Wednesday, May 16, 2018

'பன்முக வித்தகர்' பாலகுமாரன்

Added : மே 16, 2018 01:35



எழுத்து, சினிமா, ஆன்மிகம் என பல துறைகளிலும் முத்திரை பதித்தவர் பாலகுமாரன், கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என, 270க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். யோகா, தியானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

தஞ்சை மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரியில் 1946 ஜூலை 5ல் பாலகுமாரன் பிறந்தார். இவரது தாய் சுலோசனா, தமிழாசிரியை. பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர், தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று, தனியார் நிறுவனத்தில் 1969ல் சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். அப்போது, கவிதைகள் எழுதத் தொடங்கினார். அதில், சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின், பணியில் அதிகாரியாக உயர்ந்தார்.

திரைத்துறையில் பணியாற்றுவதற்காகத் தன் வேலையைத் துறந்தார். நுாறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இயக்குனர் பாலசந்தரிடம் மூன்று திரைப்படங்களிலும், பாக்யராஜிடம் சில படங்களிலும் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். பின், 'இது நம்ம ஆளு' படத்தை பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

இவர் எழுதிய 'மெர்க்குரி பூக்கள்', 'இரும்புக் குதிரைகள்' 'தாயுமானவன்' நாவல்கள் புகழ்பெற்றவை. 'இரும்பு குதிரை' நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. 'எழுத்துச் சித்தர்' என போற்றப்பட்ட இவர், தனது கதைகளில் அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார். யோகா, தியானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

ரஜினி நடித்த 'பாட்சா' படத்தில், 'நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி' என்ற 'பஞ்ச்' வசனம், பாலகுமாரன் எழுதியது. 'நாயகன், குணா, ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முகவரி' உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

ராஜராஜ சோழன், தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து எழுதிய 2,733 பக்கங்கள் கொண்ட சரித்திரப் புனைக்கதையான, 'உடையார்' நாவல் மிக பிரபலம். இதுவரை 12 பதிப்புகள் வெளிவந்துள்ளன. இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் திரைப்பட விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

மனித எண்ணத்தை பிரதிபலித்தவர் பாலா: எழுத்தாளர்கள் புகழாரம்

தமிழ் படைப்புலகில் வாசகர்களின் பேரன்பைப் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன். இலக்கிய உலகிலும், திரை உலகிலும் இவரது பங்களிப்புகள் பெரிது. அவரது இழப்பு வாசகர்களின் மனங்களிலும் ஒரு பெரும் வெற்றிடத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மரணத்தை வென்றவர் :

மரணத்தை வென்றவர் பட்டியலில் பாலகுமாரனுக்கு இடம் நிச்சயம். அவரது உடலுக்கு வேண்டுமானால் மரணம் இருக்கலாம். அவரது புகழுக்கு மரணம் என்பதே கிடையாது. பாலகுமாரன் பேனா, எழுத்து, புத்தகங்கள் மூலம் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். எழுத்துக்கள், புத்தகங்கள் மூலம் அவர் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார். அவரது மரணம் எழுத்துலகிற்கு பேரிழப்பு.
-கே.பாக்யராஜ், சினிமா இயக்குனர்

எழுத்துக்களால் வென்றவர் :

பாலகுமாரன், எண்பதுகளில் தமிழ் வாசகப் பரப்பை விஸ்தரித்த எழுத்தாளர்களில் முதன்மையானவர். தன் பிற சகாக்களைப் போல அல்லாமல் எழுத்தை முழு நேரத் தொழிலாக கொண்டு அதில் வென்று காட்டினார். அந்த காலத்தின் தமிழ் நடுத்தர வர்க்கத்து உட்குரலாக பாலாவின் கதைகள் ஒலித்தன. அதுவரை உற்று நோக்கப்படாத சாமானியர்களை, கூட்டங்களுக்கு நடுவே கைபிடித்து அழைத்து வந்து தன் கதாபாத்திரங்களாக்கினார்.

