சனம் செய்து ஆராய்ந்து வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் சுற்றியிருப்பவர்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாதவர்கள் எல்லாம், தங்களுக்கு பிரச்சினை என வரும்போது மனிதாபிமானி ஆகி நீலிக் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
இவ்வளவுக்கும் நடுவில் நாமும் ஏன் நமக்கு வந்த கஷ்டத்தை, சில்லறை இன்றி படும் அவஸ்தையை மட்டுமே பெரிதாக்கி எழுத வேண்டும்? இப்படிப்பட்ட நல்ல அனுபவங்களும் அதிகமாக அறியப் படவேண்டும் தானே என்ற நோக்கிலேயே இதை எழுதுகிறேன்.
குறிப்பு: வங்கிக்கு விளம்பரம் போல இருக்க வேண்டாம் என்ற நோக்கிலேயே வங்கியின் பெயரைக் குறிப்பிடவில்லை.
No comments:
Post a Comment