Tuesday, May 15, 2018

மாநில செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்





தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது.

மே 15, 2018, 04:05 AM

கோவை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறுகிறது. இதற்கு 18–ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 13 இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் உள்ளன. 14 உறுப்பு கல்லூரிகளும், 26 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. இந்த கல்லூரிகளில் 2018– 2019–ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப வினியோகம் 18–ந்தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவ–மாணவிகள் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். வருகிற 18–ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூன்) 17–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவ– மாணவிகள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு மட்டுமே அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு செய்யப்படும். இதை பெற்றோர்களும், மாணவ–மாணவிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், தியாகிகளின் வாரிசுகள் இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 18–ந்தேதி தொடங்கி ஜூன் 20–ந்தேதி வரை நடைபெறும். மாணவ–மாணவிகளின் விண்ணப்பங்கள் மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஜூன் 22–ந்தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

இதைத்தொடர்ந்து முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 9–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை இணையதள வழியாக நடைபெறும். மாணவ– மாணவிகள் தங்கள் அருகிலேயே உள்ள கல்லூரிகளுக்கு சென்றோ அல்லது ஸ்மார்ட் போனிலோ, இணையதளத்தை தேர்வு செய்து எந்தப் பாடப்பிரிவுக்கு தாங்கள் தகுதியானவர்கள் என்று முடிவு செய்து தங்களுக்கு வேண்டிய பாடப்பிரிவுகளையும், விருப்பமான கல்லூரிகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு ஜூலை 7–ந்தேதியும், தொழிற்கல்விக்கான கலந்தாய்வு ஜூலை 16–ந்தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 17 மற்றும் 18–ந்தேதிகளிலும் நடக்கிறது. 2–ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23–ந்தேதி தொடங்கி 27–ந்தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்காக மாணவர்களும் பெற்றோர்களும், கோவைக்கு வந்து அலைய வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே தங்கள் அனுமதி கடிதத்தை பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைன் கலந்தாய்வு முறை இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு விண்ணப்ப படிவத்திலேயே 46 விருப்ப பிரிவு (ஆப்சென்ஸ்) கொடுக்கப்பட்டுள்ளது. தேவையானவற்றை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் சிறந்த 5 கல்லூரிகளையும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மாணவர்கள் ஒரு கல்லூரியை விரும்பி, அது கிடைக்காமல் போகும்போது, கிடைக்கும் கல்லூரியில் சேர்ந்து பின்னர் விரும்பிய கல்லூரியில் சேரும் ‘ஸ்லைடிங் சிஷ்டம்’ அறிமுகப்படுத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி ஆன்லைன் முறையில் கலந்தாய்வு, ‘ஸ்லைடிங் சிஸ்டம்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 17–ந் தேதி ஆகும். முக்கியமாக பெற்றோர்களும் மாணவர்களும் ஒன்றுக்கு இரண்டு முறை விண்ணப்பங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். பல்கலைக்கழக வலைத்தளத்தில் www.tnau.ac.in/admission.html அனைத்து விவரங்களும் தரப்பட்டு உள்ளன. ஒரு மாத காலத்தில் பொறுமையாக படித்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கடைசிநேரத்தில் பதிவேற்றம் செய்து நெருக்கடிக்கு ஆளாக வேண்டாம்.

26 தனியார் கல்லூரிகள், 14 அரசு கல்லூரிகள் இருக்கின்றன. இதில், புதிதாக இந்த ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 3 கல்லூரிகள் உள்ளன. பட்டுப்புழு வளர்ப்பு, உயிரிதொழில்நுட்பம், அக்ரி பிஸினஸ் இந்த மூன்று பாடப்பிரிவுகளும் தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரிகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. வேளாண் பொறியியலில் புட்பிராசசிங் என்பது மத்திய அரசின் வேண்டுதலுக்கு இணங்க பி.டெக் புட்டெக்னாலஜி என்றும் பி.டெக் தோட்டக்கலை என்பது பி.எஸ்சி ஹானர்ஸ் தோட்டக்கலை எனவும் மாற்றப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில் மதிப்பெண் சார்ந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும். தனியார் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் மதிப்பெண் அடிப்படையில் கிடைக்கும். மீதி 35 சதவீதத்தை இந்த பதிவேற்றம் செய்த விண்ணப்பங்களில் இருந்து தான் தனியார் கல்லூரிகள் வழங்கவேண்டும். இதில் தவறு ஏற்பட்டால் அக்கல்லூரி முதல்வரும், தாளாளரும் தான் பொறுப்பாவார்கள். தனியார் கல்லூரிகளில் இடம் வேண்டுபவர்கள் அவர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம்.

இதுதவிர மத்திய அரசின் சார்பில் தேசிய அளவில் வேளாண் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் வென்றவர்களுக்கு அரசு கல்லூரிகளில் மட்டும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இந்த தேர்வு எழுதியும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் சேரலாம். ஆகஸ்டு மாதம் 1–ந் தேதி கல்லூரிகள் திறக்கப்படும். ஆகஸ்டு 31–ந்தேதி மாணவர் சேர்க்கை முடிவடையும்.

இந்த விவரங்கள் குறித்தும் பட்டப்படிப்புகளின் வகைகள் குறித்தும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிந்து கொள்வதற்காக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மே 21–ந்தேதி திறந்தவெளி கண்காட்சி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது டீன் மகிமைராஜா, வேளாண் என்ஜினீயரிங் பிரிவு டீன் வரதராஜன், முதுநிலை கல்வி டீன் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

1st 1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end

1st Vande Bharat sleeper train set for Delhi-Kol run by month-end  New Delhi : 01.01.2026 The first Vande Bharat sleeper train is likely to ...