Tuesday, May 15, 2018

பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் 'நீட்' தேர்வுக்கான விடைகள்

Added : மே 15, 2018 00:59

'நீட்' தேர்வின் பல்வேறு சிக்கலான கேள்வி தொடர்பான பாடங்கள், பிளஸ் 1 புதிய பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. எனவே, புதிய பாடத் திட்ட புத்தகம், நீட் தேர்வை எதிர்கொள்ள உதவியாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, மே, 6ல் முடிந்தது. தமிழகத்தில், 1.07 லட்சம் பேர் உட்பட, நாடு முழுவதும், 13 லட்சம் பேர் பங்கேற்றனர். நீட் தேர்வு கேள்விகள், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் இருந்து எடுக்கப்படுவதாக, தொடர்ந்து குற்றச்சாட்டு நிலவுகிறது.இதனால், தமிழக பாடத் திட்ட மாணவர்களால், நீட் தேர்வில் சாதிக்க முடியவில்லை என, பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, சி.பி.எஸ்.இ.,யை மிஞ்சும் வகையில், தமிழக பாடத் திட்டம் தயாரிக்கப்படுவதாக, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார்.இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன், புதிய பாடத் திட்டம் வெளியிடப்பட்டது. இந்த பாடத் திட்டத்தில், சமீபத்தில் நடந்த, நீட் தேர்வின் கேள்விகளுக்கான அம்சம் இடம் பெற்றுள்ளதா என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பாடத் திட்ட தயாரிப்பு குழுவில் உள்ள பேராசிரியர்கள், சுல்தான் இஸ்மாயில் - விலங்கியல்; ரீட்டா ஜான் - இயற்பியல்; நரசிம்மன் - தாவரவியல், பூபதி - வேதியியல் ஆகியோர், இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். நீட் தேர்வில் மாணவர்களை சிக்கலில் தவிக்க விட்ட பல கேள்விகளுக்கான விடைகள், புதிய பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.இதன்படி, வேதியியலில், 11; தாவரவியலில், 29 மற்றும் விலங்கியலில், 21 சிக்கலான கேள்விகளுக்கான விடைகள், பிளஸ் 1 பாட புத்தகத்தில் உள்ளன. மொத்தத்தில், தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1ல் இருந்து, 96 கேள்விகளும்; பிளஸ் 2வில் இருந்து, 84 கேள்விகளும், நீட் தேர்வில் இடம் பெற்றுள்ளன.

இதன்மூலம், தமிழக பாட திட்ட மாணவர்கள், நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்புள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...