ஜெயலலிதா மகன்' என வாலிபர் திடீர் வழக்கு:
ஆவணங்களை சரிபார்க்க ஐகோர்ட் உத்தரவுசென்னை:'மறைந்த முதல்வர் ஜெயலலிதா வுக்கு பிறந்த என்னை தத்து கொடுத்து விட்டனர்; சசிகலாவின் ஆட்களால் ஆபத்து உள்ளது; எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கிருஷ்ண மூர்த்தி என்ற வாலிபர், மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தில் ஆஜரான அவரிடம், ''ஆவணங் கள் எல்லாம் போலியாக தெரிகின்றன; இப்போதே சிறைக்கு அனுப்ப முடியும்; இருந்தாலும், இந்த ஆவணங்களை சரிபார்த்து அறிக்கை அளிக்கும்படி, போலீஸ் ஆணைய ருக்கு உத்தரவிடுகிறேன்,'' என, நீதிபதி மகாதேவன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, ஜெ.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு:மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மகனாக, 1985 பிப்., 15ல் பிறந்தேன். நான் குழந்தையாக இருக்கும் போது, பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், காஞ்சிக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த, வசந்தாமணி என்பவரிடம், என்னை ஒப்படைத்து விட்டனர்.
மறைந்த முதல்வர், எம்.ஜி.ஆர்., முன்னிலை யில், 1986ல், என்னை தத்து கொடுத்துவிட்டனர். ஈரோடு மாவட்டத்தில், வளர்ப்பு பெற்றோரிடம் வளர்ந்தேன். பலமுறை, என் தாயார் ஜெயலலிதாவை சந்தித்துள்ளேன். 2016 செப்டம்பரில் ஜெயலலிதாவை சந்தித்தேன்.
அப்போது, மார்ச், 14 முதல், 18க்குள், பொதுமக்களுக்கு என்னை அறிமுகப்படுத்துவ தாக, என் தாயார் தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதெல்லாம், சசிகலாவுக்கு தெரியும். தாயாரின் முடிவுக்கு, சசிகலா எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்தார்.
அதன்பின், செப்., 22ல், அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்; டிச., 5ல் இறந்தார். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, சசிகலாவும், அவரது உறவினர்களும், என்னை அனுமதிக்க வில்லை.
டி.டி.வி.தினகரனின் துாண்டுதலில், அடையாளம் தெரியாதவர்கள், என்னை கடத்தி சென்று, சிறுதாவூர் பங்களாவில்அடைத்தனர். அங்கு சித்ரவதை செய்தனர். வாட்ச்மேன் உதவியுடன், அங்கிருந்து நான் தப்பினேன்.சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமியை அணுகும்படி, என் நல விரும் பிகள் தெரிவித்தனர். மார்ச், 11ல், அவரது அலுவலகத்தில் சந்தித்து விபரங்களை கூறினேன். தாயாரின் சொத்துகளை சட்டப்படி பெற்று தர உதவும்படி கேட்டு கொண்டேன்.
எனக்கும், வளர்ப்பு பெற்றோருக்கும் பாதுகாப்பு வழங்கும்படி, அரசுக்கு மனு அனுப்பினேன். என் உயிருக்கு, சசிகலா உறவினர்களால் ஆபத்து உள்ளது. எனக்கு தேவையான பாதுகாப்பு வழங்கும் படி, டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, விசாரணைக்கு ஏற்புடையது தானா என்பது குறித்து முடிவு செய்ய, நீதிபதி மகாதேவன் முன் பட்டியலிடப்பட்டது. மனுதாரரான கிருஷ்ண மூர்த்தி, நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருடன், 'டிராபிக்' ராமசாமியும் இருந்தார். அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார். மனுவையும், தத்து கொடுத்ததற்கான ஆவணங் களையும் பார்த்த, நீதிபதி மகாதேவன் கூறியதாவது:
இந்த ஆவணங்களை எல்லாம், எல்.கே.ஜி., மாணவனிடம் கொடுத்தால் கூட, அவை போலியா னவை என, கூறிவிடுவான்; வெளிப்படையாக கிடைக்கக்கூடிய, ஜெயலலிதாவின் புகைப்படத்தை இணைத்துள்ளீர்கள். யார் வேண்டுமானாலும் நீதி மன்றத்துக்கு வந்து,பொதுநல வழக்கு தொடுக்க லாம் என, நினைக்கிறீர்களா?
போலி ஆவணங்களை தாக்கல் செய்திருப்பது தெரிகிறது;நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். நேரடியாகவே, உங்களை சிறைக்கு அனுப்ப முடியும். முதலில், போலீஸ் ஆணையர் முன், நாளை ஆஜராகி, அசல் ஆவணங்களை, அவரிடம் ஒப்படையுங்கள்.
எம்.ஜி.ஆர்., உடல்நலம் சரியில்லாமல், கையை கூட அசைக்க முடியாத நிலையில் இருந்தார். அந்த நேரத்தில் தான், இந்த ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன; அதில், எம்.ஜி.ஆர்., கையெழுத்திட்டிருப்பதாக காட்டுகிறது; இதை, நம்ப முடியவில்லை.இவ்வாறு நீதிபதி கூறினார்.
பின், அரசு பிளீடர் எம்.கே. சுப்ரமணி யனை பார்த்து, ''ஆவணங்கள் சரியானது தானா என்பதை, போலீஸ் ஆணையர் சரிபார்க்கட்டும்; திங்கள் அன்று அறிக்கை தாக்கல் செய்யுங்கள்,'' என, நீதிபதி கூறினார்.விசாரணையை, 20க்கு, நீதிபதி மகாதேவன் தள்ளிவைத்தார்.
ராமசாமிக்கு கேள்வி
இந்த வழக்கில், டிராபிக் ராமசாமிக்கு என்ன தொடர்பு என, நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார்.
மனுதாரரான கிருஷ்ணமூர்த்தியுடன், டிராபிக் ராமசாமியும், நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். அவரிடம், ''ஆவணங்களை பார்த்தீர்களா; நீங்கள், பல பொதுநல வழக்குகளை தொடுத்து, உன்னதமான பணிகளை செய்துள்ளீர்கள்; உங்களுக்கு, இதில் என்ன தொடர்பு,'' என, நீதிபதி கேட்டார்.
அதற்கு, டிராபிக் ராமசாமி, ''உதவி செய்யும்படி கேட்டார்; நீதிமன்றம் விசாரித்து, முடிவு செய்யட்டும்; உங்களின் முடிவுக்கு விட்டு விடுகிறேன்,'' என்றார்.