Saturday, March 18, 2017

லத்தி வாங்கக்கூட பட்ஜெட் நிதி பத்தாது போலீசார் புலம்பல்

காவல் துறைக்காக, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி, 'லத்தி வாங்கக்கூட பத்தாது' என, போலீசார் புலம்புகின்றனர்.காவல் நிலையங்களுக்கு சொந்தக் கட்டடம் கட்டுதல், காவலர் குடியிருப்புகள் கட்டுதல், வாகனங்கள் மற்றும் கருவிகள் வாங்குதல், காவல் துறையை நவீனமாக்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக, தமிழக பட்ஜெட்டில், 6,963 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 

'வாக்கி டாக்கி'கள்
காவல் துறையில் உள்ள பிரச்னைக்குத் தீர்வுகாண, இந்தத் தொகை பத்தாது என, போலீசார் புலம்புகின்றனர். இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
காவல் துறையில் உள்ள, 'வாக்கி டாக்கி'கள் எல்லாம் பழுதான நிலையில் உள்ளன. நாங்கள், 'ஓவர்' என, வாக்கி டாக்கியில் தெரிவித்தால், காவல் கட்டுப்பாட்டு அறையில் இருப்போர், 'ஒன்றுமே கேட்கவில்லை ஓவர்' என, பதில் அளிக்கின்றனர். அந்தளவுக்கு வாக்கி டாக்கிகளின் தரம் உள்ளது.
காவல் துறை வாகனங்களும், மிக மோசமான நிலையில் உள்ளன.

ஓய்வூதியத் திட்டம்
பல காவல் நிலைய கட்டடங்கள், எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளன. உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு, அலுவலகம் கிடையாது. கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

'எட்டு மணி நேர பணியுடன், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 

'காவல் துறையில் காலியாக உள்ள, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும்; புதிய பணி இடங்களை உருவாக்க வேண்டும்' என, அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
வாரம் ஒரு நாள் கட்டாய ஓய்வுதர இயலாத சூழ்நிலை உருவானால், ஓய்வு நாளில் பணிபுரிவோருக்கு ஒரு நாள் ஊதியம். 

அரசு விடுமுறை நாட்களில் வேலை செய்தால், அந்த நாட்களுக்கு, ஒரு நாள் ஊதியம் தர வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்தோம்; அதற்கும் பட்ஜெட்டில் பதில் இல்லை.

பதவி உயர்வு
அதுபோல, போலீசாருக்கான பதவி உயர்வில், பல குளறுபடிகள் உள்ளன. இடர்படி இரு மடங்காக உயர்த்தித் தரப்படும் என, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்; அதுவும் அறிவிப்பு நிலையிலேயே உள்ளது.
காவல் துறைக்கு, தற்போது ஒதுக்கப்பட்ட நிதி, லத்தி வாங்கக்கூட பத்தாது என்பதே எதார்த்தம்.இவ்வாறு போலீசார் கூறினர்.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024