3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாயமான டாக்டர் குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்
மாயமான டாக்டர் குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். 3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜூலை 01, 2017, 04:45 AM
செங்குன்றம்,
சென்னையை அடுத்த கொளத்தூர், பூம்புகார் நகர் 2–வது பிரதான சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகன் ராஜேஷ்குமார் (வயது 26), மகள் ஸ்ரீலேகா. இவர்களுடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்.
டாக்டரான ராஜேஷ்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்திவந்தார். மருந்து கடையை அவருடைய தந்தை நாகராஜன் கவனித்து வந்தார்.
டாக்டர் ராஜேஷ்குமாருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் 3–ந் தேதி காரைக்குடியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நாகராஜன்–சாந்தி இருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான திருப்பத்தூர் சென்றுவிட்டனர்.
வீட்டில் ராஜேஷ்குமாரும், அவருடைய தங்கை ஸ்ரீலேகாவும் மட்டும் இருந்தனர். கடந்த 28–ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ்குமார் அதன் பிறகு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீலேகா, தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இதுபற்றி கொளத்தூர் போலீசில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷ்குமாரை தேடிவந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கொளத்தூர் பூம்புகார் நகர் அருகே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அண்ணாநகர் துணை கமிஷனர் சுதாகர், வில்லிவாக்கம் உதவி கமிஷனர் ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் முனிசேகர் (கொளத்தூர்), கோபிநாத் (ராஜமங்கலம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குடிநீர் தொட்டியின் மூடியை பொக்லைன் எந்திரம் மூலம் திறந்து பார்த்தனர்.
அப்போது குடிநீர் தொட்டியின் உள்ளே டாக்டர் ராஜேஷ்குமார், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷ்குமாரை யாராவது கொலை செய்து, உடலை குடிநீர் தொட்டியில் வீசிச் சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.
3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் டாக்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
________________________________