Sunday, July 2, 2017

''தமிழ்நாட்டில் பிறந்த கமல்ஹாசன் மட்டும்தான் ஜி.எஸ்.டி.க்கு எதிராக பேசியுள்ளார்..!'' - டி.ராஜேந்தர்
த.கதிரவன்

பிரியங்கா.ப

லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு எதிராகப் பொங்கியெழுந்தவர், 'இதனால் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடும்' என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும், 'வாழவைத்த தமிழ்த் திரைத்துறைக்காகக்கூட குரல் கொடுக்காதவர் ரஜினிகாந்த்' என்றும் விமர்சித்தார். அசரடிக்கும் அவரது பேட்டி அப்படியே இங்கே....



''ஈழத் தமிழர்களுக்குக் கடந்தகால மத்திய காங்கிரஸ் அரசு, துரோகம் இழைத்தது. இந்த ஒரு காரணத்துக்காகவே, அவர்களோடு (காங்கிரஸ்) கைகோத்திருந்த தி.மு.க-வோடு 'லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம்' கூட்டணி சேராது என்று உறுதியாக நின்றவன் நான். அந்த வகையில், காங்கிரஸுக்கு எதிராக, 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பி.ஜே.பி-யின் தாமரையை மலரவைக்க மறைமுக ஆதரவும் கொடுத்தேன். ஆனாலும்கூட, கடந்த ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பி.ஜே.பி அரசு கொண்டுவந்தபோது அதில் உள்ள சில குறைகளையும் தட்டிக் கேட்டேன். இப்போது மத்திய பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி எனும் 'சரக்கு மற்றும் சேவை வரி' என்பது தமிழ்த் திரையுலகைக் கடுமையாகப் பாதிக்கும், தமிழ்த் திரையுலகத்தையே நசுக்கிவிடும்.

இப்போது காலம் கடந்து தமிழ்த் திரையுலகம் போராட்டத்தை அறிவித்திருக்கிறது. வருமுன் காப்பதுதான் புத்திசாலித்தனம். மழை வருவதற்கு முன்பே தூர் வாருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும். இப்போது வெள்ளம், வெள்ளம் என்று கத்துவதால் என்ன பிரயோசனம்? ஜூலை 3-ம் தேதி ஸ்ட்ரைக் என்று 30-ம் தேதி அறிவிப்பது சரிதானா?

வட இந்தியாவை வாழவைக்க நினைக்கிறது மத்திய பி.ஜே.பி அரசு. அது அவர்களுக்கு இருக்கும் பாசம். ஆனால், அதற்காக தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பிராந்திய மொழிப் படங்களை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. மாநில அரசின் உரிமைகளை மீறி உள்ளே நுழைகிறது மத்திய அரசு.

ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 28 சதவிகிதம் மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதிக்கிறது. மாநில அரசு அதே டிக்கெட்டுக்கு 30 சதவிகித கேளிக்கை வரி விதிக்கிறது. இதர வரிகளையும் சேர்த்து மொத்தம் 64 சதவிகித வரியை அரசுக்குக் கட்ட வேண்டியிருக்கிறது. மீதம் இருப்பது வெறும் 36 சதவிகிதம். இந்த 36 சதவிகிதத்தில்தான் திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் பங்கு பிரித்துக்கொள்ள வேண்டும். உடம்பில் இருக்கிற ரத்தத்தையெல்லாம் இப்படி உறிஞ்சிவிட்டால் நாங்கள் எப்படி வாழ முடியும்?

'தமிழில் தலைப்பு வைக்கும் படங்களுக்கு முழு வரிவிலக்கு' என்பது தி.மு.க அரசிடம், லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகம் போராடிப் பெற்றது. அதன்பிறகு வந்த அ.தி.மு.க அரசு, இந்த வரிவிலக்கை வேறுவிதத்தில் வழங்கிக் கொண்டிருந்தது. ஆனால், இன்றைய அரசு இந்த வரிவிதிப்பில் மாறுபடுவது ஏன்? ஒருவேளை இவர்களை ஆட்டிப்படைக்கிறதா மத்திய அரசு? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடப்பது என்ன அ.தி.மு.க அரசா? நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்துப் போட்ட இவர்களால்தான், இப்போது நீட் தேர்வு வந்து கிராமத்து பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எல்லோரும் பாதிக்கப்படுகிறார்கள்.



'அடிக்கிற மாதிரி அடிப்போம்... வலிக்கிற மாதிரி நடியுங்கள்' என்பதுபோல் இருக்கிறது மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கைகள். ஏற்கெனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி என்று 28 சதவிகித வரி விதிப்பார்களாம். அடுத்ததாக தமிழக அரசு கேளிக்கை வரி 30 சதவிகிதம் விதிப்பார்களாம். இப்போது இதனை எதிர்த்து வருகிற 3-ம் தேதியிலிருந்து திரைத்துறையினர் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை அடுத்து, மாநில அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்துவிடுவார்கள். அப்புறம் ஜி.எஸ்.டி வரிக்கு எதிராக யாரும் போராட மாட்டார்கள் என்பதுதான் இவர்களது திட்டம்.

