Tuesday, November 15, 2016

பருவத்தே பணம் செய்: நகைச் சீட்டு சேரலாமா?


சேமிப்பு என்பது நம்மில் பலருக்கு வாழ்வாதாரம். அதனால்தான் அதில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். நம் சராசரி வயது அறுபத்தைந்து என்று வைத்துக்கொள்வோம். அதில் முதல் இருபது ஆண்டுகள் படிப்புக்காகச் செலவாகிவிடும். அடுத்த முப்பது ஆண்டுகள் நாம் முழு மூச்சோடு உழைக்கும் காலகட்டம். அந்தக் காலகட்டத்தில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும். பெற்றோருக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து முடிக்க வேண்டும். நமக்குப் பிறக்கும் குழந்தைகளின் கல்விக்காகத் திட்டமிட வேண்டும்.

மீதமுள்ள பதினைந்து ஆண்டுகள் நம் ஓய்வு காலம். இளமைக் காலத்தை எண்ணி ரசித்தபடி, நம் குடும்ப வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை அசைபோட்டபடி, பிள்ளைகளின் வெற்றிகளைக் கண்டு பெருமிதப்பட்டபடி கழிக்க வேண்டிய காலகட்டம். ஆனால், அந்த ஓய்வு காலத்திலும் பசிக்கும். உடல் நலத் தேவைகளுக்காகப் பணம் செலவிட வேண்டியிருக்கும்.

இந்தத் தேவைகளுக்கு எங்கே போவது? நாம் நம் பெற்றோருக்குச் செய்தது போல, நமக்குப் பிள்ளைகள் செய்வார்கள் என்று அவர்களை நம்பி இருக்கலாமா? இருக்கலாம், ஆனால் நாம் சுமையாகத் தோன்றும் நிலை வந்துவிடக் கூடாது. அதனால், ஓடியாடி உழைக்கும் காலத்திலேயே எல்லாத் தேவைகளுக்கும் போக மீதம் ஒரு தொகையைச் சேமித்து வந்தால், ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

அதனால்தான் சேமிப்பு முக்கியம் என்று கூவ வேண்டியிருக்கிறது. சரி, சேமிக்கவில்லை என்றால் என்ன? இப்போதைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ நினைப்பவர்கள், தள்ளாத வயதிலும் பத்து மணி நேரம் வேலை செய்யும் முதியோர்களைக் கொஞ்சம் பாருங்கள். உங்கள் எண்ணம் தானாகவே மாறும்.

சீட்டு வளையம்

சீட்டு விஷயத்தைப் பற்றிப் பேசும்போது ஒரு விஷயத்தை விட்டுவிட்டேன். அது நகைச் சீட்டு. மத்தியத்தர மக்களை மிகவும் கவரக்கூடிய விஷயம் இந்த நகைச் சீட்டு. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டிக்கொண்டே வந்து, குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கட்டிய தொகைக்கு ஏற்பத் தங்க நகையாக வாங்கிக்கொள்ளும் திட்டம் இது.

பத்திரிகைகளிலும் தொலைக் காட்சிகளிலும் விளம்பரங்களைக் கொட்டும் பெரிய நகை விற்பனை நிறுவனங்கள்கூடத் தங்கள் வாடிக்கையாளர்களை இந்தச் சீட்டு வளையத்துக்குள் சிக்கவைக்கப் பிரயத்தனப்படுகிறார்கள். அப்படி இருக்கும்போது சின்னச் சின்ன நகைக் கடைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

கார், கம்ப்யூட்டர், பைக் போன்ற பரிசுகள், சேமிப்பில் பல சலுகைகள் என்று எல்லா வித்தைகளையும் காட்டி வாடிக்கையாளர்களை மடக்கப் பாடுபடும் இந்த நகைச் சீட்டு விஷயத்தில், நாம் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தெளிவு தேவை

முன்பு இரண்டு, மூன்று ஆண்டுகள் என்று நீண்ட கால அளவில் சீட்டுகள் சேர்க்கப்பட்டன. ஆனால், சீட்டு என்பதும் பணப் பரிவர்த்தனைதான். அதை ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரத்தான் வேண்டும். பதினோரு மாதங்களைத் தாண்டிய எந்தச் சேமிப்புக்குமே கணக்கு சொல்ல வேண்டிய நிலை இருப்பதால், இப்போதெல்லாம் நகைச் சீட்டாகவே இருந்தாலும் பதினோரு மாதங்கள்தான் பரவலாகக் கணக்கிடப்படுகின்றன. அதைத்

தாண்டிய கால அளவைச் சொல்லும் நகை விற்பனை நிறுவனங்களிடம் ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்டுக்கொண்டு சீட்டில் சேருவது நல்லது.

