Wednesday, May 16, 2018

வேலூரைத் தாண்டி அதிக வெயில் அடிக்கும் மாவட்டமாகிறது கரூர்! காரணம் என்ன?
துரை.வேம்பையன்

RAJAMURUGAN N

வேலூர் என்றால் ஜெயில் எவ்வளவு பிரசித்திப் பெற்றதோ, அதற்கு அடுத்து, `வெயில் அதிகம் அடிக்கும் மாவட்டம்' என்பதற்கும் பிரசித்திப் பெற்ற மாவட்டமாக இருக்கும். ஆனால், வேலூரைப் பின்னுக்குத் தள்ளி அதிகம் வெயில் அடிக்கும் மாவட்டமாக கரூர் உருமாறிக் கொண்டிருப்பதாக கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகளே வந்து கரூரில் வெயில் பற்றி ஆய்வு செய்துவிட்டுப் போகிறார்கள். மக்களை வியர்வை வெள்ளத்தில் தள்ளும் இந்த வெயில் கொடுமைப் பற்றி விசாரித்தோம்.



தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் கரூர், தொழில் நகரம் ஆகும். இங்கே காவிரி ஓடினாலும், செழுமையான விவசாயம் நடப்பதில்லை. காரணம், இந்த மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருக்கிறது. சுண்ணாம்பு மண் நிறைந்த மாவட்டம் என்பதால், இயற்கையாகவே இங்கு மானாவாரி நிலங்கள் அதிகம். இங்கு பல தொழிற்சாலைகள் உள்ளன. அதனாலும், இங்கு வெப்பம் அதிகம். வேலூரைக் காட்டிலும் இந்த மாவட்டத்தில், குறைந்தபட்சம் 100 டிகிரியில் தொடங்கி அதிகபட்சம் 110 டிகிரி வரை இங்கே வெயில் வாட்டி எடுக்கிறது. குறிப்பாக இந்த மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதியில்தான் அதிக வெப்பம் பதிவாகிறது. இதனால் மக்கள் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். அதீத வெயிலினால், பலருக்கும் மயக்கம், சுருண்டு விழும் நிகழ்வுகள், தலைச்சுற்றல் போன்ற பிரச்னைகள் அடிக்கடி ஏற்பட ஆரம்பித்துள்ளன.



இதுபற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் தீபம் சங்கரிடம் பேசினோம்.

``பொதுவாக ஒரு நிலப்பரப்பில் 33 விழுக்காடு மரங்கள், காடுகள் இருந்தால்தான் அந்தப் பகுதி செழிப்பாக இருக்கும். வெப்பம், வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளைத் தாங்கும் தன்மையோடு அந்தப் பகுதி இருக்கும். ஆனால், கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் வெறும் 4 விழுக்காடுதான் மரங்கள் கொண்ட பகுதியாக உள்ளது. அதிலும், கடவூர் ஒன்றியத்தில் 2 விழுக்காடு அளவிலேயே மரங்கள் இருக்கின்றன. மீதம் உள்ள 2 விழுக்காடு மரங்கள்தாம் கரூர் மாவட்டம் முழுவதும் உள்ளது. இதனால்தான், இங்கே வெப்பம் வேலூரைத் தாண்டி, நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இந்த மாவட்டத்தில் வெப்பம் அதிகரித்ததற்குக் காரணம் இங்கு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவதுதான். இங்குள்ள செட்டிநாடு சிமென்ட் ஆலையின் 2 யூனிட்டுகள், புகழூர் சர்க்கரை ஆலை, டி.என்.பி.எல் ஆலை, க.பரமத்தி ஒன்றியத்தில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோலிய நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு என்று இங்குள்ள தொழிற்சாலைகள் இயற்கைச் சூழலைச் சிதைத்து, வெப்பத்தை அதிகரிக்க வைத்துவிட்டன. காற்றாலைகளை அமைத்து மின்சாரம் எடுக்கிறார்கள். அதோடு க.பரமத்தி ஒன்றியத்தில்தான் அதிக வெயில் அடிக்கிறது. இங்கு மத்திய அரசுக்குச் சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் அமைந்துள்ளது. இங்கிருந்து பத்துக்கும் மேற்பட்ட உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதுவும் இங்கு வெப்பம் அதிகரிக்கக் காரணம். கடந்த வருடமே இங்கு 110 டிகிரி செல்சியஸில் வெப்பம் பதிவாக, அதிர்ந்துபோன சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் இங்கு வந்து, `அதிக வெப்பத்துக்குக் காரணம் என்ன?' வென்று ஆய்வு பண்ணிட்டுப் போனாங்க. இந்த ஒன்றியத்தில் ஆயிரக்கணக்கான கல்குவாரிகள் இருப்பதும் வெப்பம் அதிகரிக்கக் காரணமாக இருக்கு" என்றார்.