சினிமாவை எந்த அரசு வாழவைத்திருக்கிறது? இணையத்தில் படம் வெளியாகிவிடுகிறது. எங்களது காப்பிரைட்ஸுக்கு என்ன உத்தரவாதம்? 70 வருட வரலாற்றில், எந்த மத்திய அரசு கேளிக்கை வரி விதித்திருக்கிறது? என்ன புதிய வரலாறு படைக்கிறீர்களா?
ஆந்திர அரசு குறைந்த அளவில் வரி வசூலிக்கிறது. கர்நாடகம், கேரளவில் கேளிக்கை வரியே கிடையாது. அதாவது கேரள அரசு கேளிக்கை வரியை ரத்து செய்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு மட்டும் தமிழ்த் திரையுலகத்தின் மீது ஏன் காழ்ப்பு உணர்ச்சி காட்டுகிறது? என்ன காரணம்? ஏற்கெனவே சினிமாத் தியேட்டருக்கு வருகிற கூட்டம் குறைஞ்சுப் போச்சு. சின்னப் பட்ஜெட் படங்கள் எல்லாம் செத்துக் கொண்டிருக்கின்றன. திரைத்துறையை அழிக்காதீர்கள். எவ்வளவு பெரிய தலைவர் இறந்தாலும் ஒருவாரத்துக்கு மேல் திரையரங்குகளை மூடமுடியாது. நாடு கொந்தளித்துவிடும். எச்சரிக்கையாகவேச் சொல்கிறேன்... நாட்டில் நடக்கிற கொலை, கொள்ளை, பலாத்காரம் என எல்லாக் குற்றங்களையும் தடுக்கும் சக்தியாக, வடிகாலாக இருக்கிறது சினிமா. எனவே, சினிமாவை அழிக்க நினைக்காதீர்கள்... நாட்டில் சட்டம் ஒழுங்கே கெட்டுவிடும்!

'நம்முடைய பிரதமர் மோடியும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் ரொம்பவும் நெருக்கம். அதனால், ஜி.எஸ்.டி பிரச்னையில், ரஜினிகாந்த் குரல் கொடுக்க வேண்டும்' - என்று அம்மா சினி கிரியேஷன்ஸ் சிவா சொன்னார். ஆனால், நேற்று ராத்திரி வரையிலும் ரஜினிகாந்த் குரல் கொடுக்கவில்லை.

என்னை வாழவைத்தது தமிழ்த் திரையுலகம். திரையரங்கம்தான் என்னுடைய கோயில். ரசிகர்கள்தான் என் தெய்வம். நான் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கைச் சோற்றையும் சினிமாதான் எனக்குக் கொடுத்தது. அந்தப் பெத்த தாய்க்காகத்தான் நான் இப்போது குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தன்னை வாழவைத்த திரையுலகுக்காக இதுவரையிலும் குரல் கொடுக்காத ரஜினிகாந்துதான், தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுப்பார் என நம்புகிறீர்களா?



ரஜினிகாந்த் நல்ல நடிகர், பெரிய சூப்பர்ஸ்டார் எல்லாம் ஓ.கே. ஆனால், தன்னை வாழவைத்த சினிமாவுக்காகவே குரல் கொடுக்கவில்லையே? இந்த வரிவிதிப்பினால், சின்னப் படங்கள் எல்லாம் அழிந்துபோகுமே.... இதுபோன்ற சின்னப்படங்கள் அழிந்தால் பரவாயில்லை என்று நினைக்கிறாரா ரஜினி? தமிழ்நாட்டில் பிறந்த கமல்ஹாசன், ஜி.எஸ்.டி-யை எதிர்த்து வாயைத் திறந்திருக்கிறார். உண்மையிலேயே நான் அவரைப் பாராட்டுகிறேன். ஆனால், 'அரசியலுக்கு வருகிறேன்' என்பதைக்கூட ரஜினியால் ஓப்பனாகச் சொல்லமுடியவில்லையே...

இதையெல்லாம் நான் சினிமாக்காரனாகப் பேசவில்லை.... லட்சியத் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராகத்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். காவிரிப் பிரச்னையிலும் குரல் கொடுத்தவன் நான். இதனால், கர்நாடகத்தில் படம் ஓட்டமுடியாது என்று தெரிந்தும் குரல் கொடுத்தேன். அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா வந்தார். அப்போதும் நான் சொன்னேன்... 'நீங்கள் அ.தி.மு.க-வுக்கு வேண்டுமானால் பொதுச்செயலாளராகலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு முதல் அமைச்சராக ஆக முடியாது... ஆகக்கூடாது' என்று. இப்படிச் சொல்வதால், என் பையன் நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்துக்கு என்னென்ன சிரமங்கள் வரும் என்று தெரிந்திருந்தும் சொன்னேன். பாதிப்பு வரும் என்று தெரிந்தும் பகிரங்கமாகக் குரல் கொடுத்தேன்.

இந்தியா முழுவதும் ஒரே வரி; சமச்சீரான விலை என்றெல்லாம் சொல்கிறார்களே... நான் கேட்கிறேன்... பாப்கார்ன், கோக் போன்றவை வெளியில் எல்லாம் ஒரே விலையில் விற்கப்படும்போது, தியேட்டருக்குள் மட்டும் ஏன் அதிக விலையில் விற்கப்படுகிறது? அதிகப்பட்ச விலையைத் தாண்டி எப்படி அவர்களால் விற்கமுடிகிறது? இதனைத் தடுக்க மோடி அரசு முயற்சி எடுக்குமா? இதில் காம்போ பேக் என்று சொல்லியும் கொள்ளையடிக்கிறார்கள். இதுமட்டுமா... கார் பார்க்கிங் வசூல் கந்துவட்டியைவிடக் கொடுமையாக இருக்கிறது. இப்படி விலை வைத்தால், ஏழை எளிய மக்கள் எப்படி படம் பார்ப்பார்கள்? தியேட்டருக்கு எப்படிக் கூட்டம் வரும்? 100 ரூபாய் கட்டணம் என்பதே அதிகம். அந்தக் கட்டணத்தைக் குறைத்தால்தான் பாமர மக்களும் படம் பார்க்க வருவார்கள். திரையுலகமும் வாழும்!'' என்று ஆக்ரோஷமாக பேசினார் டி.ஆர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024