Friday, March 17, 2017

மொழி கடந்த ரசனை 25: இந்தியில் ஒரு ‘எலந்தப் பயம்’

எஸ்.எஸ். வாசன்

காலத்தால் அலையாத கருத்து மிக்க பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். ஆனால் இது அவர் எழுதிய பாடல்தானா எனப் பலரைக் கேட்கவைத்த பாடல் ‘எலந்தப் பயம், எலந்தப் பயம்’. எல். ஆர் ஈஸ்வரி தன் வசீகர குரலில் பாடியிருப்பார். பணமா பாசமா என்ற படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்த அந்தப் பாடலில் அடித்தட்டு மக்களின் மொழியும் உணர்வும் ஊற்றாகப் பொங்கி வழியும். படித்தவர்கள் மட்டுமின்றிப் பாமரர்களும் ரசிக்கும் விதம் திரைப் பாடல்களை எழுதும் திறன் பெற்றவர்களே சிறந்த திரை இசைக் கவிஞர்கள் என்பதை இந்தப் பாடல் மூலம் எடுத்துக் காட்டிய கண்ணதாசனுக்கு இணையானவர் ராஜா மெஹதி அலி கான்.


உருது மொழி கலந்த, ஆழமான பொருள் மிக்க மிகச் சிறந்த இந்திப் பாடல்களை எழுதியுள்ள மெஹதி அலி கான், ‘மேரா சாயா’ படத்திற்காக எழுதிய, ‘ஜும்கா கிரா ரே, ரே பரேலி கா பாஜார் மே’ என்று தொடங்கும் பாடல், பல விதங்களில் நம் இலந்த பழம் பாட்டுக்கு நிகரானது. இந்த இந்திப் பாட்டு உத்தர பிரதேசப் பேச்சு வழக்கில் அமைந்த ஒன்று. கிளர்ச்சி தரும் உச்ச ஸ்தாயில் அனாசயமாகப் பாடக்கூடிய எல்.ஆர்.ஈஸ்வரியின் எதிரொலி எனச் சொல்லத்தக்க வகையில் ஆஷா போன்ஸ்லே பாடிய பாடல் இது. ஜிப்ஸி உடையில் எழிலாகத் தோன்றும் சாதனா இளமைத் துள்ளலுடன் ஆடுவது இப்பாடலின் கூடுதல் சிறப்பு.

‘மேரேசாயா’ படம் வெளிவந்து 50 வருடங்களுக்குப் பிறகும் அதே ரசனையை இந்தப் பாடல் நமக்கு அளிக்கிறது. ‘யாஸ்மின்’ படத்தில் வைஜெந்திமாலா பாடி நடித்த ஆடல் காட்சி மட்டுமே சாதனா ஆடிய ஒயில் நடனத்திற்கு இணையாகக் கூறப்படுகிறது. அந்தக் காலச் சூழலின்படி, ஊர்ப் பெரியவர் தலைமையில் கிராம மக்கள் கூடி நிற்கும் திறந்த வெளியில் நடன மங்கை ஆடிப்பாடி மகிழ்விக்கும் இப்பாடலின் இடையிடையே ‘ஃபிர் கியா ஹுவா?’ (அப்புறம் என்ன ஆயிற்று?) என்ற வரிகள் இப்பாடலின் சிறப்பு. சாதனா கூறும் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகப் பின்னணி
இசை வாத்தியக்காரர்களும் இறுதியில் ஊர் பெரிசும் கேட்கும்படி அமைந்த இப்பாடலின் பொருள்:

ஜிமிக்கி விழுந்துவிட்டது, ஜிமிக்கி விழுந்துவிட்டது
ரே பரேலி கடைத்தெருவில் ஜிமிக்கி விழுந்துவிட்டது
ஐய்யோ ஐய்யோ ஜிமிக்கி விழுந்துவிட்டதய்யா
காதலன் வந்தான் கண்ணடித்துச் சிரித்தான் களவு போனது வீடு
‘காதில் ஜிமிக்கி போட்டு விடுகிறேன் வாடி அன்பே’ என்றான்
‘வேண்டாம் வேண்டாம் வம்பு பண்ணாதே’ எனச் சிணுங்கினேன்
அவனிடமிருந்து விடுவித்துக்கொள்ள முயன்ற எனது
இடுப்பை விடவில்லை அந்த எமகாதகன்
‘அப்புறம் என்ன ஆயிற்று’ (ஒரு குரல்)
அப்புறமா, அப்புறம், ஜிமிக்கி விழுந்துவிட்டது
எங்களுடைய இருவரின் தள்ளு முள்ளில்.
பின்னர் ஒரு சமயம்
வீட்டின் மாடியில் நின்றுகொண்டிருந்தேன் நான்
வீட்டு எதிர்த் தெருவில் நின்றான் அவன்
‘கீழே வா அன்பே, உடனே கீழே’ எனச் சிரித்தான்
முடியாது என்றால், ‘மோதிரம் வீசிக் காட்டு உன் சம்மதம்’ என்றான்
அடைந்த வெட்கத்தில் அது கேட்டு நனைந்துவிட்டேன் நான்
‘அப்புறம் என்ன ஆயிற்று’ (கூட்டத்திலிருந்து ஒருவர்)
அப்புறமா, அய்யா அப்புறம்
ஜிமிக்கி விழுந்துவிட்டது எங்கள் இருவரின் காதலின் சக்தியில்
(மற்றொரு தருணம்)
சோலையில் நான் சோர்ந்து இருக்கும்பொழுது
சேலைத் தலைப்பைச் சேர்த்து இழுத்துச் சொன்னான்
‘அடியே அன்பே என்னை ஆட்கொண்டுவிட்டாய் நீ’
விழிகளைத் தாழ்த்தி வெட்கத்தில் சிரித்தேன் மெல்ல
காதலன் சீண்டியபொழுது கரங்கள் இணைந்தன
‘அப்புறம் என்ன ஆயிற்று’ (கோரஸாகப் பலர்)
அப்புறமா அப்புறம் ஜிமிக்கி விழுந்துவிட்டது
இதற்கு அப்புறம் என்னத்தைச் சொல்ல
ஜிமிக்கி விழுந்துவிட்டது, ஜிமிக்கி விழுந்துவிட்டது
ரே பரேலி கடைத்தெருவில் ஜிமிக்கி விழுந்துவிட்டது

மிகவும் வித்தியாசமான கிராமிய இசைப் பின்னணியில் அமைந்த இந்தப் பாடலின் வரிகள் அப்போது வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த சாமனிய மக்களின் பேச்சு வழக்கில் இருந்த உருது, இந்தி, பெர்சிய மைதிலீ மொழிச் சொற்களை பயன்படுத்தி எதுகை மோனை குறையாமல் எழுதப்பட்டுள்ளது.

‘ஜிமிக்கி விழுந்துவிட்டது’ என்ற சொற்றொடர் அதன் சரியான அர்த்தத்தையும் தாண்டிய காதல் சேட்டையின் ஒரு குறியீடாக இப்பாடலுக்குப் பின்னர் உருவகம் கொண்டது. அதே போன்று ‘ரே பரேலி’ (பின்னர் இந்திரா காந்தியின் தொகுதியாக விளங்கிய) என்ற உத்தரப்பிரதேசத்தின் வர்த்தக நகரம் பல திரைப் பாடல்களில் இடம் பெறும் இடமாக மாறியது.

No comments:

Post a Comment

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges

Faculty crunch sends salaries soaring in Bengaluru’s medical colleges Sruthy Susan Ullas Dec 21, 2025,  Faculty crunch sends salaries soari...