நாய் வளர்ப்பவர்களுக்கு கோடையில் ஒரு எச்சரிக்கை!
By RKV | Published on : 14th May 2018 03:53 PM
கோடைகால வெக்கையும் வியர்வையும் மனிதர்களை மட்டுமல்ல விலங்குகளையும் பாடாய்ப்படுத்துகிறது. சும்மாவே நம்மால் கோடையில் அனலையும், வியர்த்து வழிவதால் ஏற்படும் உடல் கசகசப்பையும், மனித உடல் நாற்றங்களையும் தாங்க முடியாது. இதில் வளர்ப்பு மிருகங்களையும், பறவைகளையும் வேறு வீட்டில் வைத்து வளர்த்து வருகிறோம் என்பவர்களுக்கு இந்த கோடை என்பது சற்று சிரம தசையான காலமே தான். கடுங்கோடையில் நம்மை நாம் கவனித்துக் கொள்வதே பெரும் பிரயத்தனம் இதில் நாம் வளர்க்கும் ப்ரியமான வளர்ப்பு மிருகங்களையும் கட்டாயம் மிகுந்த கவனத்துடன் பார்த்துப் பராமரிக்க வேண்டும் என்றால் அது கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் நாம் அதைச் செய்து தான் தீர வேண்டியதாக இருக்கிறது.
காரணம். கோடை என்பது அனலுக்கும், வியர்வைக்கும், கோடை நோய்களுக்குமாக மட்டுமே பிரசித்தமானது அல்ல. விலங்குகளின் உடலில் சர்வ சுதந்திரமாக வளர்ந்து பல்கிப் பெருகக் கூடியவையான உண்ணிப்பூச்சிகளுக்கும் பிரசித்தமானவையே. கோடையில் காற்றிலும், சுற்றுப்புறத்திலும் நிலவும் வெக்கையான ஈரப்பதத்தின் காரணமாக அசுத்தமான இடங்களில் இத்தகைய உண்ணிப்பூச்சிகள் சர்வ சுதந்திரமாக வளரத் துவங்கி விடுகின்றன. பிராணி வளர்ப்பாளர்கள் தங்களது பராமரிப்பில் சற்று மந்தமானாலும் போதும் இந்த உண்ணிப்பூச்சிகள் நாய்கள், பூனைகள், பசுக்கள், எருமைகள், என அத்தனை விலங்குகளின் உடலிலும் வளரத் தொடங்கி விடுகின்றன. இதை முதல் முறையாக கண்காணிக்க நேரும் போதே உடனடியாக கால்நடை மருத்துவரின் உதவியை நாடி விடுவது உத்தமம். தாங்களே வீட்டில் மருத்துவம் செய்வதாக எண்ணிக்கொண்டோ அல்லது கை வைத்தியம் செய்வதாக எண்ணிக்கொண்டோ உண்ணிகளை அப்புறப்படுத்த ஏதேனும் கண்ட கண்ட மருந்துகளை உபயோகப்படுத்தினீர்கள் எனில் அது தேவையற்ற விளைவையே உண்டாக்கக் கூடும் என்பது கால்நடை மருத்துவர்களின் எச்சரிக்கை.
காரணம் வளர்ப்பு விலங்குகளின் தோலில் நாம் ஆராயாமல் தடவும் மருந்துகள் உண்ணிப்பூச்சிகளை ஒழிப்பதை விட சரும வியாதிகளையும், அலர்ஜிகளையும் தூண்டி விடுவதாக அமைந்து விடக்கூடாது. அப்படி அமைந்தால் பூச்சிகளின் தொல்லை ஒருபுறம், மருந்துகளின் அவஸ்தை ஒருபுறம் என நமது வளர்ப்பு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே உங்கள் வீட்டு வளர்ப்பு நாய்களின் உடலில் உண்ணிகளின் தாக்கம் இருப்பது தெரிந்த முதல்கணமே கால்நடை மருத்துவரை அணுகி ஆவண செய்யுங்கள். ஒவ்வொரு நாய்க்குமே மருத்துவ ஆலோசனை மாறுபடும். எல்லா வளர்ப்பு நாய்களுமே ஒன்றல்ல. எந்த வகை நாய்களுக்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை ஒரு கால்நடை மருத்துவரால் மட்டுமே சரியாகத் தீர்மானிக்க முடியும். எனவே கை மருத்துவத்தையும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மருத்துவ குறிப்புகளைக் கைவிட்டு விட்டு தேர்ந்த கால்நடை மருத்துவர்களை அணுகி உங்களது வளர்ப்பு நாயின் உடல்நலத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யுங்கள்.
அதுமட்டுமல்ல, வளர்ப்பு நாய்கள் பராமரிப்பில் சிகிச்சை மட்டுமே போதுமானது அல்ல, நாய்களுக்கான வாழிடங்களையும் சுத்தமாகவும், ஆரோக்யமானதாகவும் பராமரியுங்கள். இல்லாவிட்டால் சிகிச்சையினாலும் முழுப்பலன் கிடைக்காமல் போய்விடக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
இந்தக் கோடையில் மட்டுமல்ல, எந்த விதமான பருவ நிலை மாற்றத்தின் போதும் இவற்றை நிச்சயமாக நீங்கள் கவனத்தில் கொள்வது அவசியமென்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.
No comments:
Post a Comment