அடுத்துப் பேசிய, க.பரமத்திப் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி புள்ளியான ராஜ்குமார்,

``இங்கு ஓடும் காவிரியில் கணக்குவழக்கில்லாமல் மணலை அள்ளி, நிலத்தடி நீரை அதலபாதாளத்துக்கு அனுப்பிவிட்டார்கள். அதுவும் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இங்கு வெப்பம் அதிகரிப்பதை முன்கூட்டியே உணர்ந்த மாவட்ட நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே மரங்கள் நடுவதற்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தியது. அதன் பலனாகவே, வெறும் 2 விழுக்காடாக இருந்த மரங்களின் எண்ணிக்கை 4 விழுக்காடாக உயரந்தது. இல்லையென்றால், கரூரின் வெப்ப அளவு இன்னும் அதிகமாகி இருக்கும். இங்கு அரசு நிலங்களை விட தனியார் நிலங்களே அதிக அளவில் தரிசாகக் காணப்படுகிறது. நீர் ஆதாரம் இல்லாததால்தான், இந்த நிலங்கள் தரிசாக உள்ளன. அதனால், அந்த இடங்களில் மரங்கள் நடுவதற்கு அரசே, வழிகாட்ட வேண்டும். வீட்டுக்கு வீடு மரங்கள் நடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் தற்போது இருக்கும் தொழிற்சாலைகளைக் கணக்கிட்டால், 50 விழுக்காடு மரங்களாவது இந்த மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான், இங்கு வெப்ப அளவு குறையும். இங்கு மெள்ள மெள்ள அதிகரித்த வெப்பம் இப்போது, வேலூரைத் தாண்டி முதலிடத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்தடுத்த வருடங்களில் கரூரின் வெப்ப அளவு இன்னும் அதிகரித்து, இங்கு மக்கள் வாழ முடியாத சூழலை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, அதிகரிக்கும் வெப்பத்தைக் குறைக்கும் பொருட்டு இங்கே மரங்கள் நடுவதற்கு போர்க்கால அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். ஆனால், இதே நிலை நீடித்தால், இன்னும் 10 வருடங்களில் கரூரின் வெப்ப அளவு 120 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வாய்ப்பு இருக்கிறது. அப்போது கரூரைப் பாலைவனப் பகுதியாக அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்" என்று எச்சரித்து முடித்தார்.

இதுபற்றி, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகனிடம் பேசினோம்.



``கரூரில் வெப்பம் அதிகரிக்கவில்லை. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் அடிக்கும் வெப்பம் போலதான் இங்கும் அடிக்கிறது. ஆனால், இருக்கும் வெப்பத்தைக் குறைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டுக்கொரு நொச்சி மரம் என்ற திட்டம் மூலம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் நொச்சி மரத்தை வளர்த்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறோம். இதுபோக, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரூரை பசுமை மாவட்டமாக மாற்றும் அனைத்துக் காரியங்களிலும் கரூர் மாவட்ட நிர்வாகம் செவ்வனே செயல்பட்டு வருகிறது" என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024