Tuesday, May 15, 2018

தலையங்கம்

நல்ல திட்டம்; ஆனால் வட்டி போதாது





வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள்.

மே 15 2018, 03:00 வாழ்க்கையில் சேமிப்பு என்பது மிக மிக முக்கியமானதாகும். அதனால்தான் அந்தக்காலங்களில் இருந்தே பெரியவர்கள் சின்னஞ்சிறு வயதில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தார்கள். சிக்கனமாய் வாழணும் சேர்த்து வைக்க பழகணும் என்பதுதான் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நெறியாகும். எதிர்பாராத செலவுகளுக்காகவும், முதிர் வயதிற்காகவும், அடுத்த சந்ததிக்காகவும் பணம் வேண்டுமென்றால் சேமிப்பு இருந்தால்தான் முடியும். அந்தவகையில் எல்லோருமே வங்கி டெபாசிட்களை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்கள். வங்கிகளிலும், தபால் அலுவலகங்களிலும் நிரந்தர டெபாசிட்களில் பணம்போட்டு தேவைப்படும் நேரத்தில் அந்தப்பணத்தை எடுத்துக்கொள்வதோ? அல்லது அதிலிருந்து வரும் வட்டியில் செலவுகளை சமாளிப்பதோ? வழக்கமாக இருந்தது. ஆனால், சமீபகாலங்களாக வங்கிகளிலுள்ள பிக்சட் டெபாசிட்களின் வளர்ச்சிவிகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம், வங்கியில் டெபாசிட்களுக்கான வட்டிவிகிதம் குறைந்து கொண்டே போவதுதான். அதனால்தான் மக்களின் பார்வை வங்கி டெபாசிட்களை விட்டுவிட்டு, மியூச்சுவல்பண்டு போன்ற முதலீடுகளை நாடிச்செல்ல வைத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் மியூச்சுவல் பண்டுகளில் ரூ.7 லட்சம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மியூச்சுவல் பண்டுகளிலும் போட்ட தொகைக்கும் மேல் அதிகதொகை கிடைக்கவும், ஒரு சில நேரங்களில் பெரியசரிவை சந்திக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில், பெரும்பாலான மியூச்சுவல் பண்டுகள் பங்குமார்க்கெட்டை சார்ந்தே இருக்கும். இந்தநிலையில், வயதான காலத்திற்காக சேமித்து வைக்க விரும்புபவர்கள் அதிலும் குறிப்பாக பென்சன் இல்லாத அதாவது மத்திய–மாநில அரசு பணிகளைத் தவிர, மற்ற பணிகளில் உள்ளவர்கள் தங்கள் சேமிப்புகளை நம்பித்தான் முதிர்வயதை ஓட்ட வேண்டும். மூத்த குடிமக்களின் சேமிப்புக்கான ஒரு நல்ல திட்டத்தை 2017–ம் ஆண்டு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. ‘பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா’ என்ற மூத்த குடிமக்களுக்கான பென்சன் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.7½ லட்சம் வரையில் சேமிக்கலாம். இதற்கு 8 சதவீத வட்டி வழங்கப்படும். ரூ.7½ லட்சம்வரை முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இந்த ரூ.7½ லட்சம் உச்சவரம்பு ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் உறுதியாக கிடைக்கும். 60 வயதிற்கும் மேல் உள்ளவர்கள் இந்தத்திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

இந்தத்திட்டத்தில் சேரவிரும்புபவர்கள் வங்கிகளிலோ, தபால் அலுவலகங்களிலோ போய் இந்த முதலீட்டை செய்து கொள்ளலாம். ஆயுள் காப்பீட்டுக்கழகம் மூலமாக இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இடையில் உடல்நலக்குறைவு போன்ற கஷ்டமான நேரங்களில் பணம் தேவைப்பட்டால் 98 சதவீத பணத்தை திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். இதுபோல, 3 ஆண்டுகள் கழித்து மொத்தபணத்தில் 75 சதவீதம் கடனாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்தத்திட்டம் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு பயனளிக்கும் திட்டம்தான். ஆனால் மூத்த குடிமக்கள் தங்கள் சேமிப்பையெல்லாம் போட்டு அன்றாட வாழ்க்கைக்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் என்பதால், இந்த 8 சதவீத வட்டியை உயர்த்தி கூடுதலாக கொடுக்கலாம். இது மூத்த குடிமக்களின் நலனில் அக்கறைக்கொண்டு அரசு எடுக்கும் கருணை நடவடிக்கையாகவே கருதப்படும். எனவே, இந்தத்திட்டத்தின்கீழ் கூடுதல் வட்டிதர அரசும், அரசியல்கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தால் மூத்த குடிமக்களின் மனமும் குளிரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024