வருமுன் காப்போம்
By அ. பன்னீர்செல்வம் | Published on : 14th November 2016 01:54 AM | அ+அ அ- |
பன்னாட்டு சர்க்கரை நோய் கூட்டமைப்பு உலகம் முழுவதும் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நவம்பர் 14}ஐ உலக சர்க்கரை நோய் தினமாக அறிவித்தது.
சர்க்கரை நோயைத் தடுப்பதற்கு உண்டான சாத்தியக் கூறுகள் 1997 வரை இல்லாமல் இருந்தது. தடுப்பதற்கு சாத்தியம் இல்லை என்றும் கூறப்பட்டு வந்தது.
1997-இல் சீனாவில் நடந்த ஓர் ஆய்வில் இரண்டாம் வகை சர்க்கரை நோயை உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் 42% வரை தடுக்க முடியும் என்ற தகவல் வந்தது. அதையடுத்து அமெரிக்காவில் நடந்த ஆய்வில் 58% வரை தடுக்க முடியும் எனத் தெரிய வந்தது.
அதையடுத்து இந்தியாவில் நடந்த ஆய்வு முதல் பல நாடுகளில் நடந்த ஆய்வுகள் சரக்கரை நோயை வராமல் தடுப்பதற்குண்டான வழிமுறைகள் உள்ளன. வந்துள்ளதை மிக ஆரம்பத்திலேயே கண்டறிந்து (சாப்பிடுவதற்கு முன் 100-125 மி.கி.%, சாப்பிட்டு இரு மணி நேரம் பொறுத்து 140-200 மி.கி.%, மூன்று மாத சராசரி அளவு - 5.7 - 6.5%) தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தால் இயல்பு நிலைக்கும் சென்று விடுகிறது.
அதாவது சாப்பிடும் முன் 100 மி.கி.%க்கு குறைவாக, சாப்பிட்டபின் 140 மி.கி.%க்கு குறைவாக, மூன்று மாத சராசரி அளவு 5.7%க்கு குறைவாக வைத்துக் கொள்ள முடியும்.
சர்க்கரையின் அளவை மாதம் ஒரு முறை பார்த்துக் கொண்டும், மூன்று மாத சராசரியை மூன்று மாதத்திற்கு ஒரு முறையும் பார்த்து வந்தால் இந்நோய் தொடர் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தற்போது சர்க்கரையின் அளவு 250 மி.கி.% (அ) 300 மி.கி.% அளவிற்கு மேல் சென்று, மூன்று மாத சராசரியும் எட்டு (அ) ஒன்பதுக்கும் மேல் சென்றும் அதைக் கட்டுப்படுத்துவதற்குண்டான எவ்வித தொடர் முயற்சியும் எடுக்காததால் அநேக பேர் அவதியுறுகின்றனர்.
பின்விளைவுகள் வந்தபின்தான் தனக்கு சர்க்கரை நோய் உள்ளதையே உணருகிறார்கள். இந்நோயின் மிக ஆரம்பம் எவ்வித அறிகுறியையும் தருவதில்லை. சில நேரங்களில் சர்க்கரை நோயாளர்களுக்கு ஏற்படும் மாரடைப்பும் (வலியில்லாமல்) அறிகுறியின்றிதான் உள்ளது.
படித்த நாம் ஏற்கெனவே பெரியம்மை, போலியோ போன்றவற்றை தடுப்பூசிகள் மூலம் ஒழித்துள்ளோம். கினிவேர்ம் மற்றும் நீரால் பரவக்கூடிய பல நோய்களைத் தடுத்துள்ளோம். சமீபத்தில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளோம்.
ஆனால் சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசும் மக்களுடனும், அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து இந்நோய் வராமல் தடுப்பது எப்படி, மிக ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது எப்படி, கண்டுபிடித்தபின் இயல்புநிலையில் தொடர்ந்து வைத்துக் கொள்வது எப்படி, பின் விளைவுகள் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இந்நோயின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கலாம்.
சர்க்கரை சத்து, கொழுப்புச் சத்து, உப்புச் சத்து உள்ள உணவு வகைகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளதால் மக்களின் மோகம் இயல்பாகவே அதன் பக்கம் கடந்த 15 ஆண்டுகளாக திரும்பிவிட்டது.
மேலும் ஒரு காலத்தில் 1950களில் அனைத்து வேலைகளும் மனித உடலுழைப்பால் செய்யப்பட்டன. அதன்பின் மின்மயமானது. தற்போது கணினி மற்றும் தொலைவில் இருந்து செயல்படுத்த உபகரணங்கள் (தங்ம்ர்ற்ங்)வந்துவிட்டன. உடலுழைப்பின்றி தற்கால மனிதன் சர்க்கரை சத்து அதிகமுள்ள உணவுகளை உண்பதால் உடல் எடை கூடுகிறது.
இயல்பாக சுரக்கும் இன்சுலின் சரிவர வேலை செய்ய மறுக்கிறது. இயல்பான சுரப்பு குறைய ஆரம்பித்து சர்க்கரை நோயை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதனுடன் கொலஸ்ட்ரால் அளவுகளும் ரத்தத்தில் கூடுதலாகின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகி ரத்தக் குழாய்களில்
அடைப்பு ஏற்பட்டு அது மாரடைப்பாகவோ பக்கவாதமாகவோ சிறுநீரக செயலிழப்பாகவோ மாறுகிறது.
கால்களில் புண் ஆறவில்லை. பார்வை குறைகிறது என்று பின்விளைவுகள் வந்தபின் சர்க்கரை நோய்க்கும், மிகு ரத்த அழுத்தத்திற்கும் சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர். இவைகளை ஆரம்பத்தில் கண்டறிந்து தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மது அருந்தும் பழக்கமும், புகை பிடிக்கும் பழக்கமும் எந்த அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் குறைந்தபாடில்லை. சர்க்கரை நோய், மிகு ரத்த அழுத்த நோயுடன் இப்பழக்கங்களும் இருந்தால் சிகிச்சை அளித்தும் பயன்
இருக்காது என்பதை நாம் புரிந்து
கொள்ள வேண்டும்.
பெரியம்மை, போலியோ போன்ற நோய்களை ஒழிக்க தடுப்பு மருந்துகள் இருந்தது போல் சர்க்கரை நோயை ஒழிக்க தடுப்பு மருந்து ஏதும் இல்லை. தடுப்பு மருந்து இல்லாமல் கினி வேர்ம், தொழுநோய், காலரா, சிரங்கு மற்றும் குடும்பக் கட்டுபாடு முறைகளை விழிப்புணர்வு மூலம் வெற்றிகண்டுள்ளோம்.
மக்களிடம் ஏற்படுத்தப்படும் தொடர் விழிப்புணர்வுதான் இந்நோயின் தாக்கத்தைக் குறைக்கும். இல்லையேல்
ஆண்டுக்கு ஆண்டு உலக நீரிழிவு தினத்தை தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரித் போல கொண்டாடிக் கொண்டிருக்கலாமேயொழிய மக்களுக்கு பயன் இருக்காது.
(இன்று உலக சர்க்கரை நோய் தினம்)
கட்டுரையாளர்: நீரிழிவு மருத்துவர்.
No comments:
Post a Comment