Friday, January 26, 2018

தைப்பூச ஜோதி தரிசனத்துக்கு உரிய வசதிகள் செய்ய உத்தரவு

Added : ஜன 25, 2018 23:01

சென்னை: கடலுார் மாவட்டம், வடலுாரில், தைப்பூச ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்காக, அடிப்படை வசதிகளை மேற்கொள்ளும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினத்தை சேர்ந்த, செல்வகுமார் என்பவர், உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில், வரும், ௩௧ம் தேதி நடக்க உள்ள ஜோதி தரிசனத்துக்காக, வடலுாருக்கு வரும் பக்தர்களுக்கு, அடிப்படை வசதிகளை செய்து தர, மவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடும்படி கோரியிருந்தார். இந்த கடிதத்தை, உயர் நீதிமன்றம், வழக்காக விசாரணைக்கு எடுத்தது.

தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத் துறை சார்பில், சிறப்பு பிளீடர், மகாராஜா ஆஜராகி, ''பக்தர்களின் வசதிக்காக, ௫௦௦ கழிப்பறை மற்றும் குளியல் அறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வரும், ௨௭ம் தேதி நடக்கும் கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் அதிகாரிகள், அறநிலைய துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பக்தர்களின் வசதிக்கான ஏற்பாடுகள் குறித்து, இதில் விரிவான முடிவு எடுக்கப்படும்,'' என்றார்.

சிறப்பு பிளீடரின் வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தைப்பூச ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் வசதிக்கு, உரிய ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிட்டனர்.


நெல்லுக்கு பதில் உமி மோசடி : ராஜபாளையம் மில் அதிபர் கைது

Added : ஜன 25, 2018 23:41

திருநெல்வேலி: குடோன்களில் நெல் மூட்டைகளுக்கு பதிலாக உமிமூட்டைகளை வைத்து ஒரு கோடியே 18 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடிசெய்த ராஜபாளையம் தொழிலதிபர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொத்தை தெருவை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ் என்ற அர்ஜூன் சந்துரு. மில் அதிபர். இவர் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள குடோன்களில் நெல் மூட்டைகளை சேமித்துவைத்திருப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து தென்காசி ஐ.டி.பி.ஐ., வங்கியில் ஒரு கோடியும், சங்கரன்கோவில் கரூர் வைஸ்யா பாங்கில்ரூ. 18 லட்சமும் கடன் பெற்றுள்ளார்.

இவரது ஆவணங்களின் அடிப்படையில் குடோன்களில் தணிக்கை அதிகாரி வெர்ஜின் பிரின்சஸ் ஆய்வு செய்தார். அதில், குடோன்களில் நெல்மூட்டைகளுக்கு பதில் உமிமூட்டைகள் இருந்தன. அதிர்ச்சியடைந்த அவர் மோசடி குறித்து எஸ்.பி., அருண்சக்திகுமாரிடம் புகார் அளித்தார்.
மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், வெங்கடேஷ் என்ற அர்ஜூன் சந்துரு, அவரது கூட்டாளிகள் முக்கூடலை சேர்ந்த சுரேஷ், சங்கரன்கோவில் குடோன் அதிபர் குபேந்திரராஜ், சுரண்டை மாயகிருஷ்ணன், ராஜபாளையம் காளிரத்னம் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அர்ஜூன் சந்துரு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
அரசு டாக்டர்கள் போராட்டம்

Added : ஜன 25, 2018 23:26

சென்னை: தமிழகத்தில் உள்ள, அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 1,225 மருத்துவ பட்ட மற்றும் டிப்ளமா மேற்படிப்பு இடங்கள் உள்ளன.
இதில், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை காரணம் காட்டி, இந்த ஒதுக்கீட்டை, சென்னை உயர் நீதிமன்றம், 2017ல் ரத்து செய்தது. மீண்டும் ஒதுக்கீடு கோரி, அரசு டாக்டர்கள், பல கட்ட போராட்டங்களை நடத்தியும், எம்.சி.ஐ., விதிப்படியே, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தது. அதில், அரசு டாக்டர்கள், அதிக இடங்கள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு கோரி, தமிழக முழுவதும் உள்ள அரசு டாக்டர்கள், நேற்று, பணியின் போது, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.

