உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார் என்று சொன்னால் நம்ப முடியுமா. ஆனால், அதுதான் உண்மை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் இல்லாதவர்களை இன்று விரல்விட்டு எண்ணிவிடலாம். 24 மணி நேரமும் செல்போன்களோடு பேசிக்கொள்ளுபவர்களாகப் பலர் மாறிவிட்டனர். செல்போன்களால் எந்தளவுக்கு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு ஆபத்தும் அதில் நிறைந்துள்ளது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் குடியிருக்கும் டாக்டர் ஹரீஷ் வழக்கை விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``டாக்டர் ஹரீஷ் கொடுத்த புகார் மற்றும் மிரட்டல் ஆடியோ அடிப்படையில் விசாரணை நடத்தினோம். டாக்டருக்கு வந்த மிரட்டல் போன் நம்பரை ஆய்வு செய்தோம். அந்த நம்பரின் முகவரி, சென்னை பாரிமுனை என்று தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று விசாரித்தோம். அந்த நபர், மிரட்டலுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார். இதனால் நாங்கள் குழப்பமடைந்தோம். இதையடுத்து அந்த நபரிடம் விசாரித்தபோது தாம்பரத்தில் சிம் கார்டு வாங்கிய விவரத்தை எங்களிடம் தெரிவித்தார். உடனே தாம்பரத்துக்குச் சென்று விசாரித்தோம்.
மேலும், சிம்கார்டை விற்ற நபர் தெரிவித்த தகவல் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் சிம் கார்டுகளை விற்க இலக்கு நிர்ணயிக்கிறது. இதற்காக சிம்கார்டு விற்பவர்கள், சிம்கார்டு வாங்க வருபவர்கள் கொடுக்கும் போட்டோ, முகவரி சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியாமல் அவரின் பெயரில் சிம் கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டுகின்றனர். தற்போது ஆதார் விவர அடிப்படையில்தான் சிம்கார்டுகள் விநியோகிக்கப்படுகின்றன. இதனால் ஆதார் எண்ணைத் தெரிவித்ததும் கைரேகை பதிவு செய்யப்படுகிறது. அப்போது, சரியாக கைரேகை பதிவாகவில்லை என்றுகூறி ஒன்றுக்கு மேற்பட்ட சிம்கார்டுகளை விற்றதுபோல கணக்கு காட்டப்படுகிறது. இந்த சிம்கார்டுகள்தான் சமூக விரோத கும்பலுக்கு விற்கப்படுகிறது. அப்படிப்பட்ட சிம்கார்டுகளை வாங்கும் நபர்கள், அதைச் சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.
டாக்டரை மிரட்டிய இன்ஜினீயர்கள் முருகனும் பாலாஜியும் இந்த முறையில்தான் சிம்கார்டுகளை வாங்கியுள்ளனர். ஒருவருக்குத் தெரியாமல் அவரின் பெயரில் உள்ள சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துவது தொடர்ந்தால் அது, பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். இதே நிலை நீடித்தால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர்களைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்படும். தற்போது இந்தவகையில், சென்னையில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதிலும் ஒருவரின் பெயரில் மட்டும் இரண்டுக்கு மேற்பட்ட சிம்கார்டுகள் உள்ளன. அதுதொடர்பாகச் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு புகார் தெரிவித்துள்ளோம்" என்றனர்.
இதுகுறித்து செல்போன் நிறுவனங்கள் கூறுகையில், "இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதைத் தடுக்கத்தான் சிம்கார்டு வாங்கியதும் நாங்களே சம்பந்தப்பட்டவர்களிடம் போனில் விசாரணை நடத்துகிறோம். அதன் பிறகுதான் அந்த சிம்கார்டை பயன்படுத்த முடியும். சிம்கார்டு விற்பவர்களின் உதவியில்லாமல் இதுபோன்ற தவறுகள் நடக்கவாய்ப்பில்லை. போலீஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இருப்பினும் அத்தகைய சிம்கார்டுகளைக் கண்டறிவதில் பல சிரமங்கள் உள்ளன" என்றனர்.
இதுகுறித்து நேஷனல் சைபர் சேஃப்டி அண்டு செக்யூரிட்டி ஸ்டாண்டர்டு என்ற தனியார் நிறுவனத்தின் பொது இயக்குநர் அமர்பிரசாத் ரெட்டி கூறுகையில், "ஆதார் எண் அடிப்படையில்தான் சிம்கார்டுகள் கொடுக்கப்படுகின்றன. சிம்கார்டு வாங்கும் நடைமுறையில் அரசு கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. ஆதார் அடிப்படையில் சிம்கார்டுகளைப் பெறும்போது உங்களின் மொபைல் நம்பருக்கு எஸ்.எம்.எஸ் வரும். ஒன்றுக்கும் மேற்பட்ட எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் சிம்கார்டு வாங்குபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சிம்கார்டு விற்பவர்களையும் மத்திய அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். டிஜிட்டல் இந்தியாவில் இதுபோன்ற தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க டிராய் (TRAI) அமைப்பும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு ஆதார் எண்களைப் பயன்படுத்துவோருக்கு அதுதொடர்பான தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்"என்றார்.