Sunday, July 2, 2017

ஏர் இந்தியாவுக்கு டாட்டா!

By ஆசிரியர் | Published on : 30th June 2017 03:31 AM


ஏர் இந்தியாவை தனியார்மயமாக்குவது என்கிற முடிவு குறித்த தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.\

1991-இல் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக அதுவரை பொதுத்துறைகள் மட்டுமே செயல்பட்டுவந்தது போய் அதனுடன் போட்டிபோட தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தனியார் துறையின் செயல்திறமையுடன் போட்டிபோடும்போது அரசின் பொதுத்துறை மேம்பாடு அடையும் என்று கூறப்பட்டது. ஆனால் அரசுத்துறைகள் தனியார் துறையின் தீமைகளை எல்லாம் கிரகித்துக்கொண்டன என்பதும், தனியார் துறை அரசுத்துறைக்கு நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய வருவாயை எல்லாம் விழுங்கி லாபம் சம்பாதித்தது என்பதும்தான் நிதர்சன உண்மை. இதற்கு இந்திய விமானத் துறை ஓர் எடுத்துக்காட்டு.

1950-இல் நீதிபதி ஜி.எஸ். ராஜத்யக்ஷா தலைமையில் விமானப் போக்குவரத்து விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் 372 பக்க அறிக்கையில் 'விமானப்போக்குவரத்து என்பது மிக அதிகமான தொழில்நுட்பத்துடன் கூடிய தனித்தன்மையுடைய துறை. அரசுத்துறையின் மெத்தனமான செயல்பாடும் அதிக அளவிலான கட்டுப்பாட்டுடன் கூடிய நிர்வாக முறைகளும் அந்தத் துறைக்கு ஒத்துவராது' என்று தெளிவாகவே தெரிவித்திருந்தது.
நீதிபதி ராஜத்யக்ஷா அறிக்கையைப் புறக்கணித்து, அரசியல் அழுத்தத்தின் காரணமாக விமானப் போக்குவரத்துச் சட்டம் 1953 நிறைவேற்றப்பட்டது. அதன் மூலம் டாடா ஏர்லைன்ஸ், அரசும் டாடா நிறுவனமும் இணைந்து நடத்திய ஏர் இந்தியா இன்டர்நேஷனல், ஏர் சர்வீஸஸ் ஆப்இந்தியா, ஏர்வேஸ் இந்தியா, பாரத் ஏர்வேஸ், டெக்கான் ஏர்வேஸ், ஹிமாலயன் ஏவியேஷன், இந்தியன் நேஷனல் ஏர்வேஸ், கலிங்கா ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு உள்நாட்டு சேவைக்கு இந்தியன் ஏர்லைன்ஸும் பன்னாட்டு சேவைக்கு ஏர் இந்தியாவும் அரசுத் துறை விமானப்போக்குவரத்து நிறுவனங்களாக ஏற்படுத்தப்பட்டன.
போட்டியில்லாத அரசுத் துறை நிறுவனமாக இருந்தது வரை ஏர் இந்தியா லாபகரமாகவும் இந்தியன் ஏர்லைன்ஸ் மிகப்பெரிய இழப்பில்லாத நிலையிலும் தொடர்ந்து வந்தது. 1994-இல் அன்றைய நரசிம்ம ராவ் அரசு விமானப் போக்குவரத்துச் சட்டத்தில் மாற்றங்கள் செய்து தனியார் துறைக்கும் அனுமதி அளித்தது. அப்படி அனுமதியளித்தபோதே வெளிநாட்டு விமானப்போக்குவரத்து நிறுவனங்களுக்கும் விமானப்போக்குவரத்தில் அந்நிய முதலீட்டுக்கும் அனுமதியளித்திருக்க வேண்டும். அப்படி அளிக்காமல்போனதால் அந்தத் துறையைத் திறமையாக நிர்வகிக்கும் சிறப்பறிவுத் திறன் (எக்ஸ்பர்டஸ்) கிடைக்கவில்லை என்பதுடன் போதிய முதலீடும் வராமல் போனது. அப்போதிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிவேக வீழ்ச்சி தொடங்கியது.

நரசிம்ம ராவ் அரசு விமான போக்குவரத்தில் தனியார்துறையை அனுமதித்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை தனியார்மயப்படுத்தியிருந்தால் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகியிருக்காது. 2007-08 நிதியாண்டிலிருந்து தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் ஏர் இந்தியா நிறுவனம் இழப்பில்தான் இயங்கிவருகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஏர் இந்தியா நிறுவனத்தின் நிகர இழப்பு ரூ.6,879 கோடி, ரூ.5,879 கோடி, ரூ.3,836 கோடி.

இந்த இழப்பால் பாதிக்கப்படுவது 31 அரசு வங்கிகளின் பங்குதாரர்களும் வைப்புநிதியில் பணம் போட்டு இருப்பவர்களும்தான். இதுபோதாது என்று 2012-இல், பேரிழப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் அடுத்த 9 ஆண்டுகள் அந்த நிறுவனத்துக்கு ரூ.30,730 கோடி நிதியுதவி அளிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதுவரை ரூ.25,000 கோடி ரூபாய் மத்திய அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வாரிவழங்கியிருப்பதுதான் மிச்சம். நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 31 நிதி நிறுவனங்களுக்கு ஏர் இந்தியா தர வேண்டிய நிலுவையிலுள்ள தொகை ரூ.46,570 கோடி.

இந்திய விமானப் போக்குவரத்தில் தனியுரிமை பெற்றிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் இன்றைய பங்கு வெறும் 14 விழுக்காடு மட்டுமே. தனியார் நிறுவனங்கள் 86 விழுக்காடு விமானப் போக்குவரத்து சேவையை ஈடுகட்டுகின்றன. இந்த நிலையில் 14 விழுக்காடு சேவையை மட்டுமே பூர்த்தி செய்யும் ஏர் இந்தியா நிறுவனத்தை மக்களின் வரிப்பணத்தில் ஈடுகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நாம் எப்போதோ உணர்ந்திருக்க வேண்டும்.

சக்கரம் மீண்டும் சுழன்று இப்போது ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை வாங்கிக்கொள்ள சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் முன்வந்திருப்பதாக தெரிகிறது. டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா மீண்டும் டாடா நிறுவனத்திற்கே செல்வதும் அதன் மூலம் இந்திய மக்களின் வரிப்பணம் இனியும் வீணாக்கப்படாமல் தடுக்கப்படுவதும் வரவேற்புக்குரியது.
இந்த ஒப்பந்தம் மாருதி சுசுகி பாணியிலான வெளிப்படைத்தன்மையுள்ள, படிப்படியான தனியார்மயமாக இருத்தல் அவசியம். இன்றைய நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சொத்து மதிப்பு என்ன, அதனுடைய வணிகத் தர மதிப்பு, ஊழியர்களின் நிலை உள்ளிட்டவை வெளிப்படைத்தன்மையுடன் மக்கள் மன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும். டாடா நிறுவனத்துடன் மட்டுமே பேசி ஒப்பந்தம் செய்யாமல், சர்வதேச அளவில் ஒப்பந்தப் புள்ளி கோரினாலும் தவறில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 11.01.2025