அரசு டாக்டர்கள் கூறியதாவது: அரசு டாக்டர்கள், முதுநிலை மருத்துவம் படித்தாலும், தொடர்ந்து, அரசு மருத்துவமனைகளில், மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். எனவே, ரத்து செய்யப்பட்ட, 50 சதவீத இட ஒதுக்கீட்டை, மீண்டும் செயல்படுத்த வேண்டும். 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தேசிய மருத்துவ ஆணைய மசோதவை திரும்ப பெற வேண்டும்.
நீட்' தேர்வு கருத்தரங்கு தினமலர் நடத்துகிறது

Added : ஜன 25, 2018 23:41

மதுரை: எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான 'நீட்' நுழைவு தேர்வுக்கு வழிகாட்டும் கருத்தரங்கு, தினமலர் சார்பில் மதுரையில் நாளை மறுநாள் (ஜன.,28) நடக்கிறது.பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 வரை நடக்கும் கருத்தரங்கில் அனுமதி இலவசம்.
‘ஸ்மார்ட் கார்டு’ இருந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் கிடைக்கும் மார்ச் 1-ந்தேதி முதல் அமல்





‘ஸ்மார்ட் கார்டு’ இருந்தால் மட்டுமே மார்ச் 1-ந் தேதிக்கு பிறகு ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். #smartcard #TamilNadu

ஜனவரி 26, 2018, 05:45 AM

சென்னை,

தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 96 லட்சத்து 84 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் (ரேஷன் கார்டு) உள்ளனர். இவர்களுக்கு, பொது மற்றும் சிறப்பு பொது வினியோகத் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகிறது.

விலையில்லா அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, மண்எண்ணெய் ஆகியவை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 6 கோடியே 76 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு ரேஷன் கார்டுகள் புதிதாக அச்சிடப்பட்டு வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் உள்தாள் மட்டுமே இணைக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டுகளாக ஒரே அட்டை பயன்பாட்டில் இருந்ததால், அவை கிழிந்து மோசமான நிலையில் இருந்தது.

இந்த நிலையில், ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் புதிதாக ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதாவது, ரேஷன் கார்டுகளை நவீனமாக்கும் வகையிலும், போலி கார்டுகளை ஒழிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தப் பணிகளுக்காக ரூ.330 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

அதன்பின்னர், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணையும் ரேஷன் கடை ஊழியர்களிடம் வழங்க அறிவுறுத்தப்பட்டனர். இந்த நிலையில், ‘ஸ்மார்ட் கார்டு’ அச்சிடும் பணி தொடங்கியது. ஓரளவு ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதே நேரத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி 100 சதவீதம் நிறைவடையும் வரை, பழைய ரேஷன் கார்டுகளுக்கும் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுவரை ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேருக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆதார் எண்ணை பதிவு செய்யாத 5 லட்சம் பேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. இந்த நிலையில், இம்மாதம் (ஜனவரி) 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்க அரசு முடிவு செய்தது. ஆனால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி அதற்குள் முடிவடையாததால், கால அவகாசம் வழங்க வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டது. வருகிற பிப்ரவரி மாதம் 28-ந் தேதியை அதற்கான கால அளவாக அரசு நிர்ணயித்துள்ளது.

எனவே, மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான அறிவிப்பை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று வெளியிட்டார். இது தொடர்பாக, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பழைய ரேஷன் கார்டுக்கு பதில் புதிய நவீன ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 90 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுவிட்டது. 5 சதவீதம் பேருக்கு கார்டுகள் வழங்கும் பணி நடக்கிறது. 5 லட்சம் பேர் இன்னும் ஆதார் எண்ணை வழங்காததால், அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பல மாதங்களாக வாய்ப்பு கொடுத்தும் ஆதார் எண்ணை அவர்கள் இணைக்காமல் உள்ளனர்.

வரும் மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதுவரை, ஆதார் எண் வழங்காதவர்களுக்கு மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அப்போதும் அவர்கள் ஆதார் எண்ணை வழங்காவிட்டால், அந்த கார்டுகள் அனைத்தும் போலியானவை என்று அறிவிக்கப்பட்டு, ரத்து செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால், அரசுக்கு ரேஷன் பொருட்கள் வாங்கும் செலவு மிச்சப்படும். இதன் மூலம் மற்றவர்களுக்கு கூடுதலாக உணவுப் பொருள் வழங்க முடியும்.


