விதிகளை மதிப்போம்; விபத்தைத் தவிர்ப்போம்!
By டி. எஸ். தியாகராசன் | Published on : 15th May 2018 12:54 AM
இப்போதெல்லாம் மனிதர்கள் முதுமையோ, பிணியோ இல்லாமலே அற்ப ஆயுளில் மரணத்தைத் தழுவக் காரணம் என்ன? முளைவிட்டு, முகிழ்த்து, கிளை பரப்பி, மலராகி, பிஞ்சாகி, காயாகி, கனிந்து பின் இயற்கையாக விழுவது போல் அல்லாது, சிலர் தம் வாழ்நாளில் பலவற்றை ஆண்டு அனுபவிக்கத் தவறி, அகாலத்திலேயே போய்ச் சேருவது எதனால்? நாள்தோறும் கதிரவன் உதயத்திற்கு முன்பாகவே இல்லத்துக்குள் வரும் நாளேடுகள் மரண ஓலத்தின் வரிவடிவமாகவே இருப்பது ஏன்? காலையிலேயே நம் கண்களைக் குளமாக்கும் செய்திகளே அவற்றில் நிறைந்திருப்பது ஏன்?
"மகிழுந்துடன் சரக்கு வாகனம் மோதி நால்வர் மரணம்', "இருசக்கர வாகனம் மோதி பாதசாரி பலி', "விமானத்திலிருந்து பத்திரமாகத் தரையிறங்கிய பயணி சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு இறந்தார்', "அரசுப் பேருந்தும் எதிரே வந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உட்பட எட்டு பேர் பலி, மூவர் நிலை கவலைக்கிடம்', "ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மரத்தில் மோதியது, சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழப்பு' இப்படிப்பட்ட அவலச் செய்திகள் பற்பல.
நெடுஞ்சாலை விபத்துகளில் பெரும்பாலானவை இரவு நேரத்திலேயே நடக்கின்றன.
அதுவும் குறிப்பாக, நள்ளிரவுக்கு மேல் அதிகாலை நான்கு மணிக்குள்தான் நடக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர், தென்னிந்திய மோட்டார் வாகனக் கழகத்தின் சார்பில் சாலை விபத்து குறித்த ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் விபத்துக்கான காரணங்கள் என்று ஐந்து விஷயங்கள் குறிப்பிட்ப்பட்டிருந்தன. முதலாவது, வாகன ஓட்டுநர்களின் தவறான கணிப்பு, இரண்டாவது, தனது வாகனம்தான் முன்னதாகச் செல்ல வேண்டும் என்று எண்ணும் ஓட்டுநர்களின் தன்முனைப்பு, மூன்றாவது, நீண்ட நேரப் பயணத்தால் ஓட்டுநர்களுக்கு இயல்பாக ஏற்படும் உடல் களைப்பு, நான்காவது, சாலைகளில் வளைவுகள், குறுகிய பாலம், மாற்றுப்பாதை, வேகத்தடை போன்றவற்றிற்கான எச்சரிக்கைப் பலகைகள் இல்லாதிருத்தல் அல்லது மிகச்சிறியதாக இருத்தல், ஐந்தாவது, வாகனங்களில் ஏற்படும் எதிர்பாராத இயந்திரக் கோளாறுகள் போன்றவை.
