Sunday, July 2, 2017


குழந்தை திருமணத்திற்கு ஆளான பெண் சாதனை

பதிவு செய்த நாள்
ஜூலை 01,2017 22:16



ஜெய்ப்பூர், :குழந்தை திருமணத்திற்கு ஆளாகி, எட்டு வயதில் குடும்ப பொறுப்பேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், தன் இடைவிடாத முயற்சியால், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, சாதனை
படைத்துள்ளார்.ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இங்குள்ள ஜெய்ப்பூர் மாவட்டம் கரேரி கிராமத்தைச் சேர்ந்த ரூபா யாதவுக்கு, எட்டு வயதில், 12 வயது சிறுவனுடன் திருமணம் நடந்தது. அவரின் மூத்த சகோதரிக்கும், மற்றொரு சிறுவனுடன் குழந்தை திருமணம்
நடந்தது.

திருமணத்தின் போது, மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரூபா யாதவ், கல்வி மீதான தாக்கத்தால், தொடர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவித்தார். அவரின் புகுந்த வீட்டாரும், இதற்கு சம்மதம் தெரிவித்தனர். கல்வியில் சிறந்து விளங்கிய ரூபா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 84 சதவீத மதிப்பெண் பெற்றார்.
குடும்ப பொறுப்பை கவனித்துக் கொண்டே, தேர்வில் சாதனை படைத்த ரூபாவை கண்டு, அவரின் கணவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து தன் மனைவியை படிக்க வைக்கவும் முடிவு செய்தார். தினமும், ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தில், மனைவி ரூபாவை, பிளஸ் 2 படிக்க வைத்தார். அவரின் முயற்சிக்கு, ரூபாவின் அக்காள் கணவரும் துணை நின்றார்.
பத்தாம் வகுப்பை போலவே, பிளஸ் 2 தேர்விலும், 84 சதவீத மதிப்பெண் பெற்ற ரூபா, அந்த ஆண்டு நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றார். எனினும், அகில இந்திய அளவில், 23 ஆயிரமாவது இடம் பிடித்ததால், அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை.
எனினும், சோர்வடையாமல், கல்லுாரியில், பி.எஸ்சி., படிப்பில் சேர்ந்து படித்தார். ரூபாவை, டாக்டர் ஆக்கியே தீர வேண்டும் என முடிவெடுத்த அவரின் கணவர், நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். 

கடந்த ஆண்டு, நீட் தேர்வில் தோல்வி அடைந்த போதும், அவரது அயராத முயற்சியை கண்டு வியந்த, தனியார் பயிற்சி மையம், ரூபாவுக்கு உதவித் தொகை வழங்கி, பயிற்சியும் அளித்தது.ஏழை குடும்பத்தில் மகளாக பிறந்து, எட்டு வயதில் குழந்தை திருமணத்திற்கு ஆளாகி, குடும்ப பொறுப்பையும் கவனித்து வந்த ரூபா, இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில், அகில இந்திய அளவில், 2,612ம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ரூபாவுக்கு, சிறந்த அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 28.11.2024