கவர்ந்திழுக்கும் விளம்பரங்கள்

“எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் ஐந்து கிராம் தங்கம் போனஸாகக் கிடைக்கும். எங்கள் சீட்டில் பத்து மாதங்களுக்கு மட்டும் தொகையைச் செலுத்திவிட்டு பதினோரு மாதங்களுக்குரிய பலனை அடையலாம். எங்கள் நிறுவனச் சீட்டில் சேர்ந்தால் கார் பரிசு கிடைக்கும்” என்றெல்லாம் விளம்பரம் செய்வார்கள். நாம் கொடுக்கும் பணத்துக்கு ஈடாகத் தங்கம் தருவதாகச் சொல்லும் இவர்களால் எப்படி இந்தக் கூடுதல் பரிசுகளை நமக்குத் தர முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

தரம் முக்கியம்

சீட்டு கட்டும் மக்களுக்கு நகை விற்பனை நிறுவனங்கள் போலியான, தரமில்லாத தங்க நகைகளைக் கொடுக்கிறார்கள் என்று சொல்லவில்லை. நமக்குப் பழக்கமான 22 கேரட் நகையை நினைத்துக்கொண்டு சீட்டு கட்டுவோம். கடைசியில் அவர்கள் 18 கேரட் நகையைக் கொடுத்தால் என்னாவது? அதனால், சீட்டில் சேருவதற்கு முன்பே இதைத் தெளிவுபடுத்திக்கொள்வது நல்லது.

நீங்கள் சீட்டு கட்டிச் சேமிக்கும் பணத்துக்கு ஈடான நகைகளை, செய்கூலி சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். கடைக்குப் போய்ப் பார்த்தால் கண்ணுக்கே தெரியாத பொடி எழுத்தில் குறிப்பிட்ட மாடல்களுக்கு இந்தச் சலுகை பொருந்தாது என்று போட்டிருப்பார்கள். நாம் நகை வாங்குவதே ஆண்டுக்கு ஒருமுறை. அதில் நவீன மாடல்களை வாங்க முடியாமல் முட்டுக்கட்டை போடும் விஷயமாக இந்த நகைச் சீட்டு அமைந்துவிடக் கூடாது.

அதேபோல கல் பதித்த நகைகள் கணக்கில் வராது, வைர நகைகளை நாங்கள் சீட்டுப் பணத்துக்கு ஈடாகத் தர மாட்டோம், நாணயங்களாகவோ, பிஸ்கெட்டுகளாகவோ தர மாட்டோம் என்றெல்லாம் நிபந்தனைகள் போட்டிருப்பார்கள். அதையும் கவனமாகத் தெரிந்துகொண்ட பிறகு சீட்டுச் சேரும் முடிவை எடுப்பது நல்லது. ஆனால், எல்லா நிபந்தனைகளையும் தடைகளையும் தாண்டி ஏதோ ஒரு வகையில் நாம் சேமிக்க வேண்டும். அது முக்கியம்.

சரி, தங்கத்தில் செய்யும் சேமிப்பு நல்லதா, கெட்டதா? அடுத்து அதைத்தான் பார்க்கப் போகிறோம்.

(இன்னும் சேமிக்கலாம்)
கட்டுரையாளர், முதலீட்டு ஆலோசகர்
தொடர்புக்கு: cmbabu2000@gmail.com

No comments:

Post a Comment

PG med counselling ’24, after delay, from Nov 8

PG med counselling ’24, after delay, from Nov 8  TIMES NEWS NETWORK 02.11.2024 Chennai : PG medical counselling for 2024, which faced signif...