அந்த அறிக்கையில் விபத்துளைத் தவிர்க்கும் வகையில் சில யோசனைகளும் சொல்லப்பட்டிருந்தன. அவை, இரவு பதினோரு மணிக்குப் பின்னர் பயணம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், பகல் நேரத்தில் பயணிக்கும் தூரத்திற்கு ஆகும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு அரை மணி நேரம் முன்னதாகவே பயணத்தைத் தொடங்க வேண்டும், ஒவ்வொரு இருநூறு கிலோ மீட்டர் தூரத்திற்கும் கட்டாயம் முப்பது நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும்
இப்படி. வெளிநாடுகளில், வாடகை வாகனங்களை ஓட்டுபவர்கள் ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரம்தான் ஓட்டவேண்டும் என்ற விதி உள்ளது. அந்த விதி கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. சாலை விதிகளை மீறுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அவ்வளவு கடுமையாக சாலை விதிகள் மதிக்கப்டுகின்றன; பின்பற்றப்படுகின்றன. சமரசத்திற்கே இடமில்லை. சாலையில் செல்லும் வாகனம் மோதி ஒருவர் இறந்தால் அது விபத்து என்று கருதப்படுவதில்லை, கொலையாகவே கருதப்படுகிறது. அதற்கான தண்டனை மிகவும் கடுமையாகவே இருக்கிறது. ஆனால், நமது நாட்டிலோ இதற்கு நேர் எதிரான நிலைதான். வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகூட பெரும்பாலான வாகனங்களில் பொருத்தப்படுவதில்லை.
வளர்ந்த நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள சாலைகளின் தரத்தைக் கருத்தில் கொண்டு அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சாலைகள் அவ்வளவு தரமானதாக இல்லை. இதனை மனத்தில் கொண்டே நாம் அதிவேகமாகச் செல்லக்கூடிய இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இயக்க வேண்டும். ஆனால், பெரும்பாலானோர் - குறிப்பாக இளைஞர்கள் - அப்படி கவனமாக இயக்குவதே இல்லை. அதனால்தான், தமிழ்நாட்டில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறிய வகையில் 2017 - ஆம் ஆண்டில் காவல் துறையினர் மூன்று கோடி ரூபாய்க்கு மேல் அபராதமாக வசூல் செய்துள்ளனர்.
1988 - ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம், பிரிவு 129 - இன் கீழ் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டியது கட்டாயம். ஆனால், பெரும்பாலானவர்கள் தலைக்கவசம் அணிவதில்லை. சட்டத்தை மதிப்பதுமில்லை. கடந்த இரு மாதங்களில் மட்டும் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஐம்பத்தையாயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மேலும், அந்த அறிக்கை, 80 விழுக்காடு விபத்துகளுக்குக் காரணம் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குவதே என்றும் கூறுகிறது.
இதுபோன்ற காவல்துறை அறிக்கைகள் பலசமயம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. கடந்த ஆண்டு மட்டும் விபத்தின் காரணமாக உணர்வு இழந்துவிட்டவர்கள் 1,36,544 பேர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் 84393 பேர். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் தலைக்கவசம் இல்லாததால் தலையில் அடிபட்டவர்கள் 25,000 பேர். இதுபோன்ற விபத்துகளில் சிக்குவோர் பெரும்பாலும் இளைஞர்களே. சிவப்பு விளக்கை மதிக்காமல் சிட்டாகப் பறப்பதும், தடுப்புக் கோட்டைத் தாண்டிப்போவதும் வீரமல்ல என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இவையெல்லாம் நாமே வலிந்துபோய் விபத்தில் சிக்கிக் கொள்ளும் செயல்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்றைய இளைஞர்கள் காதில் அலைபேசியை அணைத்தபடி சாகசங்கள் செய்வது வாடிக்கையாகி விட்டது. விளம்பரத்தில் வரும் இரு சக்கர வாகனம் தனக்கு அவசியமா என்று இளைஞர்கள் யோசிப்பதே இல்லை. உடனே வாங்கிவிடத் துடிக்கிறார்கள். வாங்கியும் விடுகிறார்கள். வாகன எரிபொருள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது, பல இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு இடமே இல்லை, போக்குவரத்து நெரிசல் சொல்லி முடியாது - ஆனாலும் வாகனப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவாகும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் போகிறது. நடைப்பயிற்சி உடல் நலத்திற்கு ஏற்றது என்பதை மறந்தோம், பொதுப் போக்குவரத்து சிக்கனமானது என்பதையும் புறந்தள்ளினோம், ஆளுக்கு ஒரு வாகனம் தேவை என்ற நிலைக்கு வந்துவிட்டோம்.
