Monday, May 14, 2018

`கூலித் தொழிலாளிகள் எல்லோருக்கும் மருந்து கொடுத்து கொன்னுடுங்க!’ - சேலத்தில் கொந்தளித்த பெண்கள் 

வீ கே.ரமேஷ்
எம்.விஜயகுமார்   vikatan



``மழை இல்லாமல் காட்டில் விவசாயம் இல்லை. விவசாயிகளே வீதிக்குப் போராட வந்துட்டாங்க. விவசாயக் கூலிகளான நாங்க விவசாயத்தை மறந்து பல வருடம் ஆயிடுச்சு. ஓட வேலையை நம்பி வாழ்ந்துட்டு இருக்கிறோம். கடந்த 6 மாதமாக எங்களுக்கு ஓட வேலையும் கொடுப்பதில்லை. சோத்துக்கு நாங்க படும் கஷ்டம் தாங்க முடியல. இந்த வயிற்றுப் பசியை யாரு கண்டுகொள்ளுகிறார்கள்.
கலெக்டர் அம்மாவைச் சந்தித்து எங்களுக்கெல்லாம் மருந்து வைத்துக் கொன்று விடுங்கள் என்று சொல்லிட்டு எங்க ரேஷன் கார்டுகளை கொடுத்து விட்டு செல்லுவதற்கு வந்திருக்கிறோம்' என்று 100க்கும் மேற்பட்ட வயதான மற்றும் இளம் பெண்களும் சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர்.



இதுகுறித்து அங்கு வந்திருந்த பார்வதியிடம் பேசினோம், ``நாங்க எல்லோரும் ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி முகில் நகரிலிருந்து வந்திருக்கிறோம். நான் மல்லிகை பறிக்க, கடலைக் காட்டுக்குக் களை எடுக்கப் போவேன். அதில் கிடைக்கிற வருமானத்தை வைத்து வயிற்றைக் கழுவிட்டு வந்தேன். கடந்த 5 வருடமாக மழை இல்லாததால் விவசாயத் தொழிலே அழிந்து விட்டது. விவசாயிகளே வேலை இல்லாமல் வீதிக்குப் போராட வந்துட்டாங்க. எனது கணவரும் இறந்துவிட்டதால், நான் ஏதாவது வேலைக்குப் போனால் மட்டுமே சாப்பிட முடியும். ஆனால், எந்த வேலையும் கிடைக்கவில்லை. பஞ்சாயத் ஆபீஸ்ல நூறு நாள் வேலை கொடுத்தாங்க. கடந்த 6 மாதமாக அந்த வேலையும் கொடுக்காததால் சாப்பாட்டிற்கு காசு இல்லாமல் பரிதவிக்கிறேன். இதை ஏன்னு கேட்பதற்கு கூட ஆள் இல்லை'' என்று கதறி அழுதார்.

சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின்னர், ``அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க வரட்டும் அவங்களுக்குப் புத்தி புகட்டுறேன். எனக்கு முதியோர் ஓய்வூதியமும் இல்லை.100 நாள் வேலையும் இல்லை நான் எப்படி பிழைப்பது. ஒரே அடியாக எங்களுக்கெல்லாம் மருந்து வாங்கிக் கொன்று விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாக இருக்கும் என்று கேட்பதற்காக கலெக்டர் அம்மாவைப் பார்க்க வந்திருக்கிறோம்'' என்று குமுறினார்.



ஈஸ்வரியோ, ``நாங்க எல்லோரும் கூலி ஜீவன்கள். பத்து ரூபாய் சம்பாதித்தால்தான் எங்க வீட்டு அடுப்புல விறகு எரியும். 6 மாதமாக ஓடை வேலைக்குக் கூப்பிடுவதில்லை. நாங்க என்ன தொழில் செய்து சாப்பிட முடியும்?. இந்த வயதான காலத்தில் எங்களுக்கு யார் வேலை கொடுப்பாங்க?. இளம் வயதில் காட்டுக்கு வேலைக்குப் போனோம். இப்ப கூட காட்டு வேலை கிடைத்தால் போகலாம். ஆனால், காடெல்லாம் அழிச்சுட்டு வீட்டு மனை போட்டுட்டாங்க. நாங்க எந்த வேலைக்குப் போக முடியும். அரசாங்கம் எங்க மேல கருணை கொண்டு நாங்க உயிரோடு இருக்கும் வரை ஏதாவது வேலை கொடுக்க வேண்டும்'' என்றார்.

No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...