ஆத்திரப்படுவதில் அர்த்தமில்லை!
By ஆசிரியர் | Published on : 14th November 2016 01:50 AM |
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அதிரடி அறிவிப்பாக ரூ.500, ரூ.1000 காகிதச் செலாவணிகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வங்கிகளின் முன்னாலும், ஏ.டி.எம். இயந்திரங்களின் முன்னாலும் நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அன்றாடச் செலவுக்குக்கூடப் பணமில்லாமல் சாமானியர்கள் தவிக்க வேண்டியதாகி விட்டது என்பதில் சந்தேகமே இல்லை.
÷அரசின் அதிரடி முடிவு மக்களின் அன்றாட வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், "இந்த முடிவால் கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது, கள்ளநோட்டுகளுக்கு முடிவு கட்டிவிட முடியாது என்றெல்லாம் பேசுவது (பிதற்றுவது)' அரசியலே தவிர, தேசத்தின் மீது உண்மையான அக்கறையும், பொறுப்புணர்வும் கொண்டவர்கள் பேசுகிற பேச்சல்ல.
÷அதேபோல, எல்லா வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் போதிய பணத்தை முன்கூட்டியே கிடைக்கும்படி செய்திருந்தால், பொதுமக்கள் இந்த அளவுக்கு அவதி அடையத் தேவையில்லைதான். ஆனால், அப்படியெல்லாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டிருந்தால், கருப்புப் பண முதலைகள் மோப்பம் பிடித்திருப்பார்கள்.
÷இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படும்போது பொதுமக்கள் அவதிக்குள்ளாவது தவிர்க்க முடியாதது. நில உச்சவரம்பு கொண்டுவந்தபோது, இதேபோலத்தான் மிகப்பெரிய ஓலம் எழுப்பப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்தவித சிரமமோ பாதிப்போ கூடாது என்றால், மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
÷பிரதமர் நரேந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பின்னால், ஏறத்தாழ இரண்டு ஆண்டுத் திட்டமிடல் இருந்திருக்கிறது என்பது இப்போது தெரிகிறது. யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம், மிகவும் ரகசியமாகவும், சாதுரியமாகவும் பிரதமர் மோடி காயை நகர்த்தி வந்திருக்கிறார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை சட்டப்படி இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டு வருவது இயலாது என்பதைத் தெரிந்து கொண்டது முதல், கருப்புப் பணத்துக்கு எதிரான தனது தாக்குதலுக்குப் புதிய வியூகத்தை அவர் வகுக்கத் தலைப்பட்டிருக்கிறார்.
÷தொடர்ந்து வெளிநாடுகளுக்கு பிரதமர் பயணித்ததற்குப் பின்னால், இந்தப் பிரச்னையும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் தொடங்கி, எந்தெந்த நாட்டு வங்கிகளிளெல்லாம் இந்தியர்களின் கருப்புப் பணம் அதிகமாகக் காணப்படுகிறதோ, அந்த நாடுகளிடம், இந்தியர்களின் கணக்குகள் குறித்த பட்டியலை இந்திய அரசு கோரத் தொடங்கியது. விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக அவர்கள் அந்தக் கருப்புப் பணத்தை ஹவாலா பரிமாற்றத்தின் மூலமும், அந்நிய முதலீடு என்கிற பெயரிலும் இந்தியாவிற்குக் கொண்டு வர முற்பட்டனர்.
÷அடுத்தபடியாக, சாமானியர்கள் தங்களது கையிருப்புகளையும் சேமிப்புகளையும் மாற்றிக் கொள்வதற்கு வழிகோலும் வகையில் "ஜன் தன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி நிலவரப்படி 25.45 கோடி புதிய வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ஒரு புறம், நேரடி மானியம் செலுத்துவதற்கும், இன்னொரு புறம், தங்களிடம் இருக்கும் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றுவதற்கும் இது உதவப் போகிறது. அடுத்த சில நாள்களில் புதிய ரூ.500, ரூ.2000 வரும்வரை மட்டுமே சாமானியர்கள் சிரமப்பட வேண்டிவரும். அதற்குப் பிறகு, அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருப்பதால் அடித்தட்டு வர்க்கத்தினர், சாமானியர்கள், நேரிடையாக வரி செலுத்துபவர்கள் யாருடைய சேமிப்பும் பாதிக்கப்படாது.
÷கருப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு தரும் வகையில் கணக்கில் காட்டாத பணத்தை, வரியும் அதற்கான அபராதமும் செலுத்தி சரி செய்து கொள்ளும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்தனைக்கும் பிறகுதான், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால், கருப்புப் பணம் வைத்திருப்பவர்களேகூட அரசைக் குறை சொல்வது நியாயமாகாது.
÷நாட்டில் ஏறத்தாழ 17,60,000 கோடி ரூபாய் புழங்குவதாகக் கூறப்படுகிறது. இதில் ஐந்து அல்லது ஆறு லட்சம் கோடி ரூபாய் கணக்குக் காட்டாதவையாக இருக்கும். அவை வரி வலையில் வந்து விடும். புழக்கத்தில் இருக்கும் இன்னொரு நான்கு முதல் ஐந்து லட்சம் கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் செயலிழந்துவிடும். கணக்குக் காட்ட முடியாமல், வங்கியில் செலுத்த முடியாமல் இருக்கும் சுமார் நாலரை லட்சம் கோடி ரூபாய் குப்பைக் காகிதமாகிவிடும். இவையெல்லாம் புழக்கத்திலிருந்து அகலும்போதுதான், இந்தியப் பொருளாதாரம் நிஜமான நிலைக்குத் திரும்பும். வரும் டிசம்பருக்குப் பிறகுதான் இந்தியா நிஜமான வளர்ச்சியையும், நிலைமையையும் காணப் போகிறது.÷பிரதமர் நரே ந்திர மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக, இந்தியப் பொருளாதாரம் வரும் ஜனவரி முதல் நியாயமான, எதார்த்தமான வளர்ச்சியை நோக்கி நகரப் போகிறது. அடுத்த இரண்டாண்டுகளில் நாம் 12% வளர்ச்சியை அடைந்தால் வியப்படையத் தேவையில்லை. இதுதான் பிரதமரின் நோக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
÷பிரதமருக்கும் அரசுக்கும் ஒரு வேண்டுகோள். சிறு வியாபாரிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு வரி கட்டாததற்கு 200% அபராதம் என்பது கடுமையானது. இது அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுத்தக்கூடும். அதை வெறும் 45% அபராதமாக அறிவித்து, இனியாவது பொறுப்புள்ள குடிமக்களாக நடந்துகொள்ள அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட வேண்டும்!
No comments:
Post a Comment