சென்னயின் மக்கள்தொகை (புறநகர் நீங்கலாக) சுமார் 83 லட்சம். ஆனால் வாகனங்களின் எண்ணிக்கையோ சுமார் நாற்பத்து மூன்று லட்சம். இருவருக்கு ஒரு வாகனம் என்கிற பொருளாதார வளர்ச்சி மயக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறோம். வாகனத்தை இயக்க, தவணைத்தொகை கட்ட பணம் வேண்டுமே. அதற்காக அறம் பிறழ்ந்த வழிகளில் பொருள் ஈட்டவும் பலர் தயங்குவதில்லை. இதனால்தான் எல்லா காவல்நிலைய வாயில்களிலும் ஏராளமான இரு சக்கர வாகனங்கள் பழசாகி, பயனற்று வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன. முறையான ஆவணங்கள் இல்லாததாலும், திருடப்பட்ட வாகனங்கள் நீதிமன்ற ஆணைக்காகக் காத்துக்கொண்டும் இருக்கின்றன.
குடும்பத்தலைவனோ, தலைவியோ விபத்தில் இறந்துவிட்டால் அவரது குடும்பமே நிலைகுலைந்து போவது தவிர்க்க முடியாதது. இரு மாதங்களுக்கு முன்னர் சென்னை பெரம்பூரிலிருந்து ஒரு பெண்மணி, தனது இரு குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் கோயம்பேடு சென்றார். வழியில் ஒரு ஆட்டோவுடன் மோதியதில் தூக்கி எறியப்பட்டார். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துவிட்டார். அவர் மரணத்திற்கு முக்கிய காரணம், தலைக்கவசம் அணியாததே. குழந்தைகள் சிறுசிறு காயங்களுடன உயிர் பிழைத்தனர். அவரது கணவர் நிலைகுலைந்து போனார். இப்போது அவர் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளிடம் பரப்புரை செய்து வருகிறார்.
ஆண்டுதோறும் போக்குவரத்து காவல் துறையினர் "சாலைப் பாதுகாப்பு வார விழா' கொண்டாடி சாலைப் பாதுகாப்பு குறித்து அறிவுறுத்துகின்றனர். ஆயினும் நம் மக்களிடம் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. மேல்நாடுகளில் தொடக்கக்கல்வி முதலே சாலைப்பாதுகாப்பு குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு சாலையிலேயே நேர்முகப் பயிற்சி, செயல்முறை விளக்கம் தருகின்றனர். தினமும் பள்ளிகளுக்கு முன்பு பெற்றோரும், ஓய்வு பெற்ற அதிகாரிகளும் போக்குவரத்தை ஒழுங்கு செய்வதில் உதவி புரிகின்றனர். சில தன்னார்வத் தொண்டர்களும் இதில் பங்கெடுக்கின்றனர். "சாலைகள் வாகனப் போக்குவரத்திற்கு, நடைபாதை நடப்பதற்கு' என்கிற விதி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. குடியிருப்புப் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனாலதான் அங்கு விபத்துகள் குறைவு.
நம் நாட்டில் எப்போதும் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி மகிழ்கிறோம். நடபாதைகளை சிறுவணிகத் தெருக்களாக மாற்றிவிட்டோம். வீட்டுக்குள் நுழைய முடியாதபடி வெளியே இருபுறமும் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கிறோம். முழுக்க முழுக்க சுயநலம், பிறர்நலம் பேணாமை, சட்டத்தை மதிக்காத போக்கு, நாட்டின் வளர்ச்சிக்கு துணைநிற்காமை, அறம்சார் கொள்கைகளில் ஈடுபாடின்மை - இவையே இன்றைய மனித குலத்தின் முக்கிய எதிரிகள்.
அல்லன களைந்து, நல்லன வளர்த்து நல்ல வழியில் நாளும் உழைத்தால் மனித வளம் பெருகும். விபத்துகளில் சிக்கிச் சீரழியாமல் இருக்க, இனி ஒரு விதி செய்வோம். சாலை விதிகளை மதித்து நடப்போம்; விலை மதிப்பு மிக்க மனித உயிர்களைக் காப்போம்!