Monday, May 14, 2018

அடங்கி விடும் ஊரும், அடக்கம் ஆகும் உறவுகளும்

Thu 1/1/2015, 

சமீபகாலமாக நம்மைச் சுற்றி கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் பல சமூக விரோத செயல்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதற்கு, வேலைவாய்ப்பின்மை, வறுமை, வறட்சி என்பன போன்ற பல்வேறு விதமான காரணங்கள் கூறப்பட்டாலும், அடிப்படை காரணம் என எடுத்துக் கொண்டால், அது மனித மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து தன் இயல்பை இழந்து வருவது தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

முதலில் கூட்டுக்குடும்பம் என்ற நம் கலாசாரத்தை கலைத்து, தனிக்குடும்பம் என்ற போர்வையில் நடமாட துவங்கினர். ஆனால், தற்போது அதையும் தக்க வைத்துக் கொள்ளாமல், பணி நிமித்தமாக கணவன் ஓரிடத்திலும், மனைவி ஓரிடத்திலும், பிள்ளைகள் விடுதியிலும் என, தனித்தனி தீவுகளாக உருமாறி வருகின்றனர். இதனால், குடும்ப உறுப்பினர்களுக்குள்ளேயே கூட சரியான புரிதல்கள் இல்லாமல், ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசாமல், வாழ்க்கையை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். மிஞ்சியிருக்கும் குடும்ப அமைப்புகளிலும், 'டிவி' எனும் அரக்கன் புகுந்து, நம் நேரத்தை விழுங்குவது மட்டுமின்றி, மன அழுத்தத்தையும், மனச்சிதைவையும் பரிசாக அளித்துக் கொண்டிருக்கிறான். 'டிவி'யில் மெகா தொடர்கள் எனும் நாடகங்கள், நம் வீட்டு நடுக்கூடத்தில் பயங்கரவாதத்தையும், பழி வாங்கும் மனப்போக்கையும் சத்தமில்லாமல் நம் மக்களின் மனதில் அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கிறது.

பொதுவாக, அடுத்தவன் பிள்ளை நன்கு படித்து வேலைக்கு செல்லும் போது, நம் பிள்ளையும் அதைப்போல் படிக்க வேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என, எண்ணுகிறோம். அடுத்தவன் வீடு வாங்கி விட்டாலோ, சொத்து சேர்த்தாலோ, அவனையே முன்னுதாரணமாகக் கொண்டு நாமும் வாழ்க்கையில் முன்னேற துடிப்போம்; இது மனித இயல்பு! ஆனால், இப்போது நாகரிகம் என்ற பெயரில் அடுத்தவனை பார்ப்பதையோ, அடுத்த வீட்டுக்காரருடன் பேசுவதையோ கூட தவிர்த்து விடுகிறோம். 'என் வீடு... என் உலகம்' என்ற ரீதியில் இயங்கிக் கொண்டிருக்கிறோம். நாம் பார்ப்பதெல்லாம் முழுக்க முழுக்க, 'டிவி' நிகழ்ச்சிகளை மட்டும் தான். அதைப் பார்த்து பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களின் தாக்கம் நம்முள்ளும் ஆக்கிரமிக்க துவங்கிவிடுகிறது. சாதாரண குடும்ப தொடர் என்ற பெயரில் வரும் நாடகங்களில் கூட அடிதடி, கொலை எனும் அரிவாள் கலாசாரம் காண்பிக்கப்படுகிறது. மாமியார் கொடுமை, மருமகளின் ஆணவம், நாத்தனாரின் சூழ்ச்சி, கணவனின் இருதார மணம், விடலைக் காதல் என, பல கற்பனைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இதைப் பார்க்கும் வயதானவர்கள் சிலர், நாடகங்களில் வருவதைப் போல் தன் மருமகளும் தன்னை ஒதுக்கி விடுவாளோ, நம் பிள்ளையை நம்மிடமிருந்து பிரித்து விடுவாளோ என, வீண் கற்பனை செய்கின்றனர். குடும்ப பெண்களோ, நாத்தனாரை எப்படி பழிவாங்குவது என்று யோசிக்கும் வீபரீதமும் நடக்கிறது.

