Friday, March 17, 2017

சசிகலாவை வாழ்த்துவதா?- அவையில் திமுக கடும் எதிர்ப்பு

சட்டப்பேரவையில், பட்ஜெட் உரையின்போது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை வாழ்த்திப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அவையில் சிறிது நேரம் அமளி நீடித்தது.

2017 - 2108 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று (வியாழக்கிழமை) கூடியது. நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, அமைச்சர் டி.ஜெயக்குமார் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை வாழ்த்திப் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் திமுகவினர் கோஷமிட்டனர். கூச்சல் அதிகமாகவே குறுக்கிட்ட அவைத்தலைவர் ப.தனபால், எதிர்க்ட்சி உறுப்பினர்கள் அமைதிகாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் திமுகவினர் தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். கூச்சலுக்கு மத்தியிலும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பவே, அவர் உரையை சிறிது நேரம் நிறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தனது கருத்தை தெரிவிக்க சபாநாயகர் அனுமதி வழங்கினார். அப்போது ஸ்டாலின், "சிறையில் இருப்பவரை அவையில் வாழ்த்திப் பேசுவதை ஏற்க முடியாது. சசிகலா பெயரை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் பதிலளித்தபோது, "கட்சியின் பொதுச்செயலாளர் பெயரை குறிப்பிடுவது மரபுதான்" என்றார்.

இதை திமுக ஏற்காததால் சபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் பட்ஜெட் உரையை அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024