நட்பு, பாசம், காதல், அன்பு என்பனவற்றை எல்லாம் உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டின் கூட்டுத் தேடலாக முன்நிறுத்தினார். பெண் மனதை ஆழ்ந்து சாட்சியப்படுத்துகிற எழுத்துகளுக்காக அவர் கொண்டாடப்பட்டார். வாசித்தவர்கள் அவரது பல கதாமாந்தர்களை தமது வாழ்வுகளுக்கு தேடச் செய்தது பாலகுமாரனின் தனித்துவம். எழுத்தாளன் என்பதை தாண்டி ஒரு ஆசிரியனுக்கு உண்டான பொறுப்புடன் எவை மீறல்கள், எவை வெற்று ஜம்பங்கள் என்பதை அவரது கதைகள் அலசியதால், பலரும் அவரைத் தமது வழிகாட்டியாகவே உயர்த்திக் கொண்டனர்.

சினிமா வசனகர்த்தாவாக ஒரு முகமும், புராணங்கள் உபகதைகள் வழியாக ஆன்மிகத்தின் வேர்களை சாட்சியப்படுத்தும் நெடுநாவல்களின் ஆசிரியராக மறுமுகமும் கொண்டார். 'உடையார்' உள்ளிட்ட பல படைப்புகள் பெருங்கவனம் ஈட்டின. பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு மாபெரும் இழப்பு.
-ஆத்மார்த்தி, எழுத்தாளர்

உளவியலில் கெட்டிக்காரர் :

பாலகுமாரன் எங்கள் தலைமுறைக்கு ஒரு மூத்த சகா. எங்களை விட வயதில் பெரியவராக இருந்த போதும், எங்களுக்கு இணையாக அவர் களத்தில் நின்றவர். பெண்களின் உளவியல் தெரிந்து எழுதியதில் மிகப் பெரிய கெட்டிக்காரர். மனித மனதின் எண்ண ஓட்டங்களை அழகாக சொல்பவர். பலம், பலவீனம் இரண்டையும் அழகாக சொல்லக்கூடியவர். அப்படி சொல்லும் விதம் தான் அவருக்கு அதிக வாசகர்களை தந்தது. அடுத்தது அவரது நாவல் தலைப்புகள். அவை ஒவ்வொன்றும் கவித்துவமாக இருக்கும். 'மெர்க்குரி பூக்கள்', 'திருவடி தாமரை' இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.

தைரியமாக உறவுச் சிக்கலை சொன்னவர். தனது ஆன்மிகத்தை பட்டவர்த்தனமாக படைப்புகள் மற்றும் நடைமுறை வாழ்க்கையில் வெளிக்காட்டிக் கொண்டவர். எந்த சார்பும் இல்லாமல், எதைப் பற்றியும் அச்சமில்லாமல் வாழ்ந்தவர். பலவீனங்களை தைரியமாக அணுகி பேசியவர். போலியான தன்மை இல்லை. மனதில் பட்டதை தைரியமாக பேசியவர்.

திரைப்படத்துறையிலும் ஒரு சாதனையாளர். பத்திரிகை துறையில் எழுதி திரைக்கு வந்து, பிரபல இயக்குனர்கள், இளம் கதாநாயகர்களோடும் பணிபுரிந்துள்ளார். சினிமாவும், எழுத்துத்துறையும் வேறு வேறு. சினிமாவிற்கு ஏற்ப தன்னை மாற்ற வேண்டும். அப்படி இருந்தும் தனது சுயத்தை இழக்காமல் செயல்பட்டவர்.

'நான் ஒரு தடவை சொன்னா...நுாறு தடவை சொன்ன மாதிரி', 'நான் சத்திரியன் இல்லை, சாணக்கியன்' இப்படி இவரது பல சினிமா வசனங்கள் பேசப்பட்டவை. அவரது இறப்பு எங்களுக்கும், எழுத்து துறைக்கும் பெரும் இழப்பு.
-இந்திரா சவுந்தர்ராஜன், எழுத்தாளர்

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...