பள்ளி செல்லும் பிள்ளைகளோ, தன் வயதையும், படிப்பையும் மறந்து, காதல் என்ற மாய வலையில் சிக்கிக் கொள்ள தயாராகின்றனர். இரண்டு மனைவி கலாசாரம் பற்றி சொல்லவே வேண்டாம். இப்படி குடும்பத்து நபர்களை குறி வைத்து தொடர்கள் நகர்த்தப்படுகின்றன. இதை, டி.ஆர்.பி., ரேட்டிங்கில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ள என்று, 'டிவி' சேனல்கள் நினைத்துக் கொள்கின்றனர். ஆனால், இதைப் பார்க்கும் நம் மக்களின் மனதில் ஏற்படும் பாதிப்புகள், நம் சமுதாயத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதை அறிவரா? அவர்கள் அறியவில்லை என்றாலும், நாம் உணர வேண்டியது அவசியம்.

தொடர்கள் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் நேரத்தில் உறவினர் கள் யாராவது வந்தால் கூட, அவர்களை கவனிக்க மனமின்றி செயல்படுகிறோம். ஏதோ ஒப்புக்கு சில வார்த்தைகள் பேசி, கடமைக்கு காபி, தண்ணீர் கொடுத்து அவர்களை வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கிறோம். தொலைபேசி அழைப்பு வந்தால், 'இந்த தொடரை மட்டும் தான் பார்ப்பேன்; இன்ட்ரஸ்டா பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாளைக்கு பேசுவோமா?' என கூறி, பேச்சை தவிர்க்கிறோம். வீட்டில் இருப்பவர்களுடன் கூட, யாரும், யாருடனும் முகம் கொடுத்து பேசாமல், தொடரில் மூழ்கி விடுகிறோம். இதுதான் இன்றைய நடைமுறை!

கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், மாலை வேளைகளில் குடும்ப பெண்கள் பலரும் ஒன்று கூடி, வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசி பொழுது போக்குவர். அப்போது, அவர்கள் வீட்டுக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து தெருவில் விளையாடுவர். இதனால், குழந்தைகளுக்கும், பிற குழந்தைகளுடன் கூடி விளையாடும் பண்பு, வெற்றி, தோல்விகளை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம், விட்டுக் கொடுக்கும் தன்மை ஆகிய பல நல்ல பண்புகள் வளர்ந்தன. பெண்களுக்கும் தம் குடும்பத்தில் உள்ள கஷ்ட, நஷ்டங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதால் மன அழுத்தம் குறையவும், பிறரது அறிவுரைகளை, ஆலோசனைகளை கேட்டு, தம் மீதுள்ள தவறுகளை திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு கிடைத்தது. பெரியவர்களும் மாலை வேளைகளில் காலாற நடந்து, கோவிலுக்கு சென்று வருவர். இதன் காரணமாக தெருக்களில் மனித நடமாட்டமும், கலகலப்பும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும். ஆனால், இப்போது குழந்தை முதல், பெரியவர்கள் வரை அனைவருமே, 'டிவி'யே கதி என்று அமர்ந்து விடுவதால், தெருக்கள் வெறிச்சோடி விடுகின்றன. வாகனங்கள் விரைவது மட்டும் தெரிகிறது. ஊரும் சீக்கிரம் அடங்கி விடுகிறது; நம் உறவுகளும் கொஞ்சம் கொஞ்சமாய் விலகி, முற்றிலும் அடக்கமாகி விடுகிறது. அதனால் தான், சமுதாயத்தில் வன்முறைகள் அதிகரிக்கின்றன.

இ-மெயில்: sr.shanthi39@gmail.com

- எஸ்.ஆர். சாந்தி, சமூக ஆர்வலர்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024