மருத்துவ கல்லூரி சீட்டு மூலம் 91 கோடி பணம் பரிமாற்றம் வேந்தர் மூவிஸ் மதனின் 6.35 கோடி சொத்து முடக்கம்
2017-07-01@ 01:54:54
சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரிக்கு மருத்துவ சீட்டு மூலம் 91 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் வேந்தர் மூவிஸ் மதனின் 6.35 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை நேற்று முடக்கியது. எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மோசடி வழக்கில் வேந்தர் மூவிஸ் உரிமையாளர் மதன் கடந்த ஆண்டு மே 27ம் தேதி மாயமானார். 179 நாட்களுக்கு பிறகு கடந்த நவம்பர் 21ம் தேதி திருப்பூரில் அவரது காதலி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்தபோது மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனை கைது செய்தனர். பின்னர் போலீசார் மதனை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். அதைதொடர்ந்து மதனுடன் நெருக்கமாக இருந்த இந்திய ஜனநாயக கட்சி நிர்வாகிகள் மற்றும் சினிமா தயாரிப்பாளர்களான அம்மா கிரியேஷன்ஸ் சிவா, பாலகுரு, பைனான்சியர் ராம் மற்றும் ராம் குமார், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மேலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் மகன்கள் ரவி பச்சமுத்து, சத்தியநாராயணன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து மதன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 10 கோடி சொந்த ஜாமீனில் மதன் சில நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மருத்துவ சீட்டு விவகாரத்தில் 91 கோடி பணம் வருமான வரித்துறையிடம் எந்தவித கணக்கும் காட்டாமல் பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் 91 கோடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து ஏராளமான ஆவணங்களை சேகரித்தனர். பின்னர், பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் மதன் அனைத்து ஆவணங்களுடன் கடந்த மே 22, 23ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது மருத்துவ சீட்டு விவகாரத்தில் ஒவ்வொரு மாணவர்களிடமும் 50 லட்சம் முதல் 1.5 கோடி வரை பணம் வசூலித்தது தெரியவந்தது.
இதுபோல் 133 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ₹91 கோடி பணம் மதன் வங்கி கணக்கு மற்றும் சட்டவிரோதமாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து மற்றும் பல்கலைக்கழக வங்கி கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த பணத்திற்கான முறையான வருமான வரி செலுத்தப்படவில்லை. இதன் மூலம் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மே 23ம் தேதி விசாரணை முடிவில் வேந்தர் மூவிஸ் மதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது ெசய்தனர். இந்நிலையில் 91 கோடி பணத்தை சட்ட விரோதமான பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டது தொடர்பாக வேந்தர் மூவிஸ் மதனுக்கு சொந்தமான சென்னை வடபழனி கானாப்பா நாயுடு தெருவில் உள்ள அடுக்குமாடி வீடு, சாலிகிராமம் என்.எஸ்.கே. சாலையில் உள்ள நிலம் மற்றும் கேரளாவில் உள்ள இரண்டு அசையா சொத்துக்கள் என மொத்தம் 6.35 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நேற்று அமலாக்கத்துறை முடக்கியது.
No comments:
Post a Comment