இவ்வாறு அவர் கூறினார்.
பொறியியல் கல்லூரிகளின் தற்போதைய நிலை




தமிழ்நாட்டில் பல குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதற்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு காரணமாகும்.

ஜனவரி 26 2018, 03:00 AM

தமிழ்நாட்டில் பல குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதற்கு பொறியியல் கல்லூரிகளும் ஒரு காரணமாகும். கடந்த பல ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப புரட்சியாலும், உற்பத்தித்துறையின் முன்னேற்றத்தாலும், பொறியியல் பட்டதாரிகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டது. படித்து முடித்தவுடன் கைமேல் வேலை, பைநிறைய சம்பளம் என்ற வகையில், உடனடியாக நல்ல வேலை கிடைத்தது. இதனால் பிளஸ்–2 படித்து முடித்த மாணவர்களும், தங்கள் முதல் தேர்வாக பொறியியல் பட்டப்படிப்பையே விரும்பினார்கள். அவர்களின் பெற்றோர்களும் எவ்வளவு கஷ்டப்பட்டாவது பிள்ளைகளை பொறியியல் படிக்கவைத்துவிட்டால், வேலைகிடைத்தவுடன் அவர்கள் குடும்பத்தை காப்பாற்றிவிடுவார்கள் என்ற எண்ணத்தில் ஏழை குடும்பத்தினர்கூட தங்கள் வீட்டுபிள்ளைகளை பொறியியல் படிக்கவைத்தார்கள்.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஏராளமான பொறியியல் கல்லூரிகளை தனியார் தொடங்கினார்கள். பெரும் பொருட்செலவில் இந்த கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தற்போது 526 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்ததால் நிறையபேர் இந்த படிப்பை படிக்கத்தயங்கினார்கள். வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களும் ஒரு செமஸ்டரில் கூட தோல்வி அடையாத மாணவர்களையே வேலைக்கு எடுத்தார்கள். ஆனால், நமது கல்வித்திட்டத்தில் உள்ள குறைபாடுகளால், பிளஸ்–2 படித்த மாணவர்களால் அதற்குமேல் பொறியியல் கல்லூரியில் வந்து சேரும்போது, செமஸ்டரில் தோல்வி அடையவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள், அரசு ஒதுக்கீட்டில் உள்ள 1,75,500 இடங்களையும், நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 15,727 இடங்களையும் சரண்டர் செய்துவிட்டார்கள். 1,35,552 இடங்களுக்கு மட்டும் கவுன்சிலிங் நடந்தது. ஆனால், இதில் 86,355 இடங்களுக்கு மட்டும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்தநிலையில், பாராளுமன்றத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு ராஜாங்க மந்திரி தாக்கல் செய்த அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் உள்ள 526 பொறியியல் கல்லூரிகளில், 177 கல்லூரிகளில் 30 சதவீத இடங்களுக்கும் குறைவான மாணவர்கள்தான் சேர்ந்திருக்கிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே குறைந்த அளவு மாணவர்கள் சேர்ந்த கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடுதான் முதல் இடம் வகிக்கிறது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதியளவு மாணவர்கள் சேராததாலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை அரசு இன்னும் தராததாலும் கடுமையான நிதிபற்றாக்குறையில் தள்ளாடுகிறது. பொறியியல் கல்லூரிகளை, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றலாம் என்றால் அதற்கும் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் அனுமதி அளிப்பதில்லை. மூடுவதற்கு வேண்டுமானால் அனுமதி கொடுத்துவிடுகிறார்கள். இந்த சூழ்நிலையில், பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், படித்துமுடித்தவுடன் வேலை கிடைப்பதற்கு ஏற்றவகையில் அவர்கள் பாடத்திட்டம், பயிற்சிகள் மாற்றப்படவேண்டும். படிக்கும்போதே அவர்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், திறன்மேம்பாட்டு மையங்கள் அமைப்பதிலும் தொழில்கல்வி மையங்கள் அமைப்பதிலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இன்னும் வேகமாக செயல்படவேண்டும். நாட்டில் உற்பத்திப்பிரிவு குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை இன்னும் வேகமாக வளர்ச்சி பெற்றால்தான் பொறியியல் கல்வியை காப்பாற்ற முடியும்.

NEWS TODAY 14.06.2026